×

தெளிவு பெறுவோம்: நம்முடைய பக்திக்கு எது தடையாக இருக்கிறது?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நம்முடைய பக்திக்கு எது தடையாக இருக்கிறது?
– ஜி.எஸ்.மோகன், திருச்சி.

பதில்: அகங்காரம்தான். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மிக அழகாகச் சொல்லுவார். “ஆகாயத்தில் மேகங்கள் தோன்றி சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அதுபோல் மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈஸ்வர ஜோதி பிரகாசிக்காது. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்’’ என்பார். இது குறித்து வைணவத்தில் ஒரு கதை உண்டு. ஒரு குருவிடம் கல்வி கற்பதற்காக சீடர் சென்றார். குருவின் வீட்டுக் கதவைத் தட்டினார். உள்ளே இருந்து குருவின் குரல் கேட்டது.

“யாரது?’’ உடனே சீடன்;
“நான்தான் வந்திருக்கிறேன்’’ என்று உரக்கச் சொல்லிவிட்டு,“எப்பொழுது தங்களிடம் பாடம் கேட்க வரலாம்?’’ என்று கேட்டவுடன், உள்ளே இருந்து குருவின் குரல் கேட்டது.

“நான் செத்த பிறகு வா’’
சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. உயிரோடு இருக்கும் போது அல்லவா பாடம் கேட்க வேண்டும். செத்த பிறகு இந்த குருவால் எப்படி பாடம் நடத்த முடியும்? என்று குழம்பினான். 2,3 முறை இவன் அவர் வீட்டுக்கு சென்று கதவை தட்டுவதும், நான் வந்திருக்கிறேன் என்று சொல்வதும், குரு அதற்கு பதிலாக “நான் செத்த பிறகு வா’’ என்று திருப்பி அனுப்புவதும் நடந்தது. இந்த முறை, சீடன் யோசித்தான். குரு வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினான். குரு வழக்கமாக;
“யாரது?’’ என்றார். சீடன்;

“அடியேன் தாசன். தங்கள் சீடன்’’ என்றார். குரு கதவை திறந்து உள்ளே அழைத்துச் சென்று பாடம் நடத்தினார். இதில் “நான்” என்பது அகங்காரத்தைக் குறிக்கும் சொல். இந்த நான், எனது என்கின்ற அகங்கார மமகாரங்கள் நீங்காத வரைக்கும் ஆன்மிகத்தில் உயர்வதோ, ஞானம் வசப்படுவதோ இயலாத செயல். இதை திருவள்ளுவரும் சொல்லுகின்றார்.
யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்

? மனிதர்கள் நேர்மையற்று இருப்பதற்கு என்ன காரணம்? படைத்த கடவுள்தான் காரணமா?
– சுகாசினி, சென்னை.

பதில்: கடவுள் மனிதனை நேர்மையுள்ளவராகத்தான் படைத்தார். ஆனால், குறுக்கு வழிக்கும், அளவில்லா ஆசைக்கும் வசப்பட்டு, வாழ்க்கை சிக்கல்கள் அனைத்தையும் தனக்குத் தானே தேடிக் கொள்ளுகின்றான். ஒரு அழகான திரைப்பட பாடல் உண்டு.எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே மனிதர்கள் பேராசையாலும் கெட்ட புத்தியாலும் தாங்கள் மட்டும் கெடுவதில்லை. தங்கள் சந்ததியினருக்கும் மறைமுகமாக தீங்கு செய்து விடுகின்றார்கள்.

? நம் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது?
– விஜய் பிரகாஷ், சித்தூர்.

பதில்: ஒரு காரியத்திற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். காரியம் வெற்றி அடையவில்லை. இப்பொழுது ஒரு பேப்பரில் பின்வரும் கேள்விகளுக்கான பதிலை எழுதிப் பாருங்கள். தோல்விக்கு நான் காரணமா, என்னுடைய ஏற்பாடுகள் காரணாமா என்று கேட்டு, விடை எழுதுங்கள். எல்லாம் சரியாக இருந்து, காரியம் ஜெயமாகவில்லை என்றால் விதி விளையாடுகிறது என்றுதானே பொருள்.

? ஞாபக மறதி நல்லதா?
– கே.வி.பிரசாத்குமார், ஸ்ரீவில்லிப்புத்தூர்.

பதில்: எல்லோருக்கும் நினைவுத்திறன் ஒரே மாதிரி இருப்பதில்லை. மாறுகிறது. நினைவுத் திறனைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர். இதில் சிலருக்கு வெற்றியும் வரலாம். வராமலும் போகலாம். ஒருவர் சொன்னார்.“ஞாபக சக்தி வளர்ப்பது எப்படி என்கின்ற ஒரு புத்தகத்தை நேற்றுத் தான் வாங்கினேன். இப்பொழுது அந்த புத்தகம் எங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.” இந்த நிலைதான் பெரும்பாலோர் நிலை. ஆனால், ஞாபகமறதி ஒரு விஷயத்தில் நல்லதுதான். பல மோசமான விஷயங்களை மறக்க முடியும் அல்லவா..!

? எத்தனையோ மகான்கள் இருந்தும், இந்த மனித குலம் தெளிவடையவில்லையே, என்ன காரணம்?
– பிந்துமாதவன், எர்ணாகுளம்.

பதில்: நாம் கருத்துக்களைவிட, பெரும்பாலும் கருத்து சொன்னவரையே பார்க்கிறோம். அவரையே வணங்குகின்றோம். அவருடைய கருத்துக்கள் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. அதை பின்பற்றவும் முயல்வதில்லை. காரணம், கருத்துக்களை பின்பற்றுவதைவிட சொன்னவரைப் பாராட்டுவதும் வணங்குவதும் நமக்கு எளிதான விஷயமாக இருக்கிறது. இதை ஒரு அறிஞர் மிக அழகாக கூறினார்.

“துறவி ஒரு திசையை நோக்கி கை காட்டினால், மக்கள் திசையைப் பார்க்காமல் அவருடைய கைவிரல்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்’’ உண்மையில் இன்று இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பிறகு எப்படி முன்னேற முடியும்?

? ஞானம் வந்துவிட்டது என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
– ஹர்ஷினி, கோவை.

பதில்: ஒரு சின்ன கதை. முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் சொன்ன கதை. ஆன்மிக சொற்பொழிவுக்கு ஒருவர் தினசரி வருவார். சுவாரஸ்யமாகக் கேட்பார். ஒரு நாள், அவர் கவலையுடன் இருந்தார். காரணம், அவர் அதுவரை விரைவில் அணிந்திருந்த விலை உயர்ந்த மோதிரம் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அது அவர் திருமணத்தின்போது அவருடைய மாமனார் போட்ட வைரமோதிரம். இப்படித் தொலைந்துவிட்டதே என்று மிகவும் வருந்தினர். அவருக்கு மோதிரத்துடன் இருந்த தொடர்பு 40 வருடங்கள். ஆனால், அந்த மோதிரம் இவ்வளவு வருடங்களாக அவருடைய விரலை அலங்கரித்தேனே என்று ஏதாவது யோசனை செய்கிறதா? செய்யவில்லையே. செய்யவும் செய்யாது.

காரணம் என்ன என்று சொன்னால், மோதிரம் அறிவில்லாத பொருள். உலக வாழ்வில் மோதிரம் போன்றவர்கள்தான் நாம். நம்மை இந்த பிரகதி மண்டலத்தில் தொலைத்துவிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பவன் இறைவன். நம்மைப் பற்றியும் சிந்திக்காமல், பரமாத்மாவைப் பற்றியும் சிந்திக்காமல் அந்த மோதிரம் வாழ்ந்தது போல, வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை நல்வழிப்படுத்த பகவான் படாதபாடு படுகிறான். அதற்குத்தான் பல விதமான சாத்திரங்கள், கோயில்கள் எல்லாம். அந்த இறைவனைப் பற்றிய கவலை இந்த ஆன்மாவுக்கு வந்துவிட்டால், ஞானம் வந்துவிட்டது என்று பொருள்.

? யார் சிறந்த நண்பன்?
– சபரிநாதன், ஈரோடு.

பதில்: இடுக்கண் களைவதாம் நட்பு என்றார் வள்ளுவர். துன்பத்தில் யார் தோள் கொடுக்கிறார்களோ அவர்கள்தான் சிறந்த நண்பர்கள். துன்பம் வரும் என்று முன்கூட்டியே எடுத்துக் கூறி எச்சரிப்பவர்கள் நல்ல நண்பர்கள். நம் உயர்வுகளில் பொறாமைப் படாமல் சந்தோஷப்படுபவர்கள் நண்பர்கள். ஒரு அறிஞர் தனது அனுபவத்தை இப்படிச் சொல்கிறார்; கண்ணாடிதான் என் சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரித்ததில்லை.

? எல்லோருடனும் மிக எளிதாக அன்பாக இருக்க முடியவில்லை, காரணம் என்ன?
– ஈஸ்வரி முத்துகுமார், புதுக்கோட்டை.

பதில்: சின்ன காரணம்தான். நாம் முதலில் நம் தகுதியைப் பார்ப்பதில்லை. பிறர் தகுதியை எடை போடத் துவங்கி விடுகின்றோம். நம் அன்புக்கு தகுதியானவர் தானா இவர் என்று பார்க்கும்போது, அன்பு செலுத்தும் தகுதி நமக்குப் போய்விடுகிறது. எனவே, அன்பு என்பது போலித்தனமான உணர்வாகிவிடுகிறது. அன்பு செலுத்துவது போல் நடித்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோம். பிறரையும் ஏமாற்றுகிறோம். அன்பாக இருக்கிறேன் என்று வாயால் சொல்லிக் கொள்ளலாம். ஒவ்வொருவரையும் சீர்தூக்கி பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களை நேசிக்க நேரம் எங்கே கிடைக்கப் போகிறது?

? எங்கே கடவுளை காணலாம்?
– ராகவேந்திரன், உத்தமர்கோயில்.

பதில்: எங்கே கடவுளை காணலாம் என்று கேட்காதீர்கள். எங்கே கடவுளைக் காண முடியாது என்று கேளுங்கள். அப்படிப்பட்ட ஒரு இடம் இல்லை. அப்படியானால் என்ன பொருள்? “எங்கும் உளன் கண்ணன்” என்று ஆழ்வார் பாடுகிறார் அல்லவா..! அவன் எங்கும் இருக்கிறான்.

சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை
காணுதி விரைவின்” என்றான்; ‘‘நன்று” எனக் கனகன் சொன்னான்.

– என்பது இரணியனுக்கு பிரஹலாதன் சொன்ன பதில்.ஆனால், அவனைக் காணும் முயற்சியில் நாம் வெற்றி பெறுவதில்லை. காரணம் என்ன? அவன் பெரும்பாலும், கோயிலில் நாம் காணும் உருவில் வருவது இல்லை. ஆனால், நம்முடைய வாழ்க்கையில் பலமாக அன்பு செலுத்தி நம்மை ஆதரிப்பவர்கள், நம்மை திருத்திப் பணி கொள்பவர்கள், நம்முடைய தோல்வியின் போது கை தூக்கிவிடுபவர்கள், நாம் அழும்போது ஆறுதல் சொல்பவர்கள், இவர்களெல்லாம் கடவுளின் வடிவங்கள்தான். ஆனால், நாம் புரிந்து கொள்வதில்லை. ஒரு சின்ன உதாரணம்.

காட்டுமன்னார் குடியில் வாழ்ந்த நாதமுனிகள் திருமாளிகைக்கு யாரோ ஒரு வேடன் மனைவியுடன், ஒரு குரங்கோடு வந்து விசாரித்துவிட்டு போய்விட்டான். நாம் என்ன நினைப்போம்? வேடன் ஏதாவது நம்மிடத்தில் கேட்க வந்திருப்பவன் என்று எண்ணி வேறு வேலையைப் பார்க்கப் போய் விடுவோம். ஆனால் நாதமுனிகள் என்ற ஆச்சாரியார், “ஐயோ, என் ராமரும் சீதையும் அனுமனும் என்னைத் தேடி வந்தார்கள்” என்று அவர்களைத் தேடி ஓடுகிறார். புரிந்தவன் காணுகின்றான். புரியாதவன் தேடுகிறான்.

?மனிதன் எதில் அகப்பட்டு படாதபாடுபடுகிறான்?
சி.சூர்யகுமார், அப்பக்குடத்தான்.

பதில்: வேண்டாத ஆசையில்தான். இனிமையாக பறக்க வேண்டிய பறவை சக்திக்கு மேலே உயரப் பறக்க ஆசைப்பட்டு கீழே விழுகிறதே.. அப்படித்தான். பறந்து பறந்து ஒன்றும் இல்லாமல் முடிகிறோம்… முன்னொரு காலத்தில் குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு செர்ரிப் பழங்கள் என்றால் உயிர். ஒரு நாள் அது அழகான செர்ரிப் பழத்தைக் கண்டது. உடனே `மரத்தை விட்டிறங்கி எடுத்துப் பார்த்தால், அது ஒரு சிறிய கண்ணாடிக் குவளை, அதற்குள் செர்ரிப் பழம்! குரங்கு குவளைக்குள் கையை விட்டது… பழத்தை இறுகப் பற்றிக் கொண்டது… ஆனால், மூடிய கை வெளியே வரவில்லை.

உள்ளே போகும் போது, நேராகப் போன கை பழத்தை பற்றிக் கொண்டதும் வடிவம் பெரியதாகவே… வெளியில் கொண்டு வர முடியவில்லை. குரங்கைப் பிடிக்க வேடன் வைத்த பொறி அது. குரங்கு எப்படிச் சிந்திக்கும் என்பதை அறிந்திருந்தான். அங்கு குரங்கு போராடுவதைக் கண்டு அங்கே வேடன் வந்தான். குரங்கு ஓடப் பார்த்தது.

கை குவளையில் சிக்கிக் கொண்டதால், வேகமாக ஓடித் தப்பவும் முடியவில்லை. ஓர் ஆறுதல்! பழம் தன் கைப்பிடிக்குள்தான் இருக்கிறது என்ற ஆறுதல் அதற்கு. வேடன் குரங்கைத் தாவிப் பிடித்தான், அதன் கையின் மேல் சட்டென ஒரு தட்டுத் தட்டினான். அதிர்ச்சியில் அது பழத்தை விட்டுவிட்டது. கை வெளியில் வந்துவிட்டது. என்றாலும், அது வேடன் பிடியில் சிக்கியிருந்தது. வேடனுடைய கண்ணாடிக் குவளையும், பழமும் சேதமாகாமல் அப்படியே இருந்தன. இதேதான் நம் விஷயத்திலும் பெரும்பாலும் நடக்கிறது. “நாம் வேண்டாத ஆசையில், கையை நுழைத்து, குரங்கைப் போல அகப்பட்டு விடுகிறோம்.

? எல்லோரையும் நம்மால் சந்தோஷப்படுத்த முடியுமா?
– எம்.வித்யா, சேலம்.

பதில்: நம்மால் மட்டுமல்ல, சாட்சாத் அந்த பகவானாலேயே முடியாதகாரியம். கண்ணனால் துரியோதனனை சந்தோஷப்படுத்த முடிந்ததா? ராமனால் ராவணனை சந்தோஷப்படுத்த முடிந்ததா? எனவே உலகில் எல்லோரையும் அல்ல, ஒரு சிலரைக் கூட சந்தோஷப்படுத்துவது என்பது சிரமமான விஷயம். ஆனால், ஒன்று, இயன்றளவு எல்லோருடனும் சண்டை போட்டுக் கொள்ளாது சந்தோஷமாக இருக்க முயற்சிக்கலாம். இது கொஞ்சம் சுலபமான விஷயம்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தெளிவு பெறுவோம்: நம்முடைய பக்திக்கு எது தடையாக இருக்கிறது? appeared first on Dinakaran.

Tags : GS ,Mohan, ,Trichy ,Lord Sri Ramakrishna… ,
× RELATED விருது தொகையில் சமூக சேவை பள்ளி மாணவியின் அரிய பணி