×

வசதியான வாழ்க்கை தரும் மகேந்திரப் பொருத்தம்

இல்லற வாழ்வினை ஏற்கும் முன்னரே பொருத்தங்களை சரியானபடி பார்த்துவிடுதல் நல்லது. வெளி நபர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத சில சூட்சுமமான விஷயங்களையும் இதன்மூலம் சரிசெய்துவிடலாம். ‘சரி, இந்த இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தால் பிரச்னைகளை சுமுகமாகவே தீர்த்துக் கொள்வார்கள்’ என்று நம்பலாம். ‘பையனை நல்ல பள்ளியில் சேர்க்கலாம்; கேட்டதையெல்லாம் கூட வாங்கித் தந்துவிடலாம்; ஆனால், படிக்க வேண்டியது அவன் பொறுப்பு’ என்பது போலத்தான் இது. அதையும் தாண்டி பிரச்னைகள் வந்தால், அவர்கள் எளிதாக எதிர்கொண்டு விடுவார்கள். அந்த திறனை அவர்களுக்குரிய கிரகங்களும், அவற்றின் அதிதேவதைகளும் தந்து விடும். ‘குடும்பப் பின்னணி என்ன… எங்கு வேலை… எத்தனை வருஷம் அனுபவம்… எவ்வளவு சம்பளம்…’ என்று ஜாக்கிரதையாக விசாரிக்கும் அளவுக்கு பொருத்தங்களிலும் கவனம் வையுங்கள். ‘‘எங்களுக்கும் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் செய்தாங்க… ஆனாலும் பிரச்னை வருதே’’ என்று சிலர் கேட்கலாம்.

சிறு சிறு வாக்குவாதங்கள், மெல்லிய சமையலறை புலம்பல்களை பிரச்னைகள் என்று சொல்லாதீர்கள். இதெல்லாம் இருப்பதுதான் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை. அதுகூட இல்லையெனில் வாழ்க்கை பிசு பிசுத்துப் போகும். ‘‘எவ்ளோ கோவப்பட்டாலும் ரெண்டு நாள்ல சரியாப் போயிடும்’’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

பொருத்தம் சரியில்லையெனில், சின்ன விஷயத்துக்காகக்கூட ‘‘நீ வேணவே வேணாம்’’ என்று விவாகரத்து வரை செல்வார்கள். துணையை விட்டு விலகி தனியே வாழ்பவர்களும் உண்டு. ‘‘என்னோட சுதந்திரத்துல என் பொண்டாட்டியே தலையிட்டாக்கூட எனக்குப் பிடிக்காது’’ என்பவர்களின் பின்னணியில் சரியற்ற பொருத்தமும், தவறான கணங்களின் சேர்க்கையும் இருப்பதை மறக்காதீர்கள். யானைக்கு அங்குசம் போல எப்படிப்பட்ட சுபாவம் உள்ளவர்களானாலும், பிடிவாதம் பிடிப்பவர்களானாலும் அவருக்கேற்ற ஜோடியை சேர்க்கும்போது யானை பூனையாக அடங்கும். ‘‘எப்படியெல்லாம் ஆடினான்… இப்போ பொட்டிப் பாம்பா அடங்கிட்டான் பாரு’’ என்பார்கள். பொருத்தம் சரியில்லையெனில் எலியும் பூனையுமாகத்தான் இருப்பார்கள்.

பத்து பொருத்தங்களில் தினப் பொருத்தத்தையும், கணப்பொருத்தத்தையும் பார்த்தோம். இதற்கடுத்து மகேந்திரப் பொருத்தம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். பொதுவாகவே இந்திர எனும் சப்தத்தோடு இந்த வார்த்தை வருகிறது. இந்திரன் மழைக்கும், செல்வத்திற்கும் உரியவன். எனவே இந்தப் பொருத்தம் சரியாக அமைந்து விட்டால், மழை எப்படிப் பொழியுமோ அதுபோல செல்வ வளத்தை அருளும் அம்சத்தை தம்பதியர் பெறுவார்கள். மேலும், சந்தான பாக்கியம் எனும் குழந்தைப்பேறுக்கான பொருத்தத்தையும் இது தீர்மானிக்கிறது. பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து 4,7,10,13,16,19,22,25 என்று எண்ணி வரும் ஆணின் நட்சத்திரங்கள் அனைத்திற்கும் மகேந்திரப் பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம்.

‘‘புருஷன் கலிபோர்னியாவுல இருக்காரு. ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டு ரெண்டு வருஷம் ஆகுது. அப்பப்போ போன்ல பேசறதோட சரி. இருந்தாலும் ஒண்ணா இருந்தப்ப கடந்து போன சந்தோஷமான தருணங்களை அப்பப்ப நினைச்சுப்பேன்’’ என்கிற திருப்தியை இந்த பொருத்தம்தான் தீர்மானிக்கிறது. தூரமோ, அருகிலோ… எங்கிருப்பினும் அன்யோன்யமாக இருப்பார்கள். மகேந்திரப் பொருத்தம் குழந்தை பாக்கியத்தை தீர்மானிக்கிறது என்று சொன்னேன். ‘அப்படியானால் இந்தப் பொருத்தம் இல்லாதவருக்கு குழந்தை பாக்கியம் இருக்காதா’ என்று நீங்கள் கேட்கலாம். அதை பாஸிட்டிவாக கொஞ்சம் பார்ப்போம்.

மகேந்திரப் பொருத்தம் இருப்போருக்கு சத்புத்திரன் பிறப்பான் என்பது துணிபு. ‘படி…படி…’ என்று கையில் மைக் பிடித்துக் கொண்டு கத்த வேண்டாம். அந்தந்த வயதில் அந்தந்த வகுப்புக்குத் தகுந்தவாறு குழந்தை தானாக படிக்கத் தொடங்கி விடும். பிள்ளைகளை எப்போதும் ஃபாலோ பண்ண வேண்டிய அவசியமே இருக்காது. பெற்றோர் பார்த்தாலும், பார்க்காது போனாலும், சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் சிஸ்டமேட்டிக்காக வேலையைப் பார்ப்பார்கள். சுய ஒழுக்கம் மிகுந்திருக்கும். குறைபாடுகள் இல்லாத குழந்தை பிறக்கும். நிறை மாதப் பிரசவத்திற்கும் இந்த மகேந்திரப் பொருத்தம் சரியாக இருப்பது உதவும். இந்தப் பொருத்தம் இருந்தால் நல்லது என்ற அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், எல்லாவற்றையும் இதுவே தீர்மானிக்கிறது என்று சொல்ல முடியாது.

‘‘கல்யாணம் முடிச்சதுலேர்ந்து மடமடன்னு முன்னுக்கு வந்துட்டாரு. அவர் வாழ்க்கையே டர்ன் ஆயிடுச்சு’’ என்று சொல்வதெல்லாம் மகேந்திரப் பொருத்தம் செய்யும் மாயம்தான். சில சமயம் பிள்ளைகள் பற்றி கவலையோடு பெற்றோர் கேட்கும்போதெல்லாம், பெற்றோரின் மகேந்திரப் பொருத்தத்தை நான் கொஞ்சம் கவனிப்பதுண்டு.

மகேந்திரப் பொருத்தத்தை அடுத்து, ஸ்த்ரீ தீர்க்கப் பொருத்தம் என்பதைப் பார்ப்பார்கள். ஸ்த்ரீ என்றால் பெண்; தீர்க்கம் என்றால் வலிமை அல்லது கூர்மை என்று வெவ்வேறு விதமாக பொருள் கொள்ளலாம். இதுவொரு முக்கியமான பொருத்தமாகும். பெண்ணுக்கு வலிமை சேர்க்கும் பொருத்தத்தில் முக்கியமானதாகும். பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் 13க்கு மேல் இருந்தால் ஸ்த்ரீ தீர்க்கம் இருக்கிறது என்பது பொருள். 7,9 நட்சத்திரங்கள் தாண்டினாலே பொருத்தம் இருப்பதாகக் கொள்ளலாம். ‘‘வேலையை விட்டாச்சு. இனிமே என்ன பண்றதுன்னு தெரியலை. இந்த மாசமே நிறைய கமிட்மென்ட் இருக்கு. எனக்கும் மேனேஜருக்கும் தகராறு ஆயிடுச்சு. நான் எவ்ளோ எடுத்துச் சொன்னாலும் என் பேச்சை கேட்க மாட்டேங்கறாங்க. என்ன பண்றது’’ என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு மனைவியைப் பார்த்துக் கேட்கிறார் கணவர்.

‘‘அட போங்க… இதுக்கெல்லாம் போய் கவலைப் பட்டுக்கிட்டு. அந்த வேலை இல்லைன்னா வேற வேலையா கிடைக்காது? முடிஞ்சா வேற கம்பெனிக்கு அப்ளை பண்ணுங்க. நம்மகிட்ட இருக்கறத அடகு வைப்போம். சின்னதா தொழில் தொடங்குவோம்’’ என்று திடமாகவும், தீர்க்கமாகவும் தீர்வு சொல்கிற பெண்ணுக்கு ஸ்த்ரீ தீர்க்கப் பொருத்தம் உள்ளது என்று அர்த்தம். ஆணுக்கே தெம்பைக் கூட்டும் வார்த்தைகளை அவர் பேசுவார். பொருத்தம் இல்லையெனில், ‘‘எங்க போனாலும் உங்களால சும்மா இருக்க முடியாதா… இப்போ இருக்கற வேலையை விட்டு வந்துட்டு… சே!’’ என்று கணவனை இன்னும் எரிச்சலூட்டுவார்.

‘நார்த் சைடு இருக்கற மனையா… சவுத் சைடு இருக்கறதா’ என்று குழம்பும்போதெல்லாம் உதவுவார். ‘இட்லியா… தோசையா…’ என்று ஹோட்டலில் அமர்ந்து ஒரே மாதிரி யோசிக்கையில், ‘அடை அவியல்’ என்று வித்தியாசமாக சொல்வார்கள். ‘பையனை எந்த கோர்ஸில் சேர்க்கலாம்’ என்று குழம்பும்போது, ‘அவனை இ.சி.இ.ல போடுங்க. அதுல அவன் நல்லா வருவான்’ என்று முடிவுகளை எடுக்கும் சாமர்த்தியம் உள்ளவர்களாக இருப்பார்கள். இப்படி ஆண் தடுமாறும்போதெல்லாம் மனைவி தூணாக இருந்தால் ஸ்த்ரீ தீர்க்கம் இருக்கிறது என்று பொருள். மனைவி எடுக்கும் முடிவுகளை உடன்பாட்டோடு ஏற்றுக் கொள்வதும், பிடிக்கவில்லை என்றால் மென்மையாக காரணத்தை விளக்கி மறுக்கும் பண்பும் கணவனிடம் இருக்கும். பொருத்தம் இல்லையெனில், ‘‘எனக்குப் பிடிச்சதை நான் செய்யறேன். உன் இஷ்டப்படி நீ எதையாவது செய்’’ என நறுக்கென்று பேசுவார்கள்.

‘‘என் மனைவி படிக்கலை. சொன்னதை புரிஞ்சுக்கக் கூடிய சக்தியும் போறாது. நீங்க சொல்ற மாதிரி ரொம்ப ஐடியா எல்லாம் சொல்லமாட்டா. ஆனா, எங்களுக்கு ஸ்த்ரீ தீர்க்கப் பொருத்தம் இருக்குங்கறீங்களே. எப்படி?’’ என்று ஒருவர் கேட்டார்.‘‘நீங்க எப்போ சென்னைக்கு வந்தீங்க’’ என்று நான் கேட்டேன். ‘‘பதினாலு வருஷத்துக்கு முந்தி வந்தேன்…’’ என்றார். ‘‘மேடம், அவரா சென்னைக்கு வந்தாரா…’’ என்று மட்டும் அவரின் மனைவியைக் கேட்டேன்.‘‘அதெல்லாம் இல்லை சார். சொந்த ஊர்ல சுமாரான வேலையில இருந்தாரு. என்ன செய்யறதுன்னு முழிச்சுக்கிட்டிருந்தாரு. வாங்க மெட்ராசுக்கு போகலாம்னு நான் நச்சரிச்சு இங்க கூட்டி வந்தேன். என் பேச்சை கேட்டு வந்ததுனாலதானே சொந்த வீடு, கார்னு சுகமா இருக்கோம்’’ என்றார்.

‘‘அந்த ஒரு விஷயத்தை மட்டும்தான் இவ ஒழுங்கா சொன்னா சார். நான் சொந்த ஊரைவிட்டு வர ஐடியாவே இல்லாம இருந்தேன். முப்பது வருஷமா இருந்த ஊரைவிட்டு எப்படி வர்றதுன்னு இருந்தேன்’’ என்று அவரே மனைவியின் ஆலோசனையை பெருமை பொங்கக் கூறினார். ‘‘இப்படி உங்க தலையெழுத்தையே மாத்தின உங்க மனைவிக்கு உதவினது அந்த “ஸ்த்ரீ தீர்க்கப் பொருத்தம்’’ என்றபோது நண்பர் ஆடிப் போனார். வாழ்க்கைத் துணைவர் அறிவாளியா, படிக்காதவரா என்பதெல்லாம் இல்லை. இந்தப் பொருத்தம் இருப்பின் இம்மாதிரி ஆலோசனைகளும், உதவிகளும் நிச்சயம் இருக்கும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமையும்.

‘‘எத்தனை வரன் வந்தாலும் இந்த மகேந்திரமும், ஸ்த்ரீ தீர்க்கமும் சரியில்லைன்னு ஜோசியர் சொல்றாரு’’ என்று கூர்மையாகப் பேசுபவர்களை நான் அறிவேன். இப்போதெல்லாம் பலரும் குறைந்த அளவாவது ஜோதிடம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ‘‘நானே எல்லாத்தையும் பார்த்துட்டேன்… இந்த விஷயம் மட்டும் கொஞ்சம் இடிக்குது. பரவாயில்லை சேர்க்கலாம்னு நீங்க சொன்னா சேர்த்துடுவேன்’’ என்று பேசுபவர்களும் உண்டு.

மகேந்திரப் பொருத்தம் சரியாக அமையவும், ஸ்த்ரீ தீர்க்கப் பொருத்தம் வலிமையாக அமையவும் செல்ல வேண்டிய ஆலயமே கீழ்வேளூர் என்கிற கீவளூர் தலமாகும். செல்வ வளத்தை அதிகரிக்கும் மகேந்திரப் பொருத்தத்திற்கு இத்தலத்தில் தனிச் சந்நதியில் எழுந்தருளியுள்ள குபேரனை வழிபடுங்கள். குபேரனே, தான் இழந்த எல்லா சொத்துக்களையும் மீட்க இத்தல ஈசனான கேடிலியப்பரை பூஜித்ததாக புராணம் கூறுகிறது.

இக்கோயிலின் இறைவி வனமுலை நாயகி எனும் திருநாமத்தோடு அருள்கிறாள். இத்தலத்தில் வடகிழக்கில் அஞ்சுவட்டத்தம்மை எனும் திருநாமத்தோடு பத்ரகாளியாக காட்சியளிக்கிறாள் அன்னை. பெயர்தான் பத்ரகாளி. ஆனால், பேரன்புமிக்க தாய். முடிவெடுப்பதில் குழப்பம் இருப்பின் இவளிடத்தில் கேட்கலாம். பெண்கள் தங்களின் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கும் அன்னையாக இவளை வழிபடுகிறார்கள். வேண்டியதைக் குறையாது கொடுக்கும் கொடை வள்ளலாக விளங்குகிறாள். ஸ்த்ரீ தீர்க்கப் பொருத்தம் சரியாக அமைய இந்த அஞ்சு வட்டத்தம்மையை தரிசியுங்கள். திருமணமாகாத ஆண்கள், ‘‘ஸ்த்ரீ தீர்க்கப் பொருத்தம் சரியானபடி அமையும் மனைவியைக் கொடு’’ என்று பிரார்த்தனை செய்யலாம். நாகப்பட்டினம் – திருவாரூர் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.

The post வசதியான வாழ்க்கை தரும் மகேந்திரப் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Mahendra ,
× RELATED செங்கல்பட்டில் தனியார் கம்பெனி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை