×

அருணாசலமென அகமே நினையுங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வணக்கம் நலந்தானே!

அருணாசலமென அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா.
– இது பகவான் ரமணரின் வாக்கு.

ஒரு ஜீவனுக்கு இறைவன் அளிக்கும் மிக உயர்ந்த உதவி என்னவெனில் அந்த ஜீவனின் அகந்தையை அழிப்பதேயாகும். ஒரு தவத்தில் இறைவனிடமிருந்து ஒரு அணு அளவு ஏதேனும் வரத்தை பெறலாம். அப்போதும் அங்கு அகந்தை இருக்கின்றது. ஆனால், இந்த அகந்தையை நீக்குவது என்பதற்கு முன்னால் வரங்களெல்லாம் ஒன்றுமே இல்லை. ஏனெனில், நான், எனது என்ற அகந்தை நீங்கும்போது ஜீவன் சிவனாகிறான்.

இந்த பாடலை கவனியுங்கள். அருணாசலமென அகமே நினைப்பவர் எனும் வரியில் பகவானின் சொந்த அனுபவம் உள்ளது. ஏனெனில், பகவானே மதுரையில் அருணாசலம் என்று நினைத்தவுடன் மரணானுபவம் உற்றதும் அதற்குப் பிறகு உடல் இறந்தாலும் அந்த நான் என்பது எப்போதும் இருப்பதாகவும் மிக உயர்ந்த நிலையை எய்தினார். அதனால், நமக்கும் அந்த அருணாசலம் எனும் நாமத்தை ரத்தினம் போல் அளிக்கின்றார். இந்த நாமத்தில் அப்படி என்னதான் உள்ளது.

‘‘பஞ்சாட்சர மந்திரமான நமச்சிவாய என்பதை அறிந்திருப்பீர்கள். அதுபோலவே ஞான பஞ்சாட்சரமாக விளங்குவதே அருணாசலம் எனும் நாமமாகும். இந்த அருணாசலத்தை வலம் வரும்போது இந்த நாமத்தை ஒருமுகப்பட்ட வேறெந்த சிந்தனைக்கும் முக்கியத்துவம் அளிக்காது, மனம் நழுவிச் செல்லும்போதெல்லாம் இழுத்துப் பிடித்து இந்த நாமத்தை ஜபித்தபடி இருங்கள். எல்லாவற்றிலும் சிறந்தது மானசீக ஜபமாகும். வாயால் ஓசை வெளியே கேட்காமல், நாவை உருட்டி மெல்லியதாக சொல்லாமல் மனதாலேயே ஜபிப்பது உத்தமமான ஜபிக்கும் முறையாகும்.

எனவே, மெல்லச் சொல்லுங்கள். பக்தி எனும்போதே அங்கு அன்பு இயல்பாக வந்துவிடும். எனவே, அன்போடு நான் எனும் அகந்தையை இறைவனுக்கு சமர்ப்பித்துவிட வேண்டும். அதாவது இங்கு அன்பு என்பது தன் அகந்தை எனும் நானை பலி கொடுப்பதற்கு சம்மதிப்பதேயாகும். ஏனெனில், ஆத்ம சொரூபத்திலிருந்து உதித்தெழுந்த இந்த அகந்தை நாமல்ல எனும் திடசித்தமான விவேக உணர்வே இந்த அகந்தையை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த அன்பு என்கிற சரணாகதியோடு, அருணாசல நாமம் எனும் இறைவனையும் சேர்க்கும்போதே ஆன்ம நிஷ்டை எளிதாக சித்திக்கும்.

கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)

The post அருணாசலமென அகமே நினையுங்கள்! appeared first on Dinakaran.

Tags : Arunachala ,Kumkunum ,Anmigam ,Arunasala ,Lord ,Ramana's… ,Arunachalamena Agame ,
× RELATED அறிந்த தலம் அரிய தகவல்கள்