×

பிரசாதத்தை மகாபிரசாதமாக மாற்றும் விமலாதேவி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வைகுண்டம் வந்து வைகுண்டப் பதியை தரிசிக்கத் தயாராகக் காத்திருந்தார் முக்கண் முதல்வர். ஆனால், அவர் வைகுண்டத்தில் நுழைந்ததும் அவருக்கு காணக் கிடைக்காத ஒரு அற்புதமான காட்சி கண்ணில் பட்டது. தலை வாழை இலை பரப்பி, அதில் தனது கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் ஜெகன் மாதா மகாலட்சுமி தேவி. இறைவன், வயிறார உண்டுகொண்டிருந்தார். அவர் உண்ணும் அழகை மறைந்திருந்து ரசித்தார் ஈசன். ஈசன், வைகுண்டம் வந்து மறைந்து நின்று, தன்னை சேவிப்பதை அறிந்தும் அறியாதது போல சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மாலவன்.

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தவர், இலையில், சில பருக்கைகளை வேண்டுமென்றே மீதம் வைத்துவிட்டு எழுந்தார். மகாலட்சுமி தேவியும், இறைவன் கை அலம்பத் தண்ணீர் எடுத்துத்
தர அவர் பின்னாடியே சென்றாள். இதற்குள் மறைவில் இருந்த மகாதேவரது கண்களில் பரந்தாமன், உணவருந்திய இலையும், அதில் இருந்த உணவுப் பொருட்களும் பட்டது. சட்டென்று ஒரு முடிவு செய்தார். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை சுற்றும் முற்றும் பார்த்து ஊர்ஜிதம் செய்துகொண்டு, வேகமாகச் சென்று, இலையில் இருந்த மிச்ச பருக்கைகளை எடுத்து, `மகா பிரசாதம்’ என கருதி கண்களில் ஒற்றிக் கொண்டு வாயில் போட்டுக் கொண்டார்.

நேரிடையாக ‘‘உண்ட மிகுதியை தா’’ என்று மாலவனை கேட்டால், ஈசன்மீது இருக்கும் நன் மதிப்பின் காரணமாக மாலவன் அதற்கு சம்மதிக்க மாட்டார். ஆகவே, இப்படி திருட்டுத் தனமாகதான் ஜெகத் பிதாவான மன் நாராயணன் உண்ட மிகுதியான மகா பிரசாதத்தை உண்ண வேண்டியிருக்கிறது என்று ஈசன் எண்ணினார் போலும். மாலவன் உண்ட மிகுதியை, மகா பிரசாதத்தை உண்ட மகா தேவர், மன நிறைவோடு கைலாயம் சென்றார்.

நவரத்தினம் பதித்த சிம்மாசனத்தில் அவர் பரம கம்பீரமாக அமர்ந்திருக்கும் வேளையில், உள்ளே நுழைந்தார் நாரதர். ஈசனைத் தரிசிக்க வந்த இடத்தில், ஈசனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவர். நேரிடையாக அவரை நோக்கி நடந்து, அவரது சிம்மாசனத்தின் அருகே சென்று, அவரது உதட்டின் கீழே கையை வைத்து எதையோ எடுத்தார். பிறகு சற்றும் யோசிக்காமல் வாயில் போட்டுக்கொண்டு ‘‘மகா பிரசாதம்! மகா பிரசாதம்’’ எனப் புல்லரித்தார்.‘‘என்ன நாரதா சொல்கிறாய்?’’ என்று ஒன்றுமே புரியாதது போலக் கேட்டார் மகாதேவர்.

‘தேவ தேவா.. தாங்கள் வைகுண்டம் சென்று வைகுண்டப் பதி உண்ட மிகுதியை மகா பிரசாதகமாக உண்டீர்கள் இல்லையா?’’ நேரடியாக விஷயத்துக்கு வந்தார் நாரதர். ‘‘ஆமாம்’’ என ஆமோதித்தார் மகாதேவர்.‘‘அப்போது ஒரு பருக்கை தவறிப் போய் தங்கள் தாடியில் மாட்டிக்கொண்டது. மகா பிரசாதம் அல்லவா அது. அது கிடைப்பது பெரும் பாக்கியம் இல்லையா? ஆகவே, தங்களைக் கேட்காமல், தங்கள் தாடிமுடியில் இருந்த பருக்கையை எடுத்து நான் உண்டுவிட்டேன் மகாதேவா! என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று இருகரம் கூப்பி மன்னிப்பு வேண்டினார் நாரதர்.

‘‘நாரதா மகா பிரசாதம் வீணாகக் கூடாது என்று எடுத்து உண்ட உன்னை, நான் எப்படி கோபிக்க முடியும்? அந்த இறைவன் மாலவன் திருவருள் இன்று உனக்கும் எனக்கும் இருந்ததால் அல்லவா நமக்கு இந்த மகா பிரசாதம் கிடைத்தது’’ என்று கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் மகாதேவர். அவரோடு சேர்ந்து நாரதரும், மகாபிரசாதம் கிடைத்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.‘‘நன்றாக இருக்கிறது உங்கள் நாடகம்’’ அந்த இன்பமான வேளையில், கோபத்துடன் ஒலித்தது பார்வதிதேவியின் குரல்.‘‘என்ன தேவி ஆனது?’’ பார்வதியின் கோபத்திற்குக் காரணம் தெரியாமல் மகாதேவர் பதறினார்.

‘‘இறைவன் உண்ட மிகுதியான மகா பிரசாதத்தை, உங்களில் பாதியான எனக்கு தாராமல் நீங்கள் எவ்வாறு உண்ணலாம்? எனக்கும் அந்த மகாபிரசாதத்தை உண்ணும் பாக்கியத்தை தாங்கள் தந்திருக்க வேண்டுமில்லையா மகாதேவா?’’ கண்களில் நீர்வடிய கேட்டாள் பார்வதி. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார் ஈசன்.

ஏமாற்றமும் கோபமும் பொங்க, மாலவனிடம் சென்று நியாயம் கேட்டாள் பார்வதி. ‘‘எனக்கு மகாபிரசாதம் கிட்டும் அளவுக்கு பாக்கியம் இல்லையே’’ என்று மாலவனிடம் சென்று முறையிட்டு வருந்தினாள் தேவி. அவளை கண்டு மனமிரங்கி மாலவன், அவளுக்கு ஒரு வரம் தந்தார். அதன்படி இன்றும், விமலாதேவி என்ற பெயரில், பூரி ஜெகன் நாதர் கோயிலில் சந்நதி கொண்டு இருக்கிறாள் பார்வதிதேவி.

பூரி ஜெகன் நாதர் கோயிலில் கோயில் கொண்டதேவி, ஜெகன் நாதர் உண்ட மிகுதியான மகாபிரசாதத்தை மட்டுமே உண்கிறாள். ஒரு முறை பிரசாதத்தை தவறவிட்டவள் இப்போது தினமும் மூன்று வேளையும் பிரசாதத்தை மட்டுமே உண்கிறாள். பூரி ஜெகன்நாதர் உண்ட பிரசாதம் விமலாதேவிக்கு படைத்த பின்புதான் மகாபிரசாதம் என்ற அந்தஸ்தையே அடைகிறது. ஆகவே, பூரியில் விமலா தேவிக்கு தனி மரியாதை உண்டு.

ஐம்பத்தி ஒரு சக்தி பீடங்களில் இந்த விமலா தேவியின் சந்நதிதான், ‘‘விரஜா மகா சக்தி பீடம்’’ என்ற பெயரில் வழங்கப் பட்டு வருகிறது. சமஸ்கிருத மொழியின் ‘‘ஞ’’ என்னும் எழுத்து இவள் சந்நதியில்தான் உதித்தது. இந்த இடத்தில்தான் சதி தேவியின் தொப்புள் விழுந்தது என்று ஒரு சாராரும், சதிதேவியின் வயிற்றின் மூன்றாவது மடிப்பு இங்குதான் விழுந்தது என்று மற்றொரு சாராரும் சொல்கிறார்கள்.

ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில், ‘‘கோவர்தன மடம்’’ பூரியில்தான் உள்ளது. இந்த மடத்தின் பிரதான தெய்வங்கள், விமலாதேவியும், பூரிஜெகன் நாதரும் தான். அன்னை விமலாதேவி சாந்த ஸ்வரூபிணியாகக் காட்சி தருகிறாள். தாமரை மலர், சாமரம் போன்றவற்றை, மேல் இருகரங்களில் தாங்கி கீழ் இருகரங்களால், அபயமும் வரதமும் காட்டி, அழகே உருவாகக் காட்சிதருகிறாள்.

வருடத்தில் எல்லா நாளும், பூரிஜெகன் நாதரின் பிரசாதத்தை மட்டுமே உண்ணும் இந்த தேவிக்கு, நவராத்திரியின்போது சில தாந்த்ரீக பூஜைகள் நடக்கிறது. அந்த சமயத்தில், இந்த அம்பிகையின் உக்கிரம் அளவுக்கு அதிகமாக இருப்பதால், பெண்களை இந்த அம்பிகையை தரிசிக்கவிடுவது இல்லை. மற்ற நாட்கள் பெண்கள், விமலா தேவியை தரிசிக்கலாம் என்றாலும், நவராத்திரியின்போது அன்னையின் கோபம் அதிகமாக இருப்பதாலும், அந்த கோபத்தை பெண்களால் தாங்க முடியாது என்பதாலும், இந்த கட்டுப்பாடு பூரியில் நிலவுகிறது.

நவராத்திரியின் போது செய்யப்படும் தாந்திரீக வழிபாடு, நடு ராத்திரியிலேயே தொடங்கி விடுமாம். அதேபோல, ஜெகன்நாதர் சந்நதியைத் திறப்பதற்கு முன்பே, அந்த தாந்த்ரீக பூஜைகளை முடித்தும் விடுவார்களாம். அந்த தாந்த்ரீக பூஜை நடக்கும் வேளையில் மட்டும், விமலாதேவி ஜெகன்னாதர் பிரசாதம் இல்லாததை ஏற்றுக்கொள்கிறாள்.இப்படி மகிமைகள் பல பொருந்திய விமலாதேவியையும், பூரி ஜெகன் நாதனையும், நினைத்து, போற்றி வணங்கி நற்கதி அடைவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

The post பிரசாதத்தை மகாபிரசாதமாக மாற்றும் விமலாதேவி appeared first on Dinakaran.

Tags : Vimaladevi ,Vaikundam ,Vaikundap Pati ,Vaikunda ,
× RELATED வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வை. கள்ளபிரான் கோயிலில் கருடசேவை