×

ஜோதிட ரகசியங்கள்

நியூட்டனின் விதி ஒன்று உண்டு. எந்த வினைக்கும் அதே அளவிலான எதிர்வினை உண்டு என்பதுதான் அந்த விதி. இங்கே இரண்டு விஷயங்கள் முக்கியம். (For every action, there is equal and opposite Reaction) ஒன்று வினை (Action) இரண்டு அதே அளவிலான எதிர்வினை. (Reaction) வினைகளுக்கான எதிர்வினை (Effect and result of karma) தாமதமாகும் போது மட்டும் வினையின் வீரியம் கூடும். அசல் கட்டாமல் இருந்தால் வட்டியோடு கூடி தொகை பெரிதாகிவிடுகிறது அல்லவா.

“படைப்பில் இத்தனை பேதம் ஏன்?” என்கின்ற கேள்வி அனேகமாக எல்லோரும் கேட்கின்றோம். ஆனால், இதற்கு சரியான பதிலை யாராலும் விளக்க முடிய வில்லை. “அது அப்படித்தான்’’ என்று கடந்து விடுகின்றனர். ஆனால், இந்திய சமய மரபு, ஜோதிடத்தின் வெளிச்சத்தில், (in the light of astrology) இதற்கான விடையைக் கூறுகிறது. அதுதான் செயலின் எதிர்விளைவுகள் என்பது. (Result of Karma). இந்த விஷயத்தை ஏனோ புரிந்துகொள்ள மறுக்கிறோம். காரணங்களை புரிந்து கொள்ளாத வரை, அல்லது புரிந்து கொள்ள மறுப்பது வரை, நம்மால் சரியான காரியங்களைச் செய்ய முடியாது.

பேதங்கள் இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்பது மனித குலத்தின் லட்சியம். ஆனால், ஒவ்வொரு விஷயமும் இங்கே பேதங்களோடுதான் இருக்கின்றன. அதே சமயம் தத்துவார்த்த ரீதியில் பேதங்கள் இல்லாத உலகமாகத்தான் இருக்கின்றன. இதில் பேதம் எதில் உண்டு? எதில் பேதம் இல்லை? என்பதை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, புற விஷயங்களில், ஒவ்வொன்றும் பேதத்துடன்தான் இருக்கின்றன. ஆனால் அக விஷயங்களில் பேதங்கள் இல்லை.
ஆன்மாக்களில் பேதம் இல்லை.

யானையின் ஆன்மாவும் ஒன்றுதான். பூனையின் ஆன்மாவும் ஒன்றுதான். ஆனால், உடல் பேதங்கள், நிற பேதங்கள், குணபேதங்கள், உணவு பேதங்கள் என பல பேதங்கள் இருக்கவே செய்கின்றன. ஒன்றினைப் போல் ஒன்று இருப்பதில்லை. ஆன்மாக்களில் ஒன்று குதிரையாகவும், கழுதையாகவும், பன்றியாகவும், பாம்பாகவும், எலியாகவும், புலியாகவும் இருக்கிறது. இப்படி உள்ள யோனி பேதங்களில் மிகச்சிறந்த உடல் பிறவி என்பது மனிதப் பிறவிதான்.

மற்ற உயிர்களுக்கு இல்லாத சிறப்பு மனித உடலில் ஒட்டிய அல்லது மனித உடல் பூட்டி கொண்ட உயிருக்கு ஏன் உண்டு என்றால் அதுதான் பகுத்தறிவு. பகுத்து ஆராயும் அறிவு. இட்டப்படி வாழ்வது மற்ற உயிர்கள். (கர்மாவின் விளைவுகளை மாற்றிகொள்வதோ, தப்பித்துக்கொள்வதோ அதனால் முடியாது. கொடுக் கப்பட்ட வாழ்வை அதன் போக்கிலே வாழும்.)

ஆனால் இட்டது எது என்று தெளிந்து, அடுத்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள வாழ்வது மனித உயிர்கள். இதற்குத்தான் சாஸ்திரங்கள், வேதங்கள், கதைகள் எல்லாமே. அதில் ஒன்றுதான் ஜோதிட சாஸ்திரம். இந்த சாஸ்திரத்தை கொடுத்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. முக்காலமும் உணர்ந்த மகான்கள், ரிஷிகள். பொதுவாகவே ஒரு சாஸ்திரம் அல்லது ஒரு நூலின் தகுதியை மூன்று விதத்தில் ஆராய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

1. வக்ருது வைலட்சண்யம்
2. விஷய வைலட்சண்யம்
3. பிரபந்த வைலட்சண்யம்

இது வேறு ஒன்றும் இல்லை. ஒரு நூல் எந்த பொருளைப் பற்றியது? அந்த பொருள் மனித குலத்தின் உயர்வுக்கு ஏதேனும் வழிகாட்டுவதாக இருக்கிறதா? என்கின்ற விஷயம்தான் விஷய வைலட்சண்யம். அதைப் போலவே அந்த நூலின் இயல்பான சில உள்ளடக்கங்களின் உயர்வு, சொல்லப்பட்ட முறை இவர்களெல்லாம் பிரபந்த வைலட்சண்யத்தில் சேரும். மூன்றாவது முக்கியம்.

அது யார் சொன்னார்கள்? சொன்னவருடைய தகுதி என்ன? என்ன நோக்கத்துக்காக அவர் சொன்னார்? அவருக்கு இந்த மனித உயிர்களை உயர்த்துவதில் நிஜமான ஆர்வம் இருக்கிறதா? அவர் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவரா? என்பதை எல்லாம் வைத்து,” ஓ, இந்த மனிதர் சொல்வதைக் கேட்கலாம்.

இவர் இந்த விஷயம் சொல்வதற்கு தகுதியானவர்தான்” என்ற முடிவுக்கு வருவதுதான் வக்ருது வைலட்சண்யம். நூலாசிரியரின் பெருமை என்று எடுத்துக் கொள்ளலாம். இதை இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒருவர் சொல்லும் விஷயத்தை, இரண்டு கோணங்களில் கவனிக்க வேண்டும் என்று சொல்வார்கள். யார் சொல்கிறார்கள் என்பது, என்ன சொல்கிறார்கள் என்பது, இந்த அடிப் படையில் பார்க்கின்ற பொழுது நமக்கு இந்த ஜோதிட சாஸ்திரத்தை கொடுத்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; முக்காலமும் உணர்ந்த ரிஷிகள்; கடுந்தவம் புரிந்து தங்கள் ஞானத்தினாலே உணர்ந்து, பரிசோதித்து, சில விஷயங்களை இந்த உலகுக்கு கொடுத்தவர்கள் அவர்கள்தான்.

பிரபஞ்ச விதி, இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பொருள்கள், வானமண்டலத்தின் இயக்கம், இந்த இயக்கங்கள் ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்படுத்துகின்ற தாக்கம் போன்றவற்றை ஆராய்ந்து அதை சாஸ்திரமாக அமைத்து கொடுத்தார்கள். ஜோதிட சாஸ்திரத்தை நாம் நம்பலாம்; நம்பாமல் இருக்கலாம்; எல்லா விஷயங்களையும் நம்ப வேண்டும் என்ற கட்டாயம் மனித குலத்துக்கு இல்லை.

ஆனால், அதனுடைய விளைவுகள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையில்தான் ஜோதிட சாஸ்திரத்தின் ஆதாரமான வான மண்டலங்களை 12 ராசிகளாக பிரித்து, ஒவ்வொரு ராசிக்கும் தோராயமாக முப்பது பாகைகள் கொடுத்து, அந்த ராசி கட்டங்களுக்குள், விண்மீன் தொகுதிகளை அமைத்து, அந்த விண்மீன் தொகுதிகளின் ஊடே பயணிக்க கூடிய, நம்முடைய சூரிய மண்டலத்துக்கு நெருக்கமான ஒன்பது கோள்களை அமைத்து, அதனுடைய இயக்கமும், கதிர்களின் அமைப்பும், ஒரு மனிதனின் வாழ்க்கையை, குணங்களை எப்படி எல்லாம் மாற்றுகின்றன என்பதைப் பற்றி ஆராய்ந்து கொடுக்கப்பட்டதுதான் ஜோதிட சாஸ்திரம்.

இதற்காக நம்முடைய ரிஷிகள் பெரு முயற்சி எடுத்தார்கள். அவர்கள் காரணங்களையும் காரியங்களையும் (causes and effects) இணைத்து ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, சில விதிகளை அமைத்துக் கொடுத்தார்கள். இதற்காக தங்களுடைய வாழ்நாள் முழுக்க பயன்படுத்தினார்கள். அதில் பல விஷயங்கள் இப்பொழுது அடுத்தடுத்து வந்தவர்களால் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. (updated and refreshed). அந்த அடிப்படையில், ஜோதிட சாஸ்திரம் என்னதான் சொல்லுகின்றது? இதில் பொதிந்துள்ள ரகசியங்கள் என்ன? இந்த நவகிரகங்கள் என்னதான் சொல்லுகின்றன? மனித வாழ்க்கை இவைகள் எப்படி எல்லாம் கட்டுப்படுத்துகின்றன என்பதை நாம் ஆராய்வோம்.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags : Newton ,
× RELATED ஆசிய திரைப்பட விருதுகளில் 4...