×

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

* மகாலட்சுமியின் தவத்திற்கு இணங்கி நடராஜப் பெருமான் ஆடிய லட்சுமி தாண்டவ திருக்கோலத்தை திருப்பத்தூர் மாவட்டம் திருத்தளியில் தரிசிக்கலாம்.

* பத்துக் கரங்களுடன், இடது காலை ஊன்றி வலது உள்ளங்கால் தெரியும்படி அகத்தியருக்காக ஆனந்த தாண்டவமாடிடும் நடராஜரை நாகப்பட்டினத்தின் அருகில் உள்ள கீழ்வேளூரில் காணலாம்.

* திருவாரூரில், திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கேற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது.

* இவர் வீதிவிடங்கர் என்றும் இருந்தாடழகர் என்றும் போற்றப்படுகிறார்.

* பழநிக்கு அருகே கொழுமம் கோயிலில் ‘நித்தம் நின்றாடுவார்’ எனும் திருப்பெயரில் அக்னி பகவானுக்கு அருளிய நடராஜமூர்த்தியை தரிசிக்கலாம்.

* திருவாரூருக்கு அருகே உள்ள திருக்காறாயிலில் நடராஜரின் அம்சமாகிய ஆதிவிடங்கர் குக்குட நடனமாடுகிறார். சண்டைக்குச் செல்லும் கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்த்துப் பார்த்து முன்னேறி, நிதானித்து, சுழன்றும் ஆடும் நடனவகை இது.

* நாகப்பட்டினத்தில் சுந்தரவிடங்கர் ஆடுவது, பாராவாரதரங்க நடனம். பாராவாரம் எனில் கடல்; தரங்கம் எனில் அலைகள் கடலலை போன்று உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடும் நடனம் இது.

* திருநள்ளாறு கோயிலில் நாகவிடங்கர் ஆடும் நடனம்-உன்மத்த நடனம். பெருமான் பித்தனைப் போல் சுழன்றாடுவதால் இந்தப் பெயர்.

* திருவாரூர், கச்சனத்திற்கு அருகே உள்ள திருக்குவளையில் அவனி விடங்கர், பிருங்கி நடனம் ஆடுகிறார். பிருங்கி எனில் வண்டு. வண்டு பூவைச் சுற்றிப் பறந்து, உயர்ந்து, தாழ்ந்து, பின் பூவில் அமர்வது போன்ற நடனம் இது.

* நாகை, வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், அம்சபாத நடனம். அன்னப்பறவை அடி மேல் அடிவைத்து எழிலாக நடப்பது போலிருக்கும்.

* திருவாரூர், திருக்குவளைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவில் உள்ள திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம், கமல நடனம் ஆகும்.

* ஈசன் காலனை அழித்த பின் ஆடிய காலசம்ஹார தாண்டவத்தை மயிலாடுதுறைக்கு அருகே திருக்கடையூரில் தரிசிக்கலாம்.

* கஜ சம்ஹாரத்துக்குப் பின் பிட்சாடன வடிவில் ஈசன் கஜசம்ஹார நடனம் ஆடினார். இத்திரு வடிவம், மன்னர்குடி, வழுவூரில் ‘கரியுரி போர்த்த கடவுளா’க வணங்கப்படுகிறது.
* காளியின் கர்வத்தை அடக்க ஈசன் ஆடிய ஊர்த்துவ தாண்டவத்தை சென்னை, திருவள்ளூர் அருகே திருவாலங்காட்டில் தரிசிக்கலாம்.

* வாசுகி பாம்பிற்காக ஈசன் ஆடியது, வாசுகி அனுக்ரஹ நடனம். இவரை கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலயத்தில் ஓவியமாகக் காணலாம்.

* சிதம்பரத்தை அடுத்துள்ள ஓமாம்புலியூரில் வியாக்ரபாத முனிவருக்காக நடனமாடினார் நடராஜர். இங்குதட்சிணாமூர்த்தியும் நடராஜரும் இடம் மாறி வீற்றிருப்பது சிறப்பு.

* சிதம்பரம் நடராஜர் ஆலயத்தினுள் அவர் எழுந்தருளியுள்ள சிற்சபை, அதற்கு முன் உள்ள மகாமண்டபம் கனகசபை, இரண்டாம் பிராகாரத்தில் தேர் வடிவ நிருத்தசபை, உற்சவமூர்த்தங்கள் உள்ள தேவசபை, ஆயிரங்கால் மண்டபம் உள்ள ராஜசபை என்று பஞ்ச சபைகள் உள்ளன.

* ஈசன் பார்வதிக்கு ஆடிக் காட்டிய கௌரி தாண்டவத்தை திருவடிவை மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

* காளி தேவிக்காக ஈசன் ஆடியது காப்புத் திருநடனம் (ரட்சா தாண்டவம்). சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள கூவம் கோயிலில் பத்தாம் நாள் திருவிழாவின் போது இந்த நடனத்தை தரிசிக்கலாம்.

* சிதம்பரம் அருகிலுள்ள கூடலையாற்றூரில், ஈசன் பிரம்மனுக்கு தாண்டவ தரிசனத்தை தந்தருளியதால் நர்த்தனவல்லபேசர் என வணங்கப்படுகிறார்.

* ஈரோடு அருகே உள்ள கொடுமுடியில் சித்ரா பௌர்ணமியன்று பரத்வாஜ முனிவருக்காக ஈசன் ஆடிய நடனம், சித்திர நடனம் எனப்படுகிறது.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே appeared first on Dinakaran.

Tags : Nathane ,Lakshmi Tandava Thirukolam ,Thiruthali, Tirupattur district ,Lord Nataraja ,Mahalakshmi ,Nallirul ,
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்