×

முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

மாமருந்து அளித்துத் தீர்த்தும் வைகலும்
வரும் பக்தர்க்கு
தாம் அவர் உளம்கண்டு அன்னார் சார்துயர்
தவிர்த்துக் காத்தும்
நாமரூபங்கள் இல்லாத நாதனே
உருவம் கொண்டு
பூமிசைப் போந்தான் என்று புனிதர்
சொற்றிடவும் வாழ்ந்தார்.
– ஸாயிபாபா புராணம், பா.39.

தத்துவத்தின் அடிப்படை என்பது அந்தத் தத்துவம் காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைக் கொண்டுதான் அந்தத் தத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். தத்துவங்களின் வழியாக நாம் காலத்தை கொஞ்சம் அறிந்து கொள்ளலாம்.ஆதியும் அந்தமும் அற்று என்றும் நிலைத்திருக்கக்கூடிய தன்மையின் ஓர் உருவ வெளிப்பாடே (moving image of eternity) காலம் என்று பிளேட்டோ சொல்கிறார்.

இறைவன் உலகத்தையும் காலத்தையும் ஒன்றாகப் படைத்தார் என்பது தத்துவஞானி அகஸ்டியன் கூற்று. அவரே “காலம் என்பது என்ன? என்று யாராவது கேட்டால், அதை நான் அறிவேன், ஆனால் பிறர்க்கு அதை விவரிக்க நான் அறியேன்” (what is time? If anyone asks me, I know; If I wish to explain it to another, I know not) என்று காலத்திற்கு விளக்கம் தருகிறார். மேலும், காலமும், உலகமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்றும் கூறுகிறார்.

காலமும் இடமும் தொடர்ச்சியான ஒருங்கிணைந்த (Continuous Coordinations) தொடர் பரிமாணங்கள் (Serial dimensions) என்று குறிப்பிடப்படுகிறது. நவீன விஞ்ஞானத்தில் ஐன்ஸ்டைனின் சார்பில் தத்துவம் (Relativity Theory) இக்கருத்தை தெளிவாக விளக்குகிறது.தமிழ்நாட்டின் தொன்மையான தொல்காப்பியம் நிலத்தையும் காலத்தையும் முதற்பொருள் என்று கூறுகிறது.

‘‘முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே’’

காலங்காலமாக வரும் கருத்தின்படி அசைவற்ற இடத்தையும் அசையும் காலத்தையும் (Stillness of space and tread of time) ஆராய்ச்சியாளர்கள் இன்றும் ஆய்வு
மேற்கொண்டுள்ளனர்.இந்திய தத்துவ ஞானத்தில் காலம் ஒரு தத்துவம். காலம் என்பது இன்றி எச்செயலும் நடவாது. எதற்கும் காலம் நேரம் வரவேண்டும். இளவேனில் காலத்தில் மாமரம் தளிர்க்கிறது. கார்காலத்தில் முல்லை பூக்கிறது. பழமரங்கள் எல்லாக் காலத்திலும் பூத்துக் காய்த்து கனிகளைத் தருவதில்லை. அந்தந்தக் காலங்களில் பழம் பழுத்துப் பயன் தருவதைக் காண்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் ஒரு செயல் நடைபெறுகிறது.

‘‘அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா- தொகுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா’’
என்பது ஔவையாரின் மூதுரை.

உலகத்தில் உயிர்கள் ஒரு காலத்தில் தோன்றி ஒரு காலத்தில் மறைகின்றன. இருக்கின்ற காலத்தில் உலக போகங்களை அனுபவிக்கின்றன. எனவே, இவ்வுலகில் தோன்றிய அனைத்தும் காலத்திற்கு
உட்பட்டவையே. காலம் ஒவ்வொரு பொருளிலும் வேறு வேறாக உள்ளது. மேலும், அளவில் பெரிதும் சிறிதுமாய் உள்ளது. ஒருவரால் காலம் நெடியதாயும் மற்றொருவரால் காலம் குறுகியதாயும் உணரப்படுவதைக் காண்கிறோம். இவ்வாறு பொருள்தோறும் காலம் வெவ்வேறு அளவுடையது என்பது விளங்கும்.

இதுவரை கூறியவற்றால் காலத்தின் இன்றியமையாமை ஒருவாறு விளங்கும்.காலத்திற்கு நதியின் ஓட்டத்தை உதாரணமாகக் கூறுவார்கள். மூன்று காலங்களும் இணைந்தது. கடந்தது, இருப்பது, வருவது என்ற மூன்றையும் ஒரே நேரத்தில் அனுபவமாக அனுபவிக்க முடியும். நீரோட்டத்தில் ஓரிடத்தில் இருக்கின்ற நீரே எப்பொழுதும் நில்லாது, கணந்தோறும் வேறு வேறு நீரே வருதல் பற்றி, ஒரே நீரே அவ்விடத்தில் எப்பொழுதும் உள்ளது போலத் தோன்றுதல். இந்த நித்தத்தன்மையை ‘பிரவாக நித்தம்’ என்று தத்துவ அறிஞர் கூறுவர்.

சாக்ரட்ஸிக்கு முன்னால் கிரேக்க தத்துவஞானி ஹெராக்ளிட்டஸ் (Heraclitus) ‘‘No man ever steps is the same river twice for its not the same river and he’s not the same man’’ என்பார்.
கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானியக் கவிஞர் காமோனோசோமி (Kamo-no-chomei) தன்னுடைய ஹோஜோகி (Hojoki) என்னும் நூலை ஹெராக்ளிட்டஸின் சிந்தனையோடு தொடங்குகிறார். “The flowing river never steps and yet the water never stays the same”.தேசத்தாலும் காலத்தாலும் பிரிக்கப் படாதவள், தேச கால அபரிச்சின்னா (701) என்று அம்பாளை ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போற்றுகிறது. சில பொருட்கள் இந்த இடத்தில் தான் இருக்கின்றன, இந்த இந்த இடங்களில் இல்லை என்பது தேசத்தால் (இடத்தால்) பிரிக்கப்படுவதாகும்.

இதுபோல சில பொருட்கள் இந்தக் காலத்தில் தான் இருக்கின்றன, மற்ற காலங்களில் இல்லை என்பது காலத்தால் பிரிக்கப்படுவதாகும். அம்பிகை எங்கும், எப்பொழுதும் இருப்பவள். ஆகையால், காலம், இடம் மாதிரியான பாகுபாடுகளுக்கு உட்படாதவள் என்பது கருத்து. அதாவது, “முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்”.

‘‘நான் நுழைவதற்கு எனக்கு எவ்வித கதவும் தேவையில்லை. எனக்கு எவ்வித உருவமோ நீளமோ கிடையாது. எப்போதும் எங்கும் வசிக்கிறேன். என்னை நம்பு. என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மலாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்’’ என்பது பகவான் பாபா தன்னுடைய பக்தர் மேகாவிற்கு அருளிய அருள் மொழி.

‘‘எப்போதும், எங்கும்’’ என்ற அருள்மொழிகள் காலதேச வரையறையைக் கடந்த அதீத நிலையில் உள்ள பரம்பொருளின் நிலை. நாம ரூபங்கள் இல்லாத நாதனே உருவம் கொண்டு பூமிசைப் போந்தான்- ஷிர்டியில் அவதாரம் செய்தருளினான் என்பதை நாம் நன்கு உணரலாம்.

“மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கு நீத்த காரணன்-கை வில் ஏந்திச்
சூலமும் திகிரி சங்கும் கரகமுந் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளி்ப்பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்” (கம்ப.5884)
என்று அனுமன் இராமனைப் போற்றி உரைப்பன்.

ஷீர்டியில் மாலன்பாய் என்ற பக்தை காசநோயால் துன்பப்பட்டு வந்தாள். வேறு வழிகள் ஏதும் காணாத நிலையில் பாபாவின் பாதங்களைத் தஞ்சமடைந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினாள். பாபா அவளிடம், ‘வெறும் தண்ணீரை மட்டும் உணவாக எடுத்துக் கொள். ஒரு போர்வையை விரித்து அதன்மேல் படுத்துக்கொள்’ என்று கூறினார்.அதனால், கொஞ்ச நாளில் அவளுடைய உடல் மெலிந்து போனது.

நடக்க முடியாத நிலையிலும் பாபாவைத் தரிசிக்க வந்து தன்னைக் காக்கும்படி அழுது வேண்டினாள். அப்பொழுது பாபா, ‘‘அம்மா! நான் இங்கே இருக்கும் பொழுது நீ ஏன் கவலைப்பட வேண்டும்? உன்னை இறப்பதற்கு விட மாட்டேன். என் வார்த்தைகளை நம்பு. தைரியமாக இரு. காலதூதர்கள் உன்னை என்ன செய்ய முடியும்? நான் தான் உன்னைக் காப்பவன். அமைதியாக உன்னுடைய வீட்டிற்குச் செல். நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன்” என்று உறுதிமொழி கூறினார்.

ஒரு வாரம் கழிந்தது. பாபா ஷீர்டி சாவடியில் பக்தர்கள் முன் அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில் மாலன்பாய் இறந்து விட்டதாகத் தகவல் வந்தது. அப்பொழுது பாபா திடீரென்று தன் ஆசனத்திலிருந்து எழுந்தார். பிரளயகால ருத்ரரைப் போல இருந்தார். அவருடைய கண்கள் நெருப்புத் துண்டம் போல் சிவப்பாக மாறின. பற்களைக் கடித்துக் கொண்டு, உரக்கக் கர்ஜித்தார். தன்னுடைய கைத்தடியினால் காற்றில் யாரையோ அடித்தார். மற்ற பக்தர்கள் அதைப் பார்க்க முடியாமல் ஓடினர். பார்த்துக் கொண்டிருந்தவர்களும் நடுங்கினர். இந்நிலையில் சாவடியிலிருந்து கிளம்பிய பாபா காற்றில் தன் கைகளை அசைத்து எதையோ பிடித்து தன் கைக்குள் வைத்து மூடினார். அப்படியே மாலன்பாய் வீட்டிற்குச் சென்றார். அங்கே கிடத்தப்பட்டிருந்த மாலன்பாய் உடல் அருகே சென்று, உடலின் மேல் கைகளை விரித்துக் காட்டினார்.

உடனே, மாலன்பாய் உயிரோடு எழுந்தாள். இந்த அற்புத நிகழ்ச்சியைக் கண்ட அனைவரின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. “ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு சாயிநாத் மஹாராஜ் கி ஜெய்” என்று உரக்கக் கூவினர். பாபா அங்கு எதுவும் நிகழாதது போல மீண்டும் துவாரகமாயிக்குத் திரும்பினார்.உயிரோடு எழுந்த மாலன்பாயிடம் என்ன நடந்தது? என்று அங்கு கூடியிருந்தவர்கள் கேட்டனர். “கருப்பு உருவம் கொண்ட மனிதர்கள் என்னை இழுத்துக் கொண்டு போயினர். அப்பொழுது நான் பயத்தில் ‘பாபா’ என்று கத்தினேன். பயப்படாதே நான் வந்து கொண்டிருக்கிறேன் என்று பாபா வந்தார். அவர்களைச் சட்காவால் (பாபாவின் தண்டம்) அடித்து, அவர்களிடமிருந்து என்னை விடுவித்து, இங்கே கூட்டி வந்தார்” என்று சொன்னாள். அதைக் கேட்ட அனைவரின் இதயங்களும் மகிழ்ச்சியால் நிரம்பின.

இவ்வாறு ஷீர்டியில் மாலன்பாயை பாபா காப்பாற்றினார் (The immortal Lord ‘SAI’ is death to death itself). அதனால் தான் ஸ்ரீ சாயி அஷ்டோத்தர சத நாமாவளியில்
கடந்த கால, எதிர்காலங்களுக்கு அப்பாற்பட்டவர் (பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய), காலத்தைக் கடந்த நிலையில் இருப்பவர் (காலாதீதாய), காலமாக இருப்பவர் (காலாய), காலத்திற்கும் காலமாக இருப்பவர் (காலகாலாய), காலனுடைய அகந்தையை அழித்தவர் (கால தர்ப தமனாய) என்று பகவான் பாபாவை பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜீ போற்றுவர். “முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருளாய் இருப்பவர்க்கு நமஸ்காரம்”.

அப்பரம்பொருளுக்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மும்மைப் பாகுபாடுகள் கிடையாது.எங்கும் நிறைந்த நிகழ்காலமாய் இருத்தலே பரம்பொருளின் இயல்பு (Present is Omnipresent). இந்நிலையில் அப்பரம்பொருளை வர்த்தமானேஸ்வரர் (நிகழ்காலத்தின் கடவுள்) என்று தத்துவங்கள் குறிப்பிடும்.

‘‘முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழல்’’ (பரிபாடல்.13)

“மூன்று காலங்களையும் கடந்து நின்ற பரம்பொருளின் திருவடி” என்பது நல்லெழுதியார் எழுதிய பரிபாடல். இப்பாடலை நினைந்து பாபாவின் திருவடிகளைத்துதிப்போம்.

The post முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள் appeared first on Dinakaran.

Tags : Dr. ,A.Ve. Shantikumara Swami ,earth ,Nathane ,Annar Sartuyar ,
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!