×

இந்த வார விசேஷங்கள்

பிரதோஷம்

10.12.2023 – ஞாயிறு

சகல தோஷங்களையும் நீக்குவது பிரதோஷ விரதம். (பிற தோஷங்களை நீக்கும் பிரதோஷம்) பாற்கடல் கடைந்த பொழுது திரண்டு வந்த விஷத்தை சிவபெருமான் உண்டு இந்த உலகத்தை காப்பாற்றி `நீலகண்டன்’ என்ற பெயரை பெற்ற காலம்தான் பிரதோஷம். இந்தப் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜிப்பவர்கள், விஷம் போன்ற துன்பங்களிலிருந்து விடுபடுவார்கள். பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து சிவனையும் நந்தியையும் தரிசனம் செய்வதன் மூலமாக சகல பாவங்களும் விலகி நன்மை உண்டாகும்.

பிரதோஷ நாளில், முன்னோர்களை முன்னிட்டு மாலை நேரத்திலே `எம தீபம்’ வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது சிறப்பானதாகும். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி காலதேவனும் மகிழ்ச்சி அடைவான். ஜாதகத்தில் இருக்கக் கூடிய அட்டம தோஷங்களான விபத்துக்கள், திடீர் மரணம் முதலிய ஆபத்துக்கள் சம்பவிக்காது. நோய் நொடியின்றி நீண்ட வாழ்க்கையை வாழலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கார்த்திகை கடைசி சோமவாரம்
11.12.2023 – திங்கள்

சிவனுக்கு `சோமசுந்தரன்’ என்று ஒரு திருநாமம். சோமன் என்பது சந்திரனைக் குறிக்கும். ஒவ்வொரு சோமவாரமும் (திங்கட்கிழமை) சிவனுக்கு விசேஷமான நாள். எனினும் கார்த்திகை மாத சோம வாரம் வெகு சிறப்பு. அதுவும், 4-வது சோமவாரம் அற்புத பலன்களைத் தரக்கூடியது. க்ஷயரோகத்தில் (டி.பி.) துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப் பிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள்.

அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப் பிடிக்கின்றனர்.
சிவாலயங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக் காட்டுகின்றனர். கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண் மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும்.

அமாவாசை
12.12.2023 – செவ்வாய்

இன்று செவ்வாய்க்கிழமையாக இருப்பதாலும், அமாவாசை தினமாக இருப்பதாலும், சனி நட்சத்திரத்துக்குரிய அனுஷ நட்சத்திர தினமாக இருப்பதாலும், முன்னோர்களைக் குறித்த அமாவாசை தர்ப்பணம், இயன்றளவு செய்வதன் மூலமாக, குடும்பத்தில் ஏற்படும் எதிர்பாராத கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். இறைவழிபாடு செய்ய பல நாள்கள் இருந்தாலும்கூட, முன்னோர்களை நினைத்து, அவர்கள் பசியையும் தாகத்தையும் தீர்த்து ஆசிர்வாதம் பெற அமைந்த நாள் அமாவாசை நாள் ஆகும்.

இந்த நாளில் நாம் மற்ற வழிபாடுகளுக்குக் கூட முக்கியத்துவம் தருவதில்லை. குறிப்பாக, வீட்டில் கோலம்கூட போடுவது இல்லை. நம்முடைய நினைவு முழுக்க நம் வீட்டில் உள்ள குல முன்னோர்களை நினைப்பதாகவே இருக்கும். அமாவாசை வழிபாடு என்பது சங்க காலத்தில் இருந்தே உண்டு. ஓடுகின்ற நதிகளின் கரையோரத்தில் சூரியபகவானைச் சாட்சியாக வைத்துக் கொண்டு, சூரியனும் சந்திரனும் சேரும் இந்த நாளில், “பிண்ட பித்ரு” தர்ப்பணம் செய்வது சாலச் சிறந்தது.

அப்படிச் செய்ய முடியாதவர்கள் அன்று வீட்டை தூய்மைப்படுத்தி, விளக்கேற்றி வைத்து, காலை உணவு உண்ணாது விரதமிருந்து, மதியம் தலை வாழை இலை போட்டு, முன்னோர்களுக்கு உணவு படைத்து, அந்த உணவின் சிறு பகுதியை பித்ரு அம்சமாகக் கருதுகின்ற காக்கைக்கு வைத்து விட்டு, உணவு உண்பதன் மூலமாக ஆசீர்வாதத்தைப் பெறலாம். இதுதவிர இந்த நாள் லட்சுமி பிரபோதின விரத தினம். இது மகா லட்சுமிக்கு உகந்த விரத நாள். இந்த நாட்களில் வீட்டில் கலசம் வைத்து, லட்சுமி பூஜை செய்யலாம். குறைந்தபட்சம் மகாலட்சுமி, மகாவிஷ்ணு படத்திற்கு பூ மாலை அணிவித்து, தூப தீபங்கள் காட்டி, பூஜை செய்ய ஏற்ற நாள்.

பூஜையின் பலன் என்னவென்று சொன்னால், நமக்கு வெகு காலம் வராமல் இருந்த கடன் வசூலாகும். தனம் சேரும். வறுமை அகலும் என்று பலன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பகல்பத்து உற்சவம் தொடக்கம்
13.12.2023 – புதன்

திருவரங்கத்திலும் மற்ற எல்லாப் பெருமாள் கோயில்களிலும் `அத்யயன உற்சவம்’ இன்று தொடக்கம். மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள் பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். இதற்கு `திருஅத்யயன உற்சவம்’ என்று பெயர். ஸ்ரீரங்கத்தில் இந்த உற்சவம் நடைபெறும் இருபத்தொரு நாட்களும் விழாக்கோலம் கொண்டிருக்கும். அதன் தொடக்கம்தான் நேற்று திருநெடுந்தாண்டகம். `திருநெடுந்தாண்டகம்’ என்பது திருமங்கையாழ்வாரின் ஆறாவது பிரபந்தம்.

இதை வைணவர்கள் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் என்பார்கள். இந்தப் பிரபந்தத்தை வைத்துத்தான் பராசரபட்டர், வேதாந்தியான மாதவாச்சாரியாரை நஞ்ஜீயர் என்கின்ற ஆச்சாரியராக
மாற்றினார்.

திருமங்கையாழ்வார் இந்தத் திருநெடுந்தாண்டகத்தை பெருமாள் முன்பாடி, அதற்குச் சன்மானமாகத் தான் திருவாய்மொழி உற்சவத்தை நடத்த பெருமாளிடம் அனுமதி பெற்றார் என்பது வரலாறு. இந்த உற்சவத்தின் ஒரு பகுதிதான் வைகுண்ட ஏகாதசி.

மூர்க்க நாயனார் குருபூஜை
14.12.2023 – வியாழன்

63 நாயன்மார்களில் மூர்க்க நாயனார் ஒருவர். அடியார்களில் சாதுவான அடியார்களும் உண்டு. முரட்டுத்தனமான செயல்களால் பக்தி செலுத்தும் அடியார்களும் உண்டு. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அவர்கள் மனதில் விஞ்சி நின்ற பக்தியை மட்டும்தான். அடியார்களின் செயல்முறைகளை ஆராய்வதை விட, அவர்களுடைய மனதில் அழுத்தமாக வெளிப்படும் சிவபக்தியையும், சிவ நெறியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களுடைய நிலையை உள்ளபடி புரிந்து கொள்வது மிகவும் கடினம். நம் நிலையிலிருந்து அவர்கள் நிலையை ஆராய்வதும் தவறாகவே முடியும். மூர்க்க நாயனாரின் கதையும் அப்படிப் பட்டதுதான். தொண்டைமண்டல நாட்டில் திருவேற்காடு என்னும் தலத்தில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் மூர்க்கநாயனார். நிறைய நிலபுலன்கள் அவருக்கு இருந்தன. சிவனடியார்களை வணங்குவதும் அவர்களுக்கு அமுது படைப்பதும் என சிவத் தொண்டில் அவர் மிகுந்த ஊக்கத்தோடு இருந்தார்.

அதனால் அவருடைய கைப்பொருள் கரைந்தது. இனி வேறு வழி இல்லை என்றதும், தான் கற்ற சூது மூலம் பொருள் திரட்டி, தொண்டுகள் விடாது புரிந்து வந்தார். உள்ளூரில் வழியில்லாது அதற்காகவே அவர் குடந்தைக்குச் சென்றார். இதை பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.

`தொண்டைவள நாட்டுவளர் வேற்காட்டூர்வாழ்
தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று
கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்
கொள்கையினார் திருக்குடந்தை குறுகியுள்ளார்
விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள
வெகுண்டிடலான் ‘‘மூர்க்கர்’’ என விளம்பும் நாமம்
எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்
ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே’

அவருடைய ஒரே இலக்கு சிவனடியார்களை பூஜிப்பதும், சிவ நாமத்தை இடைவிடாது உச்சரிப்பதும். சிவனடியார்களை அவமதிக்கும் எந்தச் செயலை யார் செய்தாலும், அவர் கடுமையாக நடந்து கொள்வார் என்பதால் மூர்க்க நாயனார் என்று அழைக்கப்பட்டார். அதனால்தான், அடியார்கள் வரலாற்றை சுருக்கமாக எழுதிய சுந்தரர், தம் திருத் தொண்டத்தொகையில், “மூர்க்கற்கும் அடியேன்” என்று இவருடைய மூர்க்க தன்மையையே பெருமையாகக் குறிப்பிட்டார். அவருடைய குருபூஜை கார்த்திகை மூலம். இன்று. நற்சூதர் என்று இவரை சைவ நெறி சார்ந்த அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

சிறப்புலி நாயனார் குருபூஜை
15.12.2023 – வெள்ளி

நிலையற்ற பொருளைக் கொண்டு நிலைபெற்ற பொருளாக மாற்றும் புண்ணியர்கள் வாழ்ந்த பூமி இந்த பூமி. சுந்தரர் “சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” என்று குறிப்பிடும்படியான மிகப் பெரிய வள்ளலாக வாழ்ந்தவர் சிறப்புலி நாயனார். எல்லா ஆலயங்களிலும் திருமடங்களிலும் கார்த்திகை பூராடத்தில், அவருடைய குருபூஜை தினம். நடக்கிறது. திருக்கடையூருக்கு பக்கத்தில் பூம்புகார் அருகே ஆக்கூர் என்ற ஒரு ஊர் உண்டு. அந்த ஊர் ஈஸ்வரனுக்கு `தான்தோன்றீஸ்வரர்’ என்று பெயர். தான்தோன்றீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென் கரைத் தலங்களில் 46-ஆவது சிவத்தலமாகும்.

இத்தலம் மீது சம்பந்தர் பாடிய தேவாரம் இரண்டாம் திருமுறையிலும், கபிலதேவ நாயனார் பாடிய பாடல் பதினொராம் திருமுறையிலும் உள்ளது. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. இத்தகு பெருமை பெற்ற ஊரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் சிறப்புலி நாயனார். நாள்தோறும் தவறாது ‘நமசிவாய’ என்னும் திருவைந்தெழுத்தை ஓதியும், தம்முடைய குலவழக்கப்படி வேள்விகள் செய்து அதனுடைய பயனை சிவனார்க்கே அர்ப்பணமும் செய்தார்.

சிவபூஜை செய்வதிலும் சிவனடியார்களுக்கு அமுது படைப்பதிலும் உற்றம் சுற்றம் இணைந்து செயல்பட்ட அவர், ஒருமுறை ஆயிரம் அடியார்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும் என்று ஒரு வைராக்கியத்தோடு இருந்தார். பல்வேறு இடங்களில் இருந்து அடியார்கள் இந்த அன்னம் பாலிக்கும் பூஜையில் கலந்து கொள்வதற்காக ஆக்கூர் வந்து சேர்ந்தார்கள். அவர் எண்ணிப் பார்த்தார். 999 அடியார்களே இருந்தார்கள். ஒரு அடியார் வந்தால் பூஜையைத் தொடங்கிவிடலாம் என்று காத்திருந்தார்.

இவருடைய ஊக்கத்தையும் வைராக்கியத்தையும் கண்ட தான்தோன்றீஸ்வரர் தாமே, இந்த அன்னம் பாலிக்கும் பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் என்று வயதான சிவனடியார் வடிவில் வந்து சேர்ந்தார். அதனால், அந்த ஊர் ஈஸ்வரனுக்கு ஆயிரத்தில் ஒருவர் என்ற திருநாமமும் உண்டாயிற்று.

`திருவாக்கூர் அருமறையோர் உலகம் ஏத்தும்
சிறப்புலியார் மறப்புலியார் உரிமேற் செங்கண்
அரவார்த்தார் வருமேற்றார்க்கு அன்பரானார்க்கு
அமுதளிப்பார் ஒளிவெண்ணீறு அணிந்த மார்பர்
பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும்
பெற்றியினார் ஐந்தெழுத்தும் பிறழாது ஓதிக்
கருவாக்கா இறைவந்தாள் இணைகள் சேர்ந்த
கருத்தினார் எனையாவும் திருத்தி னாரே.’

இத்தகு பெருமை பெற்ற சிறப்புலி நாயனார் குரு பூஜை தினம் இன்று.

அபியோக திருதியை
15.12.2023 – வெள்ளி

பொதுவாகவே வளர்பிறை திருதியை திதி, மிகவும் விசேஷமானது. மங்கலகரமானது. திருதியை தினத்தில் எது செய்தாலும் அது மிகச் சிறப்பாக விருத்தியடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. அதனால்தான், அட்சய திருதியை அன்று நாம் பல பொருள்களை வாங்குகிறோம். பல செயல்களை தொடங்குகின்றோம். வாங்கிய பொருளும் தொடங்கிய செயலும் வளரச் செய்யும் கார்த்திகை மாதத்தின் இந்த திருதியை அபியோக திருதியை தினமாகும். சிலர் ரம்பா திருதியை என்றும் சொல்கிறார்கள்.

இன்று அம்பாள் படத்தை வைத்து பூஜித்து மாலையில் விளக்கேற்றி, அம்பாளின் ஸ்தோத்திரங்களையும் பாடல்களையும் சொல்லி வழிபட வேண்டும். இந்த வழிபாடு யோக பலன்களை விருத்தி செய்யும். தொழில்துறை மேம்படும். வியாபார விருத்தி உண்டாகும். திடீர் தலைமைப்பதவி போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Pradosha ,Vrat ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா