×

அறிந்த தலம் அரிய தகவல்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கானப்பேரெயில் எனும் காளையார் கோவில்

*சிவபெருமான் காளை வடிவம் கொண்டு, கையில் பொற்செண்டும் திருமுடியில் சுழியும் கொண்டு, சுந்தரருக்குக் காட்சி தந்து, ‘‘யாம் இருப்பது கானப்பேரூர்’’ என்று கூறி ஆற்றுப்படுத்திய திருத்தலம் – கானப்பேரெயில் எனும் காளையார்கோயில்.

*சங்ககாலத்திலேயே இத்திருத்தலம் ‘கானப்பேரெயில்’ எனும் திருநாமத்துடன் விளங்கியது.

*உக்கிரப்பெருவழுதி எனும் வீரம் நிறைந்த மன்னருக்குக் கோட்டையாகத் திகழ்ந்தது இத்திருத்தலம்.

*இத்திருக்கோயிலில் மூன்று சந்நதிகள் உள்ளன.

1. காளீஸ்வரர்- சொர்ண வல்லி.
2. சோமேசர்-சௌந்தர நாயகி
3. சுந்தரேசர்-மீனாட்சி

*முதல் சந்நதி நடுவிலும்; இரண்டாவது சந்நதி வலது பக்கத்திலும்; மூன்றாவது சந்நதி இடது பக்கத்திலும் உள்ளன. இவர்களில் தேவாரப்பாடல் பெற்றவர்
காளீஸ்வரரே.

*சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் முதலானவர்களின் பாடல்களைப் பெற்ற திருத்தலம் இது.

*கோவிலின் நில புலன்கள் எல்லாம் காளீஸ்வரர் பெயரிலேயே உள்ளன.

*இங்குள்ள இந்த மூன்று சந்நதிகளை ஒட்டி வழங்கும் பழமொழி; ‘காளை தேட, சோமர் அழிக்க, சொக்கர் சுகிக்க’ என்பது.

*சொத்து முதலானவைகள் காளீஸ்வரர் பேரில் இருந்தாலும், சோமேசர் தான் திருவீதி உலா வரும் காலங்களில் உயர்ந்த ஆடைகளுடன் பற்பல ஆபரணங்கள் ஜொலிக்க திருவீதிஉலா வருவார்; பலவிதமான படையல்கள் எல்லாம் சுந்தரேசர் எனப்படும் சொக்கருக்குத்தான். அதன் காரணமாகவே அந்தப் பழமொழி உருவானது.

*அகத்தியருக்குச் சிவபெருமானே ஞான உபதேசம் செய்த திருத்தலம் இது. அதன் காரணமாக இத்திருத்தலத்திற்கு ‘அகத்திய க்ஷேத்திரம்’ என்ற திருநாமமும் உண்டு. மந்திர உபதேசம் பெற்றவர்கள் இத்தலத்தில் வந்து ஜபம் செய்தால், அது பன்மடங்காகப் பெருகும்.

*சண்டாசுரன் எனும் கொடுமையான அரக்கனை அன்னை காளி சங்காரம் செய்த திருத்தலம் இது. அதையொட்டிப் பல நிகழ்வுகள் நடந்தேறின. இந்தத் திருத் தலத்தைச் சுற்றியுள்ள ஊர்களின் பெயர்கள், அந்நிகழ்வுகளின் காரணமாகவே உண்டானவை.

*தேவர்கள் அம்பிகையைக் கண்ட இடம் – கண்டதேவி எனும் ஊர்.

*தேவி வீற்றிருக்கும்படியாகத் தேவர்களால் கோட்டை நிர்மாணம் செய்யப்பட்ட இடமே – தேவிகோட்டை.

*காளி வடிவம் கொண்ட அன்னை தவம் செய்த இடம்-தாலவனம்.

*அங்குள்ள தீர்த்தம், அம்பிகை நீராடித் தவம் செய்த தீர்த்தம்- பாற்குளம்.

*அன்னை காளி, சண்டனை வெற்றிகொண்ட இடம்-வெற்றியூர்.

*சண்டாசுரன் தேர்க்கொடி முறிந்த இடம்-கொடிக்குளம்.

*சண்டாசுரனின் சரங்(அம்பு)கள் வீழ்ந்த இடம் – சராளி; அவன் மாண்ட இடம்-மாளக்கண்டான்.

*சண்டாசுரனைக் கொன்று தங்களுக்கு அருள்புரிந்த அன்னை காளி மேல் தேவர்கள் பூமாரி பொழிந்த இடம்-பூங்கொடி.

*மேஷ மாதம்-திரயோதசி-உத்திர நட்சத்திரம்-சோமவாரத்தன்று அன்னை சொர்ணவல்லிக்கும் காளீசருக்கும் இங்கே திருமணம் நடந்தது.

*சுவர்ண காளீசர்-இடப்பாகம் சொர்ண வடிவம்; வலப்பக்கம்-கருமை வடிவம் என அமைந்த திருத்தலம் இது.

*தீர்த்த மகிமை: இங்குள்ள தீர்த்தங்கள் பல. அவற்றில் ஒரு சில: இங்குள்ள ‘சரஸ்வதி’ தீர்த்தம் என்பதில் மூழ்கி காளீசரை வழிபட்டால் கல்விச்செல்வம் பெறலாம்.

*இங்குள்ள ‘லட்சுமி’ தீர்த்தத்தில் நீராடி காளீசரை வழிபட்டால், செல்வ வசதிகள் அனைத்தையும் பெறலாம்;
வெள்ளிக்கிழமை விசேஷம்.

*பஞ்சமுக விசேஷம்: சிவ பெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்ற ஐந்து திருமுகங்கள் உண்டு. இதனால் அவர்
‘பஞ்ச முகேஸ்வரன்’ எனப்படுகிறார்.

*மிகவும் பழைமையான ‘காளையார் கோவில் தல மான்மியம்’ சிவபெருமானின் அந்த ஐந்து திருமுகங்களுக்கும் வண்ணம்-குணம்-பருவம் எனும் அற்புதமான
தகவல்கள் பலவற்றை விவரித்துள்ளது.

*காளையார் கோவில் ஆலயம்-ஊரைச்சுற்றிப் பலர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, வழிபாடு செய்திருக்கிறார்கள். அந்தத் தகவல்களைப் பழைமையான ‘காளையார் கோவில் மான்மியம்’ என்ற நூல், விரிவாகச் சொல்கிறது. அத்தகவல்கள்…

*திருமால், கண்டதேவி எனும் தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். அதற்கு ‘விண்டு வீச்சுரம்’ என்று பெயர்.

*சிருங்கபுரம் என்னும் தலத்தில், அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ‘அகத்தீச்சுரம்’ எனும் சிவலிங்கம் உள்ளது.

*வசிட்டரும் அருந்ததியும் தங்கள் பெயரால் இரு சிவலிங்கங்களைச் சோதி வனத்தில் ஸ்தாபித்தார்கள்.

*தாரகனைக் கொன்ற இடத்தில் இந்திரன் தன் பெயரால் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்தார்.

*தென்கிழக்கில் அகத்தியர் தன் பெயரால் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்தார்.

*சோதி வனத்தில் பிரம்மதேவர் தன் பெயரால் ஒரு சிவ லிங்கத்தை ஸ்தாபித்தார்.அதற்குச் சற்று தூரத்தில் லட்சுமிதேவி தன் பெயரால் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அதற்குச் சற்று தூரத்தில் அக்னி பகவான் இரு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

*வெற்றியூரில் கலைமகள் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

*பூங்குடி எனும் தலத்தில் குபேரனும் மார்க்கண்டேயரும் இரு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள்.

*காளையார் கோவிலைப்பற்றி வடமொழியில் உள்ள ஸ்காந்த புராணம், சங்கர ஸம்ஹிதை முதலான நூல்கள் பல அபூர்வமான தகவல்களை விவரிக்கின்றன.

*மருது சகோதரர்கள் தீவிரபக்தி: ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை-அட்டூழியங்களை மிகவும் தீவிரமாக எதிர்த்தவர்கள் – மருது சகோதரர்கள். இருவரும் காளையார் கோவில் ஈசரிடம் எல்லையற்ற பக்தி கொண்டவர்கள். அவர்களைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர்கள் மிகவும் திண்டாடினார்கள்.

*கடைசியில், உடன் இருந்தவர்களின் வஞ்சனையால் அச்சகோதரர்கள் மடக்கப் பட்டார்கள். ஆம்! மருது சகோதரர்களின் பக்தியை-காளையார் கோயில் ஈசரிடம் அவர்கள் கொண்ட பக்தியை அறிந்த ஆங்கிலேயர், ‘‘மருது சகோதரர்கள் உடனடியாக வந்து சரணடையா விட்டால், காளையார்கோவில் ஆலயத்தை முழுமையாகத் தரைமட்டமாக்குவோம்’’என்று அறிவித்தார்கள்.

*தகவல் அறிந்த மருது சகோதரர்கள் வந்து நிபந்தனையுடன் சரணடைந்தார்கள்; ‘‘நாங்கள் அளித்த அற-தர்மச்செயல்களை எந்தக் காலத்திலும் தடைசெய்யக் கூடாது. நாங்கள் இறந்த பின் எங்கள் உடலைத் திருப்பத்தூரிலும்; தலைகள் காளையார் கோயில் ஆலயத்தின் எதிரிலும் புதைக்கப்பட வேண்டும்’’ என்று நிபந்தனை விதித்தார்கள்.

*அதன்படியே அவர்கள் இருவரும் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட பின், அவர்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.

*திருப்பத்தூரிலும் காளையார் கோவிலிலும் மருது சகோதரர்களின் சமாதிக் கோவில்களும் மண்டபங்களும் இன்றும் உள்ளன.

*தெய்வபக்தியுடன் தேசபக்தியும் உள்ளவர்கள், இன்றும் அங்கே சென்று வழிபாடு செய்து வருகிறார்கள்.

*தெய்வபக்தியுடன் தேசபக்தியிலும் சிறப்புற்று விளங்குவது-காளையார் கோவில்.

தொகுப்பு: பி.என். பிரசுராமன்

The post அறிந்த தலம் அரிய தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Kungumum Anmigam Kanapperail Kalaiyar Temple ,Lord ,Shiva ,Tirumudi ,Sundarar ,Kanapperur ,Kanapperail.… ,
× RELATED ரிஷபத்தால் தோன்றிய ரிஷபபுரீஸ்வரர்