×

திருமால் வணங்கிய சிவதலங்கள்

* காஞ்சிபுரத்தில் திருமால் மீனாக மாறி சிவலிங்கத்தை பூஜை செய்தார். ஆகவே இந்த ஈசன், `மச்சேஸ்வரர்’ எனும் பெயரில் அருள்கிறார்.

* கும்பகோணத்தை அடுத்த தேவராயன்பட்டினம், முன்னாளில் சேலூர் என வழங்கப்பட்டது. `சேல்’ எனில் மீன் என்று பொருள். இத்தல ஈசனை மச்சாவதார மூர்த்தி வழிபட்டதால், இங்கு அருளும் மூர்த்தி மச்சேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.

* மந்தார மலையை ஆமை வடிவில் தாங்க சக்தி பெற திருக்கச்சூரில் எழுந்தருளியுள்ள ஈசனை `ஆமைமடு’ எனும் தீர்த்தத்தை உருவாக்கி திருமால் துதித்ததை, இத்தல விநாயகர் சந்நதி மண்டப விதானத்தில் புடைப்புச் சிற்பமாக தரிசிக்கலாம்.

* காஞ்சிபுரத்தில், அமுதம் கிடைத்த பின் ஆமை வடிவோடு திருமால் பூஜை செய்த கச்சபேஸ்வரர் திருக்கோயில் புகழ்பெற்றது. சென்னை திருப்போரூர் சாலையில் உள்ள செங்கண்மால் கிராமத்தில் அருளும் செங்கண்மாலீஸ்வரரை ஆதிவராஹமூர்த்தி வழிபட்டு பேறு பெற்ற நிகழ்வை கருவறை தெற்கு சுவரில் புடைப்புச் சிற்பமாக காணலாம். இத்தல தீர்த்தம் `சுவேதவராஹ தீர்த்தம்’ என்றே புகழ்பெற்றது.

* காஞ்சிபுரத்தின் அருகே உள்ள தாமல் கிராமத்தில் வராஹமூர்த்தி வழிபட்ட `வராகேஸ்வரர்’ திருவருள் புரிகிறார். அங்கேயே நரசிம்மர் வழிபட்ட ஈசன் `நரசிம்மேஸ்வரர்’ எனும் பெயரில் அருள்கிறார்.

* புதுச்சேரிக்கு அருகிலுள்ள வில்லியனூரில் உள்ள காமீஸ்வரரை நரசிம்மர் வழிபட்டு வரம் பெற்று அருகில் உள்ள சிங்கிரியில் தனிக்கோயில் கொண்டருள்கிறார்.

* கடலூருக்கு அருகில் உள்ள திருமாணிக்குழி திருத்தலம், வாமன வடிவில் திருமால் ஈசனை பூஜித்து நற்கதி பெற்ற தலமாகும். இத்தல ஈசன் `வாமனபுரீஸ்வரர்’ என்று வணங்கப்படுகிறார்.

* வாமனாவதாரத்தில் அசுரகுருவான சுக்கிரன் வண்டாக மாறியபோது அவர் கண்ணைக் குத்திய பாவம் தீர, திருமாலால் பூஜிக்கப்பட்ட ஈசன் திருமயிலையில் `வெள்ளீஸ்வரராக’ அருள்கிறார்.

* காஞ்சிபுரத்திற்கு அருகே வேகாமங்கலத்தில் பரசுராமர் பூஜித்த ஈசன் `பரசுராமேஸ்வரர்’ எனப்படுகிறார்.

* கும்பகோணத்திற்கு அருகே உள்ள திரிலோக்கி திருத்தலம் பரசுராமரால் வழிபடப்பட்ட பெருமை பெற்றது. அதனால், அத்தலம் பரசுராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

* ராமேஸ்வரத்தில் ராமபிரான் பூஜித்த ராமநாதரை தரிசிக்கலாம். பாரதமெங்கும் உள்ள பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் இந்த ராமநாத லிங்கமும் ஒன்று.

* திருச்சி மாவட்டம் மணலூர்ப் பேட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பைஞ்ஞீலியில் உள்ள சோமாஸ்கந்தமூர்த்தி திருமாலுக்கு சக்கரம் அளித்தமையால்
`சக்கரத்தியாகர்’ என வணங்கப்படுகிறார்.

* வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரைக் குழகர் கோயிலில் உள்ள ஈசன் பலராமரால் வழிபடப்பட்டவர்.

* காஞ்சிபுரத்தில் கண்ணன் வழிபட்ட சிவத்தலம், `கண்ணேசர்’ எனும் பெயரில் அமைந்துள்ளது.

* கண்ணபிரான் ஈசனை வழிபட்ட தலம் ரைவதகிரியில் உள்ளது. இது வடுககிரி என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணன் வில்வ இலைகளால் ஈசனை அர்ச்சித்ததால், அந்த ஈசன் `வில்வேஸ்வரர்’ என்றானார்.

* திருமால் சக்ராயுதம் வேண்டி ஈசனை நோக்கி தவம் செய்த தலம் காஞ்சிபுரம் அருகே உள்ள திருமாற்பேறு. திருவானைக்காவலில் ராமர் தீர்த்தம் அமைத்து வழிபட்டார். அவர் நிறுவிய லிங்கம் `விஷ்ணுவேஸ்வரர்’ ஆலயம் எனப் போற்றப்படுகிறது.

* திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் பெரிய ரங்கநாதரை, கோவிந்தராஜர் எனும் பெயரில் தலைமாட்டில் உள்ள சிவலிங்கமூர்த்தியை பூஜை புரியும் நிலையில் தரிசிக்கலாம்.

* மன்னார்குடிக்கு அருகில் உள்ள திருராமேஸ்வரத்தில் ராமர் பூஜித்த ராமலிங்கத்தையும், சீதை பூஜித்த சீதேஸ்வரரையும் தரிசிக்கலாம். தசாவதாரங்களில் ராமாவதாரத்திற்கே மனைவி பெயரில் லிங்கம் நிறுவிய பெருமை கிட்டியது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post திருமால் வணங்கிய சிவதலங்கள் appeared first on Dinakaran.

Tags : Thirumal ,Kanchipuram ,Shiva Lingam ,Eason ,`Macheswarar ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...