×

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்

ஏத்தும் அடியவர்

“அந்தமாக”
“விழிக்கே அருளுண்டு’’ என்பதனால் இறை நம்பிக்கையையும், “அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே’’ என்பதனால் உபாசனை நெறியையும், “வழிபட நெஞ்சு உண்டு எமக்கு’’ என்பதாலும் சாத்திர நெறிகளை நன்கு அறிந்த பண்பையும், “எமக்கு அவ்வழி கிடக்க பழிக்கே’’ என்பதனால் இத்தகைய உயர்ந்த வழியை, தான் பின்பற்றுவதையும், “சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்’’ என்பதனால் உடல் உணர்வையும், உள்ள உணர்வையும், தோற்றுவிக்கும் புலன்களையும், உயிரை அடையவிடாது மறைக்கும் அறியாமையாகிற ஆணவ மலத்தையும், “தம்மோடு என்ன கூட்டினியே’’ என்பதனால் இறைவியின் அருள் அழுத்தத்தால் சத்னி பாதத்தால் ஆன்மாக்கள் யாக்கையொடு கூடாது. ஆன்மாவோடு ஆணவ மலமாகிய அறியாமை இனி கூடாது.

நித்தமாய் அறிவு வடிவாய் ஆனந்தமான சிவானந்த பண்பையே என்ன கூட்டணியே என்பதனால் விளக்குகிறார். இனி அவர் வழியே வழிபடுவோம்!
அடுத்த பாடலுக்கு செல்வோமா!

“கூட்டியவா என்னை தன் அடியாரில்! கொடியவினை
ஓட்டியவா என்கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
ஆட்டியவா நடம்! ஆடகத் தாமரை
ஆரணங்கே’’.

என்பதாவது அந்தாதி“ஆதியாக”
நிலவு தோன்றிய பிறகு அபிராமிபட்டர் பாடிய முதல் பாடல். அபிராமிபட்டரை தன் அடியவன் என்று அறிவிக்க உமையம்மையே தன் தாடங்கத்தால் அமாவாசையை நிலவாக்கி பட்டருக்கு அருளியதையே இப்பாடலில் குறிப்பிடுகிறார். அது எப்படி என்பதை பாடலின் வழியாகவே அறிந்து கொள்வோம்.

“அந்தாதி பொருட்சொல் வரிசை”
* கூட்டியவா என்னை தன் அடியாரில்
* கொடியவினை ஓட்டியவா
* என்கண் ஓடியவா
* தன்னை உள்ளவண்ணம் காட்டியவா
* கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
* ஆட்டியவா நடம்
* ஆடகத் தாமரை ஆரணங்கே
இவ்வரிசையின் வழி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

“கூட்டியவா என்னை தன் அடியாரில்’’

“கூட்டுதல்” என்ற சொல்லானது ஒன்றுடன் ஒன்றாக இணைப்பதாகும். “கூட்டியவா’’ என்பதற்கு இணைத்தவன் என்பது பொருள். “என்னை’’ என்பதனால் அபிராமிபட்டர் தன்னை குறிப்பிடுகிறார். “தன்’’ என்ற சொல்லால் அபிராமியை குறிப்பிடுகிறார். “அடியாரில்’’ என்பதனால் அபிராமிப் பட்டருக்கு முன்னமையே அபிராமி அம்மையின் அருளை பெற்றவர்களை குறிப்பிடுகிறார்.

“கூட்டியவா என்னை தன் அடியாரில்’’ என்பதனால் அபிராமி அம்மையின் அருளை பெற்றவர்களோடு பட்டராகிய தன்னை உமையம்மை தன் அடியார் கூட்டத்துடன் இணைத்ததையே
குறிப்பிடுகின்றார். அந்த வகையில் அபிராமி பட்டருக்கு முன் அபிராமி அம்மையின் அருளை பெற்றவர்களை அந்தாதியில் அவரே கூறுகிறார். அந்தக் கூட்டத்தில் யார் யார் இருந்தார்கள் என்பதை நாம் அறிந்து கொண்டால் தான் அவர்களுடன் இணைந்த பட்டர் அடைந்த உயர்வை நாம் அறியமுடியும்.

இக்கருத்தை ஐந்து வகையாக பாடலுள் சொல்கிறார். ‘நின் அன்பர் பெருமை’ (3) என்று கூறுவதால் அபிராமி அம்மையின் அருள் பெற்றவர்கள் அனைவரையும் இணைத்து பொதுவாக குறிப்பிடுவது முதல்வகை. தனக்கு முந்திய அடியார்களுடன் இணைந்து தாம் பூசித்ததாக நிகழ்காலத்தில் பட்டருடன் ஆலயத்தில் வழிவழியாக பூசித்து வரும் பரம்பரை அர்ச்சகர்களையும், உடன் வழிபாடு செய்தவர்களையும், குறிப்பிடுகிறார்.

இதை ‘முன்னிய நின் அடியாருடன் கூடி’ 6) என்பதனால் அறியலாம். இவர்கள் ஆகாமத்தையே முதன்மையாகக் கொண்டு அதன் வழியே பூசிப்பதையே ‘பரமாகம பத்ததியே’ (6) என்பதனால் நன்கு அறியலாம். இவர்கள் இரண்டாவது வகை. உமையம்மையை பற்றி அவளது புகழை சொற்பொழிவாக செய்கிறவர்கள் முக்கிய விழாவில் தேவி மகாத்மியம் போன்ற கதைகளை விவரித்து கூறியவர்கள். இவர்களை ‘உன்னை நயந்தோர் அவையத்து’ (12) அவயத்து என்பதனால் பல பேர் கூடிய அவையில் தன் கருத்தை சொல்லுபவர்கள். இவர்களும் உமையம்மையின் அடியவர்களின் மூன்றாவது வகையே.

உமையம்மையை வழிபடுபவர்களில் தேவர்களும், அசுரர்களும் உண்டு. அவர்களையே ‘வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர்’ (14) என்பதனால் அறியலாம். இவர்களும் அடியார்களுள் நான்காம் வகை. சிந்திப்பவர் என்பதனால் உமையம்மையை புற வழிபாடின்றி அகவழிபாட்டால் த்யானத்தையே சாதனமாக கொண்டு வழிபடுபவர்கள் அல்லது யோகக் கலை பயின்று பழக்கத்தால் [அப்யாசத்தால்] உமையம்மையின் அருளை அடைந்தவர் என்பதை ‘சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தனையுள்ளே
பந்திப்பவர்’ (14) இவர்களும் அடியார்களுள் ஐந்தாம் வகை.

பிரம்மச்சரிய விரதம் இருந்து யம நியமங்களை கடைப்பிடித்து ஜபம் செய்வதனாலேயே உமையம்மையின் அருளைப்பெற முயல்பவர்கள். இவர்களை ‘பலகோடி தவங்கள் செய்வார்’ (15) என்கிறார். உமையம்மையின் புகழை இசை அமைத்து பாடுவதனாலேயே அருளைப் பெற்ற இவர்களை ‘கூட்டம் தன்னை விள்ளேன்’ (23) என்பதனால் அறியலாம்.

துறவு நெறியை மேற்கொண்டு முக்தியையே முதன்மைப் பொருளாக கொண்டு சென்று கொண்டேயோ அல்லது இருந்த இடத்தைவிட்டு மாறாமலேயோ உமையம்மையை வணங்குபவர்களை ‘பின்னே திரிந்து உன் அடியாரை’ (25) என்கிறார். உமையம்மையை தொழுது தீர்த்தங்களை அமைத்து வழிபடும் தேவர்கள் இவர்களும் உமையம்மையின் ஆறாம் வகையினரே.

‘ஏத்தும் அடியவர்’ (26) உமையம்மை அளவிலா பெரும் கருணையினால் தானே முன் தோன்றி தன்னை வழிபடு என பணித்தருளி அதன் மூலமாக வழிபடுபவர்கள் ‘எமையும் தமக்கன்புசெய்யவைத்தார்’ (31) உமையம்மையின் பெருமையை கேட்டு அவர்களிடத்திலே அன்பு கொண்டு வழிபாடு முதலிய நெறிகள் தெரியாவிட்டாலும் வணங்க வேண்டும் என்ற எண்ணத்தை மிகுதியாக கொண்டவர்கள் அடியார்களே ‘அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ண மன்றோ’ (40) சடங்கின் வழி உமையம்மையின் மந்திரங்களை தீட்சை பெற்று அடியார்களின் உதவியால் செவ்வனே முறைகளை அறிந்து உபாசனை செய்பவர்களும் ஏழாம் வகை ‘தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே’ (41)தொந்தரவு மற்றும் துன்பங்களை தீர்த்துக் கொள்ளவும் வேறுவழியில்லாமல் உமையம்மையை நாடி நிற்கின்ற அடியவர்கள் என்று இவர்களின் கூட்டம் மிகுந்து கொண்டே போகிறது. அவரவர் தன்மைக்கு ஏற்ப பூஜை, ஜபம், தியானம், பாராயணம், பக்தி, சிரத்தை, யோகம் என்று அவரவர்கள் முறையிலேயே செய்கின்ற முயற்சியை ஏற்று அளவற்ற கருணையினால் அனைவருக்கும் அருள்கிறாள்.

அப்படி அருளைப் பெற்றவர்களை அந்த அருள் விட்டு விலகாமல் அதிலேயே நிலைத்து நிற்கிறார்கள். துன்பமறியாதவர்கள், இன்பமே வடிவானவர்கள், கவலையில்லாதவர்கள், அமைதியானவர்கள், அறிவு தெளிவானவர்கள், நிரந்தரமானவர்கள், உண்மையானவர்கள் இத்தகைய பண்புகள் உடைய அடியார்களிடத்து அபிராமிபட்டராகிய தன்னை உமையம்மை இணைத்து வைத்ததையே ‘`கூட்டியவா என்னை தன் அடியாரில்’’ என்கிறார்.

“கொடியவினை ஓட்டியவா’’

என்ற சொல்லால் ஆன்மாக்களால் தன்வினையை அனுபவித்து தீர்க்க முடியுமே தவிர அதிலிருந்து இறையருளின்றி விலக முடியாது. அதன் தன்மை பற்றியே ‘`கொடியவினை’’ என்கிறார். வினையானது சஞ்சிதம், பிராரப்தம், ஆகாம்யம் என்ற முக்காலங்களிலும் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை உன்னுடயே இருந்து தன் வகையால் துன்புறுத்துவது வினையின் வழியேதான் பிறப்பு, வாழ்க்கை, வளம், ஆயுள், மகிழ்ச்சி, துன்பம், ஞானம் என்று அனைத்துமே பெற இயலும்.

ஆகையால் வினையானது உலக உயிர்களுக்கு துன்புறுத்தலையே தரும் என்கிறார் பட்டர். நல்லது வருவதை தடுக்கும், ஆசைகளைத் தூண்டுமென்பதை மனதில் கொண்டுதான் சிறிதே நன்மை செய்தாலும் துன்பத்தையே அதிகமாக செய்யுமென்பதை அல்லல் என்கிறார். அல்லல் என்ற வார்த்தையால் முன்று வினையையும் இணைத்து குறிப்பிடுகின்றார். இந்த வினையானது கயிறு போல் மனிதனை கட்டுகிறது. அவன் சுதந்திரம் அடையாமல் தடுக்கிறது. துன்பத்தை மீண்டும் மீண்டும் வளர்க்கிறது. ஒருவகையில் வராமல் பல்வேறு தோற்றம் கொண்டு பல்வேறு வகையில் தாக்குகிறது. அதை சூட்டவே ‘`கொடியவினை’’ என்கிறார். ஆயுர்வேதமானது உடல் உள்ளவரை நோய் வரும் என்கிறது.

வந்த நோய்க்குத் தான் வைத்தியம் செய்ய முடியும். வராத நோய்க்கு வைத்தியம் பார்க்க முடியாது. நோய் வராது என்றும் சொல்ல முடியாது. இப்படி சொல்லி வரையறுக்க முடியாத எந்த நேரத்திலும் வந்து தாக்கும் பண்பை அல்லல் என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர். அந்த அல்லலை உமையம்மை தீர்த்துவிடுவார். இதையே ‘என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்’ (85) என்பதனால் அறியலாம். மனிதன் உடலின் பொருட்டும், உள்ளத்தின் பொருட்டும், அறிவின் பொருட்டும், ஆன்மாவில் படிந்துள்ள ஆணவமலத்தை போக்குவதற்காகவும் கர்மங்களைச் செய்த வண்ணமே இருக்கிறார்கள்.

அதை செய்து முடிப்பதையே முதன்மையாக கருதுகிறார்கள். அது செய்வதற்கு ஏற்படும் தடங்களையே துன்பமாக கருதுகிறார். செய்யவில்லையே என்று எதிர்காலம் குறித்து அஞ்சுகிறார்கள்.
இதையே ‘பாழ்நரகக் குழிக்கே அழுந்தும்’ (79) ‘கருமநெஞ்சால்’ (3) என்பதனால் அறியலாம். ஒவ்வொருவருக்கும் செய்த வினையின் வழியேதான் சொர்க்கம், நரகம், மீண்டும் பிறப்பு, முக்தி, ஞானம் இவையெல்லாம் ஏற்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் வினை வசத்தால் இயங்குகிறான்.

அவன் வசத்தில் விணையில்லை என்பதை அறிவுறுத்தவே ‘இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும்பொழுது’ (33) என்கிறார். ஆசை, தேவை, துன்பமே வினைக்கு காரணம் ‘இல்லாமை சொல்லி ஒருவர்தம் பாற் சென்று’ (54) ‘ஆசைக்கடலில் அகப்பட்டு’ (32) என்று வினை வலிமையை சூட்டவே கொடிய வினை என்கிறார். எத்தகைய ‘`கொடியவினை’’யாக இருந்தாலும் உமையம்மை அதை நீக்கி அருள்வாள். அதையே ‘`கொடியவினை ஓட்டியவா’’ என்கிறார்.

“என் கண் ஓடியவா’’

‘`என் கண்’’ என்று அபிராமி பட்டர் தன்னையும், தன் பக்குவத்தில் உள்ளவர்களையும் குறிப்பிடுகின்றார். ‘`ஓடியவா’’ என்பதனால் விரைவை குறிப்பிடுகிறார். உமையம்மையின் அருளானது ஆன்மாக்களுக்கு வணங்குவோர்க்கு காலதாமதமின்றி விரைவாக கிடைக்கும் என்பதையே ‘`என் கண் ஓடியவா’’ என்கிறார். வேண்டியவாறு அமாவாசை அன்று நிலவு தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற உண்மையான சூழலில் கண்டிப்பாக உமையம்மை அருள்வாள். நூறு சூத்திரமும் அறுந்து போவதற்கு முன் அருள்வாள். ஒவ்வொரு நொடியும் நெருப்பு தன் இருப்பை காட்டிக் கொண்டிருக்கும் அத்தகைய துன்பமான காலத்தை சூட்டவே விரைவு குறிப்பை உணர்த்துகிறார். அதை சூட்டவே ‘`என் கண் ஓடியவா’’ என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

 

The post அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் appeared first on Dinakaran.

Tags : Allah ,
× RELATED மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை...