×

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 3 ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நன்றி!!

சென்னை : பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 3 ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் சராசரியாக ஒவ்வொரு விவசாயியும் ஆவினுக்கு வழங்கும் பாலுக்கு, லிட்டர் ஒன்றுக்கு கூடுதலாக 3 ரூபாய் கிடைக்கும். ஏற்கெனவே சமீப காலமாக கொழுப்புச் சத்து 4.3% மற்றும் இதர சத்துக்கள் 8.2% க்கு மேல் உள்ள தரமான பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஊக்கத் தொகையாக ஒரு ரூபாய் 25.07.2023 முதல் வழங்கி வருகிறோம்.

இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வைத்துள்ளார்.எனவே பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கி பயன்பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை ஆவினுக்கு வழங்கி வருகிறார்கள். அதன் மூலம் சங்கங்கள் ஈட்டுகின்ற லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை உறுப்பினராக உள்ள உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறோம். மேலும் சங்கங்கள் ஈட்டுகின்ற லாபத்தில் நிருவாக செலவினங்களை தவிர்த்து 50 சதவீதம் போனஸ் ஆக திரும்ப பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் ஈட்டுகின்ற லாபத்தின் ஒரு பகுதியை தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறோம்.

மேலும் இதுவரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கறவை மாட்டுக் கடன் முன்பு 14%-15 % வட்டியில் வழங்கப்படடு வந்தது ஆனால் தற்பொழுது பால்வளத் துறையின் முயற்சியால் 9% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை சங்கங்களின் வாயிலாக கறவை மாட்டுக்கு பராமரிப்புக் கடன் வட்டி இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் சுமார் 105 கோடிக்கு மேல் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கான காப்பீடு மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான காப்பீடு போன்றவை மறுசீரமைக்கப்பட்டு விவசாயிகள் நலனிற்கேற்ப வழங்கப்பட உள்ளது. சந்தை விலையை ஒப்பிடும் பொது குறைந்த விலையில் தரமான மாட்டுத் தீவனம் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தரும் பாலுக்கு அந்த இடத்திலேயே தரப்பரிசோதனை செய்து விலை நிர்ணயிக்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாயிகள் தரும் பாலுக்கு தரத்திற்கு ஏற்ற விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனால் விவசாயிகளுக்கு ஏற்கெனவே வழங்கிய தொகையை விட கூடுதலாக ரூ.2 முதல் ரூ.4 வரை கிடைக்கிறது.மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு 10 நாட்களுக்குள் பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே கழக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.11.2022 அன்று பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி வழங்கினார்.மேலும் பால் விற்பனை விலை ரூ. 3 (16.05.2021) குறைக்கப்பட்டது.இம் முயற்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்குவதோடு கிராம பொருளாதாரம் மேம்பட்டு பால் உற்பத்தியாளர்களின் வாழ்வும் மேம்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய ஆவின் நிறுவனத்திற்கு உதவியாக அமையும்.இதன் மூலம் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், ஆவின் ஊழியர்கள், அலுவலர்கள்,மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள், பால் முகவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. எனவே இத்தருணத்தில் அனைவர் சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பால்வளத்துறையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 3 ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் நன்றி!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திறனை...