பெரம்பலூர்,டிச.1: திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் உயர்மட்ட மேம்பாலத்திற்கு கீழே புதிய குகைப்பாதை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை இரூர்- ஆலத்தூர்கேட் பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து தற்போது ரூ. 25.22 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் பாலம் சுமார் 500 மீட்டர் நீளத்தில் அமைகிறது. பாலத்தின்கீழ் காரை பிரிவுரோடு பகுதியிலும், ஆலத்துார் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலும் என இரண்டு இடங்களில் பாலத்தின் அடியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் பாதைகள் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், அப்பகுதி பொதுமக்கள் பாலத்தின் அடியில் செட்டிக்குளம் பிரிவுரோடு எதிரேயும், ஆலத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரேயும் வாகனங்கள் சென்று வரும் வகையில் பாதைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பாலம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இது குறித்து நேற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இரூர் கிராம பொதுமக்களுடன் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது உயர்மட்ட பாலம் அமைக்க உரிய ஆய்வு செய்யப்பட்டு பாலத்திற்கான மாதிரி வடிவம் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தால் ஒப்புதல் பெறப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உயர் மட்ட பாலத்தின் கீழே பொதுமக்கள் எளிதில் சென்றுவர 2 இடங்களில் பாதை அமைக்கும் வகையில்தான் வடிவமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அமைப்பை மாற்றுவதற்கு மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும். பொதுமக்கள் கேட்கும் வகையில் 2 கூடுதல் பாதைகள் அமைத்தால் பாலத்தின் நீளத்தை இன்னும் அதிகமாக்க நேரிடும். இதற்காக ஆகும் செலவை மறு மதிப்பீடுசெய்து அதற்கான அனுமதி வாங்குவதற்கு கூடுதல் காலம் தேவைப்படும். இதனால் பாலம் அமைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கலெக்டரும், எம்எல்ஏவும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர். பாலத்தின் அடியில் பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக பாலத்தின் கீழே ஏற்கனவே இரண்டு இடங்களில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர் கோரிக்கைகள் வைத்ததன் அடிப்படையில் நமது மாவட்டத்திற்கு உயர்மட்ட பாலம் கிடைத்திருக்கிறது. எனவே பாலப் பணிகள் தொடர்ந்து நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பொதுமக்களின் வேண்டுகோளை பரிந்துரைத்து 2024 மார்ச்சுக்குள் அப்ரூவல் வாங்கித் தருவதாக உறுதியளித்தனர். இதை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டதால் பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்தது.
பேச்சு வார்த்தையில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியர் (பொ) சத்திய பாலகங்காதரன், தேசிய நெடுஞ்சாலைத்துறை மேலாளர்கள் சிவசங்கரன், ராகுல், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்கொடி, இமயவரம்பன், தாசில்தார் சத்தியமூர்த்தி, விஏஓ ராஜ்மோகன், ஊராட்சித் தலைவர் காந்திமதி ஆசைத் தம்பி, வார்டு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சுரேஷ்குமார், தர்மலிங்கம், பாஸ்கர், செந்தில், அருண், ராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட அமைப்பை மாற்றுவதற்கு மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும். பொதுமக்கள் கேட்கும் வகையில் 2 கூடுதல் பாதைகள் அமைத்தால் பாலத்தின் நீளத்தை இன்னும் அதிகமாக்க நேரிடும். இதற்காக ஆகும் செலவை மறு மதிப்பீடுசெய்து அதற்கான அனுமதி வாங்குவதற்கு கூடுதல் காலம் தேவைப்படும்.
The post அதிகாரிகள் உறுதியை பொதுமக்கள் ஏற்பு appeared first on Dinakaran.
