×

சிறப்புகளைப் பெற்ற சிலப்பதிகாரம்!

ஐம்பெருங்காப்பியங்களில் முதலானது; பிற்காலத்தில் பல நூல்களுக்கு – முதலானது.உருவாக்கியவர் வரலாறு; சேரநாட்டு வஞ்சியை அரசாண்ட மன்னர் நெடுஞ்சேரலாதன். அவருக்கு இரண்டு பிள்ளைகள்; மூத்தவர் – செங்குட்டுவன், இளையவர் – இளங்கோ வேள். (இவர்தான் பிற்காலத்தில் ‘இளங்கோ அடிகள்’ எனப் பெயர் பெற்றவர்) இளங்கோவேள் சிறுவயதில் இருந்தே பேரறிவும், உத்தம குணங்களும் நிறைந்தவர்.ஒரு நாள்… சேரலாதன் தன் குமாரர்களுடன் அரச மண்டபத்தில் இருந்தபோது, ஜோசியர் ஒருவர் அங்கு வந்தார். வந்த ஜோசியர், இளவரசர்கள் இருவரையும் சற்றுநேரம் உற்றுப் பார்த்தார். அதன் பிறகு, மன்னர் பக்கம் திரும்பி, ‘‘மன்னா!

தவறாக நினைக்காதீர்கள்! விண்ணுலகை அடையும் காலம் நெருங்கிவிட்டது உங்களுக்கு. ‘‘இளவரசர்கள் இருவரில், இளையவரான இளங்கோவேள்தான் உங்களுக்குப் பின் அரசனாக ஆவான்’’ என்றார் ஜோசியர். அதைக் கேட்ட மூத்த இளவரசரான செங்குட்டுவன் முகம் மாறியது. அண்ணன் முகம் மாறியதைக் கண்ட இளங்கோவேள், பளிச் சென்று எழுந்தார்.
ஜோசியரைக் கோபத்துடன் பார்த்தார். அதன் பின்அவைப் பக்கம் திரும்பி, ‘‘இங்கிருக்கும் அனைவரும் அறிய ஒன்று சொல்கிறேன். அரசாளும் விருப்பத்தை மட்டுமல்ல! என் ஆசைகள் அனைத்தையும் நீக்கி, நான் துறவு மேற்கொள்கிறேன் இப்போதே!’’ என்று முழங்கினார்.

சொன்னபடியே அப்போதே துறவு பூண்டார். இளங்கோவேளாக இருந்தவர், இளங்கோ அடிகளாக அழைக்கப்பட்டார். இந்த இளங்கோ அடிகள் எழுதியதுதான் “சிலப்பதிகாரம்’’. இதுவரை பார்த்தது, பல ஆண்டுகள் காலமாக பள்ளிக் கூடப் பாட நூல்களிலும், பள்ளிக் கூடங்களில் சொல்லப்பட்டும் வந்த இளங்கோ அடிகள் வரலாறு. தமிழ் ஆராய்ச்சி யாளர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறு இது. இதற்கு மாறான ஆராய்ச்சிகளும் உண்டு. பெரும்புகழ் பெற்ற சிலப்பதிகாரத்தில் இருந்து சில முக்கியமான தகவல்களைப் பார்க்கலாம்.

தொடக்கமே சந்திர சூரியர்களையும்,
மழையையும் போற்றித் தொடங்குகிறது.
சந்திரனைப் போற்றுவோம்! சந்திரனைப்
போற்றுவோம்!

பூந்தாது சொரியும் மலர்மாலையை உடைய சோழமன்னரின் அருள் மிகுந்த வெண்கொற்றக் குடையைப் போல இந்த உலகில் குளிர்ச்சியான ஔியைப் பரப்புவதால், நாமும் அந்தக் குளிர்ந்த சந்திரனைப் போற்றுவோம்!
திங்களைப் போற்றுதும்! திங்களைப்
போற்றுதும்!

கொங்கு அலர்த் தார்ச்சென்னி
குளிர் வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்
ஞாயிறைப் போற்றுவோம்! ஞாயிறைப்
போற்றுவோம்!

காவிரி நாடனின் ஆணைச் சக்கரம் போல அழகான மலை முகடுகளை உடைய மேருமலையை, அதுவும் சுற்றி வலம் வருவதால் நாமும் அந்த ஞாயிறைப்
போற்றுவோம்!

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்
பெருமை நிறைந்த மழையைப் போற்றுவோம்! பெருமை நிறைந்த மழையைப் போற்றுவோம்! அச்சம் தரும் கடல்களால் வேலியாக உலகம் சூழப் பட்டிருந்தாலும்; சோழ மன்னரின் அருளைப்போல, தான் மேலே நின்று நீரைச்சுரந்து அனைத்து உயிரையும் வாழ்விப்பதால் நாமும் பெருமை பொருந்திய அந்த மழையைப் போற்றுவோம்!

மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்மேல் நின்று காத்தலான்

அடுத்து, கோயில்களைப் பற்றியும், அங்கே எழுந்தருளியுள்ள தெய்வங்களைப் பற்றியும், அத்தெய்வங்களுக்கு நடைபெறும் திருவிழாக்கள் பற்றியும், சிலப்பதிகாரம் விவரிக்கிறது. ஒரு தாயின் வயிற்றில் கருவிருந்து தங்கிப் பிறக்காத தூய யாக்கை கொண்ட சிவபெருமானின் கோயிலும், ஆறுமுகங்களும் சிவந்த திருமேனியும் கொண்ட அழகன் முருகப் பெருமான் கோயிலும், வெண் சங்கைப் போல திருமேனி கொண்ட பலராமர் கோயிலும், நீலமேனி கொண்ட திருமாலின் கோயிலும், முத்து மாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடை கொண்ட மன்னர் கோயிலும் அமைந்திருந்தன.

அக்கோயில்களில் பிரம்மதேவர் அருளிய வாய்மையில் சிறிதும் தவறாத நான்கு வேதங்களில் சொல்லப்பட்டதைப் போலவே, யாகங்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. வசுக்கள், ஆதித்தர், ருத்திரர், மருத்துவர் எனும் நால்வகைத் தேவர்களும்; தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தர்வர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாராகணம், ஆகாயவாசிகள், யோக பூமியர்கள்-ஆகிய பதினெண் வகைக் கணங்களும் என்பவர்களைக் குறித்தும்; வேற்றுமை தெரிந்து வகுக்கப்பட்ட தனித்தனித் தோற்றமுடைய வேறுவேறு தெய்வங்களின் விழாக்களும், ஆங்காங்கு அவரவர்க்கு உரிய மன்றங்களில் சிறப்பாக நடைபெற்றன.

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்;
அறுமுகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்;
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்;
நீலமேனி நெடியோன் கோயிலும்;

மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்;
மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ
நான்மறை மரபின் தீ முறை ஒருபால்;
நால்வகைத் தேவரும்; மூவறு கணங்களும்;

பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறுவேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால்;’’

அடுத்து; மந்திரங்களில் சித்தி பெற்ற வரைப் பற்றியும் மந்திரங்களைப் பற்றியும் விரிவாகவே சொல்கிறது – சிலப்பதிகாரம். கோவலனும் கண்ணகியும், பெருந்தவ மூதாட்டியான கவுந்தியடிகளுடன், காவிரியின் தென்கரையில் இருந்த ஒரு பூங்காவில் தங்கி இருந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த காமுகன் ஒருவனும், விலை மாது ஒருத்தியும், கவுந்தியடிகளை நெருங்கி, ‘‘உங்களோடு வந்திருக்கும் இவர்கள் யார்?’’ எனக் கேட்டார்கள்.

அதைக் கேட்டதும் காமுகனும் விலைமாதும் வாய் விட்டுச் சிரித்தார்கள். ‘‘கற்றறிந்தவரே! என்னம்மா இது? உங்கள் பிள்ளைகள் என்கிறீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து இல்வாழ்க்கை நடத்து வதும் உண்டோ?’’ என்று கேலி செய்து சிரித்தார்கள்.

அதைக் கேட்டுக் கண்ணகி நடுங்கினாள்.கவுந்தியடிகளுக்குக் கடுங்கோபம் மூண்டது; இழிவாகப் பேசிய அந்த இருவருக்கும் சாபம் கொடுத்தார். ‘‘நீங்கள் காட்டில் முதுநரியாக மாறுவீர்கள்!’’ என்றார்.இழிவாகப் பேசிய இருவரும் அதே விநாடியில், காட்டில் திரியும் நரிகளாக மாறி ஊளை இட்டார்கள். அதைக் கண்டு கோவலனும் கண்ணகியும் நடுங்கினார்கள். கவுந்தியடிகளிடம், ‘‘தவத்தில் சிறந்தவர் நீங்கள். நல்வழியில் நடக்காத இவர்கள் செய்த தவறை மன்னித்து, இவர்கள் மறுபடியும் மனிதர்களாக மாறும் காலத்தைச் சொல்லி அருளுங்கள்!’’ என வேண்டினார்கள்.

அதை ஏற்ற கவுந்தியடிகள், சாபம் பெற்ற இருவரையும் பார்த்து, ‘‘தம் அறியாமையால் இன்று இழி பிறப்பை அடைந்த இவர்கள், உறையூரின் மதிற்புறத்தே உள்ள காட்டில் ஒரு பக்கமாக இருந்து, பன்னிரண்டு மாதங்கள் துன்புற்று வருந்திய பின், பழைய வடிவை அடைவார்கள்!’’ என்று சாப விமோசனமும் கூறி அருளினார். உத்தமமான துறவி ஒருவரின் வாக்குகளுக்கும் மந்திர ஆற்றலுக்கும் உள்ள சக்தியை விளக்கும் இத்தகவலைச் சொல்லும் பாடல் இதோ!

`நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்!
உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்? – என வினவ
‘என்மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;
பக்கம் நீங்குமின்,பரி புலம்பினர்’ – என
‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன்
வாழ்க்கை

கடவதும் உண்டோ? கற்றறிந்தீர்! எனத்
தீ மொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க’
‘எள்ளுவர் போலும் இவர் என்
பூங்கோதையை;

முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆக’ எனக்
கவுந்தி இட்டது தவந்தரு சாபம்;’

அடுத்து… குறி சொல்வதைப் பற்றி மிகவும் விரிவாக ஒரு நேர்முக ஔி –
ஒலிபரப்பு செய்கிறார் இளங்கோவடிகள்.

கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் எனும் மூவரும் கொற்றவை கோயில் ஒன்றில் ஒரு பக்கமாக ஒதுங்கி உட்கார்ந்திருந்தார்கள். அப்போது அங்கே குறி சொல்லப்
படுவதை ஒட்டி ஏராளமானோர் கூடியிருந்தார்கள். குறி சொல்லும் பெண்ணுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. குறிசொல்லும் பெண்ணை அழைத்து அவள் கூந்தலைச் சிறு வெள்ளைப்பாம்புக் குட்டி போன்ற தங்கக்கயிற்றால் சுற்றினார்கள்.

அவளுடைய குட்டையான கூந்தலை நெடுமுடியாகத் தலைக்குமேல் உயர்த்திக் கட்டினார்கள். தோட்டப்பயிரை அழித்த காட்டுப் பன்றியைக் கொன்று பறித்த, அதன் வளைந்த வெண்மையான கொம்பை, அப்பெண்ணின் சடைமுடி மேல், ‘சந்திரப்பிறை’ எனக்கூறிச் சாற்றினார்கள். வலிமை மிகுந்த கொடும்புலியின் வாயைப்பிளந்து எடுக்கப்பட்ட அதன் வெண்பற்களை
வரிசையாகக் கோர்த்துப் ‘புலிப் பல் தாலி’யாகக் குறி சொல்லும் பெண்ணின் கழுத்தில் கட்டினார்கள்.

“…தொல்குடிக் குமரியைச்
சிறுவெள் அரவின் குருளை நாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி,
இளைசூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளைவெண் கோடு பறித்து, மற்றது
முளைவெண் திங்கள் என்னச் சாத்தி,
மறம்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி;’’

அடுத்து, வரியும் புள்ளியும் கலந்த புலித்தோலை, அவள் இடுப்பில் மேகலையாக உடுத்தினார்கள். வைர வில்லை வளைத்து அவள் கையில் கொடுத்தார்கள். முறுக்கான கொம்புகளை உடைய கலைமானின் முதுகில், அவளை ஏற்றி உட்கார்த்தினார்கள். அதன்பின் அழகான பதுமை, கிளி, கானங்கோழி, நீலநிற மயில், பந்து, கழங்கு ஆகியவைகளைக் குறி சொல்லும் பெண்ணின் கையில் கொடுத்து அவளைக் கொற்றவையாகவே அலங்காரம் செய்தார்கள்; கொற்றவையாகவே நினைத்து வழிபட்டார்கள்.

“வரியும் புள்ளியும் மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீ இப் பரிவொடு
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றிப்;
பாவையும் கிளியும் தூவி அம்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்தும் கழங்கும் தந்தனர் பரசி;’’

வண்ணக்குழம்பு, மகரந்தப்பொடிகள், குளிர்ந்த வாசனை சந்தனம், அவித்த உணவு வகைகள், எள்ளுருண்டை, மாமிசம் கலந்த சோறு, மலர்கள், நறும்புகை, நறுமண மலர்கள் – ஆகியவற்றை ஏந்தி, அவள் பின்னால் பலர் வந்தார்கள். பறை, சின்னம், கொம்பு, குழல், மணி – என அனைத்தையும் ஒன்றாக முழங்கி, அவள் முன்னால் நின்றார்கள். அதன்பின் பலிபீடத்தை முதலிலே தொழுது, பிறகுதான் அலங்காரம் செய்த அக்குமரியையும் அம்பிகையாகவே தொழுது வணங்கினார்கள்; கொற்றவையின் திருஉருவையும் வணங்கினார்கள்.

“வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ்
சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை
மடையும்
பூவும் புகையும் மேவிர விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர;

ஆறெறி பறையும் சூறைச் சின்னமும்
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப,அணங்கு
முன்நிறீஇ,

விலைப்பலி உண்ணும் மலர்ப்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழுது
ஏத்தி…’’

குறி சொல்லும் பெண்ணைப்பற்றிய ஆழமான அபூர்வமான தகவல்கள் இவை. இளங்கோவடிகளைத் தவிர வேறு யாரும் இவ்வாறான தகவல்களைச் சொல்லவில்லை. பற்பல தெய்வங்களைப் பற்றிய தகவல்கள் நிறைந்த நூல் – “சிலப்பதிகாரம்’’!

பி.என்.பரசுராமன்

The post சிறப்புகளைப் பெற்ற சிலப்பதிகாரம்! appeared first on Dinakaran.

Tags : Silapathikaram ,King ,Neduncheralada ,Cheranatu Vanji ,Senguttuvan ,Ilango Vel ,Elango Adigal ,
× RELATED டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான்...