×

புதுச்சேரி அருகே பயங்கரம் தாலிசரடால் கழுத்தை இறுக்கி பெண் படுகொலை

திருபுவனை, நவ. 22: புதுச்சேரி அருகே கரும்பு தோட்டத்தில் தாலிசரடால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதூர் கிராமத்தில் நேற்று மாலை கரும்பு தோட்டத்தில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை நேற்று மாலை அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து ஊர்மக்களுக்கும், கண்டமங்கலம் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீடு வரைக்கும் ஓடி நின்றது.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், நவமால் மருதூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மனைவி மலர்(45) என்பதும், புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்ததும் தெரியவந்தது. கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. வழக்கமாக மலர் புதுச்சேரியில் பணியை முடித்துவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவாராம். இது போன்ற சூழலில் நேற்று மாலை கரும்பு தோட்டத்தில் தாலிசரடால் கழுத்தை இறுக்கி மலர் கொல்லப்பட்டிருப்பது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாலிசரடும் திருடு போகாததால், நகைக்காக இந்த கொலை நடக்கவில்லை. மலருக்கு நன்கு அறிமுகமானவர்களே அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து அவரது கணவர் பாண்டியன் மற்றும் உறவினர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன மலருக்கு இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்களுடன் கூட்டுக்குடும்பமாக அதே கிராமத்தில் மலர் வசித்து வருகிறார். கணவர் பண்டியன் விவசாய கூலி வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிராமத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு மலர் ஏன் வந்தார்?. அல்லது யாரேனும் வேறு இடத்தில் வைத்து அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றனரா? என்பது குறித்தும் கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி அருகே பயங்கரம் தாலிசரடால் கழுத்தை இறுக்கி பெண் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Tirupuvanai ,Puducherry Village ,
× RELATED புதுச்சேரி அரசு முழு பட்ஜெட் தாக்கல்...