- அரசு பள்ளி கொத்தபுரிநத்தம்
- திருப்பூவணை
- அரசு பள்ளி கொத்தபுரிநத்தம்
- திருப்புவனை
- அரசு உயர்நிலை பள்ளி
- கொத்தபுரிநாதம்
- திருவண்டார்கோவில்
- திருப்புவனை, புதுச்சேரி
- கொத்தபுரிநத்தம் அரசு பள்ளி
திருபுவனை, ஜூலை. 16: திருபுவனை அருகே கொத்தபுரிநத்தம் அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி, திருபுவனை அருகே உள்ள திருவண்டார்கோவில் அடுத்த கொத்தபுரிநத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பத்தாம் வகுப்பு தொடங்கிய காலத்தில் இருந்து 100 சதவீத தேர்ச்சி பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஆங்கில பாடப்பிரிவு ஆசிரியர், அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர், இல்லாததால் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் பள்ளிக்கு காவலர்கள் இல்லை. துப்புரவு பணியாளர்களும் கிடையாது. கழிவறை சுத்தம் செய்வதற்கும் ஆள் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துள்ளது. அவர்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இப்பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும், காவலர்கள், சுகாதார ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஆவேசமடைந்த மாணவர்கள் நேற்று காலை பள்ளிக்கு வந்ததும் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். பின்னர் திருவாண்டார்கோவில்-கொத்தபுரிநத்தம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் மாணவர்களின் பெற்றோரும் அங்கு வந்து மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சிஇஓ வந்து எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிட முடியும் என மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் முதன்மை கல்வி அலுவலர் மோகன் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பிறகு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். இதனால் காலை 9 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post கொத்தபுரிநத்தம் அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.