×

குலதெய்வ வழிபாடு நிகழ்ச்சிக்காக வீட்டில் பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: குடியாத்தம் அருகே சோகம்

 

குடியாத்தம், நவ.19: குடியாத்தம் அருகே குலதெய்வ வழிபாடு நிகழ்ச்சிக்காக வீட்டில் பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மொகிலி(39), கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவரது வீட்டில் இன்று குலதெய்வ வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நீண்ட தூரம் உள்ள உறவினர்கள் நேற்றே வீட்டிற்கு வந்து தங்கினர்.

இந்நிலையில் குலதெய்வ வழிபாட்டிற்காக வீட்டின் மாடியில் நேற்று பந்தல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொகிலி மற்றும் அவரது உறவினரான பெங்களூரை சேர்ந்த கிஷோர்(22) ஆகிய இருவரும் இரும்பு பைப்புகளை மாடிக்கு எடுத்து சென்றனர். அப்போது உயர் மின் அழுத்த கம்பி, இரும்பு பைப் மீது உரசியதில் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று குலதெய்வ வழிபாடு செய்ய உள்ள நிலையில், 2 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post குலதெய்வ வழிபாடு நிகழ்ச்சிக்காக வீட்டில் பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி: குடியாத்தம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...