×

டாரட் கணிப்பாளர்கள் வழிகாட்டிகள்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

டாரட் ஜோதிடர்கள் தன்னை நாடி வரும் வாடிக்கையாளருக்கு தீர்வு சொல்லும் ஒரு வாழ்க்கை வழிகாட்டி அவ்வளவுதான். வாடிக்கையாளருக்கு ஏற்படும் நற்பலன்களே டாரட் கணிப்பாளரின் எதிர்காலம். இவர்களுக்கும் சில விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. டாரட் கணிப்பாளரின் நோக்கம் நல்ல தீர்வாக இருக்க வேண்டும். வருகின்ற வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை தம் பிரச்னைகளாக பாவித்து தீர்வுகள் சொல்லும் டாரட் கணிப்பாளர் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்றுதான் பொருள்.

டாரட் பலன்களை அறிந்து கொள்ளும் முன்பு டாரட் பலன்களுக்காக தயாராகும் முறை என்று உள்ளது. டாரட் பலன்களுக்கு தயாராவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை ஒரு டாரட் கணிப்பாளர் செய்வது நியதியாகும். அதாவது,

* டாரட் ஜோதிடர் தன்னை தானே தயார் செய்து கொள்ளல்

* டாரட் துருப்பு சீட்டுகளை கையாள்வது

* டாரட் துருப்பு சீட்டுகளில் இருந்து தீர்வுகள் கண்டறிதல் போன்றவையாகும்.

டாரட் ஜோதிடர் தன்னை தானே தயார் செய்து கொள்ளல்: டாரட் தனது உள்ளுணர்வுகளை மேம்படுத்தும் திறன் உடையவராக இருக்க வேண்டும்.

உள்ளுணர்வுகளிலிருந்து கிடைக்கும் பலன்களோடு தனது டாரட் கார்டுகளின் பலன்களையும் பிரபஞ்சம் திறம்பட ஏற்படுத்திக் கொடுக்கும். அவ்வாறு பிரபஞ்சத்தின் சக்தியை உணரவும் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்துக் கொள்வதற்கு எப்பொழுதும் தயார் நிலையிலும் ஒவ்வொரு முறையும் தன்னை தயார்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

* தங்களின் இஷ்டமான உபாசனை தெய்வங்களை வணங்கிக் கொள்வது எப்போதும் அவசியம். நாடி சுத்தி பயிற்சி மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வது மனத்தை தெளிவாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த வழிமுறை.

* மனமானது சலனமில்லாமல் இருக்க வேண்டும். கோபம், பேராசை, பொறாமை போன்றவைகளால் பாதிக்கப்படாமல் தங்களை தாங்களே தயார் செய்து கொள்ளல் அவசியம். எதிர்மறை எண்ணங்களுக்கான காரணங்களை அறிந்து கொள்வது அவசியம். தினந்தோறும் தங்களை தாங்களே பயிற்சி செய்து கொள்வது அவசியம்.

* வாடிக்கையாளர்களுக்கு பலன்களை எடுத்துரைக்கும் போது நேராக அமர்வதும் கால்களை நேராக தரையில் வைத்துக் கொள்வதும் கண்டிப்பாக தேவை. இது பிரபஞ்ச சக்தியை நீங்கள் பெறுவதற்கு தயாராகும் ஒரு வஸ்துவாக டாரட் ஜோதிடர் தங்களை வைத்துக் கொள்வது அவசியம்.

* நீங்கள் தீர்வுகள் அல்லது ஆலோசனை சொல்லுமிடம் பிரபஞ்சத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். எந்தவித தொந்தரவுகள் இல்லாதவாறு தீர்வுகள் சொல்லும் இடம் வேண்டும். எதிர்மறை சக்திகள் உள்ள இடத்தில் நீங்கள் ஆலோசனை கூறும் இடம் இருக்கக்கூடாது.

* மழை மற்றும் அதிகம் பனி பொழியும் நாட்கள், பௌர்ணமி, மனதில் சலனம் உள்ள நாட்கள் மற்றும் உங்கள் உள்ளுணர்வில் பலன்கள் சொல்ல வேண்டாம் என்ற எண்ணங்கள் வந்தால் வாடிக்கையாளர்களுக்கு தீர்வுகளையோ ஆலோசனைகளையோ சொல்வதை தவிர்க்க வேண்டும். மேசை நாற்காலியில் அமர்ந்து பலன் சொல்வதே சிறப்பு. அதிகமாக இரும்பு மற்றும் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களை தவிர்ப்பது எதிர்மறை சக்திகளை விலக்குவதற்கான உபாயம்.

* வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் கொடுத்த ஆலோசனைகள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறது என்றும் ஏதேனும் மாற்று நிகழ்வுகள் இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து கொள்வது அவசியம். நீங்கள் கொடுத்த ஆலோசனைக்கு பின்பு அவர்களின் வாழ்வில் மாற்றம் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளல் அவசியம்.

டாரட் துருப்பு சீட்டுகளை கையாளும் முறைகள்

* டாரட் துருப்பு சீட்டுகளை ஒரு தேவதையை போல் கையாள்வது அவசியம். எதிர்மறை ஆற்றல்கள் டாரட் துருப்பு சீட்டுகளை தாக்காமல் பாரத்துக்கொள்ள வேண்டும். டாரட் கணிப்பாளரின் முக்கியமான கடமை டாரட் துருப்பு சீட்டுகளை சுத்தி செய்தல் (சுத்தம் செய்வது) அவசியம்.
எப்பொழுது டாரட் துருப்பு

சீட்டுகளை சுத்தி செய்ய வேண்டும்?

புதிய டாரட் துருப்பு சீட்டுகள், வெகு நாட்களாக பயன்படுத்தப்படாத டாரட் துருப்பு சீட்டுகள், உங்களுக்குள் ஏதேனும் மாற்றங்களை உங்கள் உள்ளுணர்வு மூலம் டாரட் துருப்பு சீட்டுகள் சுத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால்… டாரட் துருப்பு சீட்டுகளில் எதிர்மறை பலன்களோ, கைகளில் இருந்து டாரட் துருப்பு சீட்டு கைதவறும் காலம். வேறு யாரேனும் அதிக எதிர்மறை எண்ணங்கள் உள்ளவர்கள் கைகளில் டாரட் துருப்பு சீட்டுகளை எடுத்துவிட்டால் கண்டிப்பாக டாரட் துருப்பு சீட்டுகளை சுத்தி செய்தல் அவசியம்.

டாரட் துருப்பு சீட்டுகளை எப்படி சுத்தி செய்வது?

முறை 1: ரெய்கி முறையில் சுத்தி செய்வது. அதாவது, நீங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் விலக வேண்டும் என கண்ணை மூடி மனதில் சங்கல்பம் செய்து கொண்டு கார்டுகளின் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகுவதாக பாவனை செய்தல் வேண்டும்.

முறை 2: பெளர்ணமி நாளில் மாலையில் ஒரு பலகையின் மீது வெல்வெட் துணியை விரித்து, டாரட் துருப்பு சீட்டுகளின் மீது சந்திரனின் கதிர்கள் விழுமாறு வைக்க வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

முறை 3: ஊதுபத்தி கொண்டோ அல்லது சாம்பிராணி மூலமோ டாரட் துருப்பு சீட்டுகளுக்கு நறுமணப் புகையினை படும்படி செய்யும் போது அதன் மீது உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றி சுத்தி செய்வது.

முறை 4: டாரட் துருப்பு சீட்டுகளின் மீது கைகளால் துடைக்க வேண்டும். எதிர்மறை சக்திகள் விலகுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு, அந்த கைகளை கல் உப்பு கரைக்கப்பட்ட கரைசலில் வைத்து சுத்தி செய்து கொள்வது.

முறை 5: குவார்ட்ஸ் எனப்படும் கிரிஸ்டல் கற்களை டாரட் துருப்பு சீட்டுகளை சுற்றியோ அல்லது ஏராளமான கிரிஸ்டல் கற்கள் இருந்தால் ஒவ்வொரு துருப்பு சீட்டுகள் மேலோ வைத்தால் அதிலுள்ள எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி நேர்மறை ஆற்றல்கள் உள்ளதாக
இருக்கும்.

முறை 6: இந்த டாரட் துருப்பு சீட்டுகளை திபெத்தியன் பௌல் (Singing Bowl / Healing Bowl / Ohm Bowl) உள்ளே வைத்து ஸ்ட்ரைகரால் உரசும் பொழுது எழும்பப்படும் அதிர்வலைகள் மற்றும் ‘ஓம்’ என்னும் ஒலியானது டாரட் துருப்பு சீட்டுகளில் உள்ள எதிர்மறையான ஆற்றல்களை நீக்கும்.

டாரட் ஜோதிடம் தொடரும்…

The post டாரட் கணிப்பாளர்கள் வழிகாட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Sivaganesan ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...