×

டி 20 கிரிக்கெட்; ரோகித், கோலிக்கு இடம் உண்டா?.. பிசிசிஐ எடுத்த முடிவு


மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடர்ந்து விளையாடுவது குறித்த முடிவை அவர்களிடமே பிசிசிஐ விட்டுவிட்டதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்தது. அதன்பின் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதற்கு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் கவனத்தை திருப்பியதே காரணமாக பார்க்கப்பட்டது.

இதனால் இந்திய டி20 அணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் கட்டமைக்கப்பட்டது. தற்போது உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் அடுத்த டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்திய டி20 அணியை முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு கட்டமைக்க ஆலோசித்து வருகிறது. எப்படி 2007ஆம் ஆண்டு சீனியர் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், கும்ப்ளே உள்ளிட்ட சீனியர்கள் தானாகவே முன்வந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகினார்களோ, அதேபோல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விலகும் முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால் பிசிசிஐ தரப்பில் சர்வதேச டி20 கிரிக்கெட்டை தொடர்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்த முடிவு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு கிட்டத்தட்ட 37 வயதாகிவிட்ட நிலையில், இனி சர்வதேச டி20 கிரிக்கெட்டை தொடர வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. அதேபோல் விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த முடிவாக இருந்தாலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டி 20 கிரிக்கெட்; ரோகித், கோலிக்கு இடம் உண்டா?.. பிசிசிஐ எடுத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : T20 ,ROKIT ,GOLI ,BCCI ,Mumbai ,Rogit Sharma ,Virat Kohli ,Kohli ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்