×

எஸ்ஐயை வெட்டி தப்ப முயன்ற கொள்ளையன் மீது துப்பாக்கிச்சூடு: மதுரையில் பரபரப்பு

மதுரை: எஸ்ஐயை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற பிரபல கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மதுரை, தபால் தந்தி நகர் பகுதியில் கடந்த 4ம் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு, லதா (44) என்ற பெண் டூவீலரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் 2 பேர் வழிமறித்து, லதா அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்தனர். தவறி விழுந்தவரை தரதரவென இழுத்துச் சென்று செயினுடன் தலைமறைவாயினர். இந்த சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகியது. இதுகுறித்த கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்களை பிடிக்க மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் தனிப்படை அமைத்தார். விசாரணையில் கொள்ளையன் அடையாளம் தெரிந்தது. இதுதொடர்பாக நேற்று காலை மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (45) என்பவரை போலீசார் பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்படி மற்றொருவரான ஸ்டீபன் ராஜ் (21) என்பவரை பிடிக்க போலீசார் விரைந்தனர். கூடல்புதூர் ரயில்வே தண்டவாளம் அருகே களத்துப்பொட்டல் பகுதியில் நேற்று மாலை தன்னை பிடிக்க வந்த எஸ்ஐ ரஞ்சித் குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு ஸ்டீபன் ராஜ் தப்ப முயன்றார்.

உடனே இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் துப்பாக்கியால் இருமுறை சுட்டதில், ஸ்டீபன் ராஜ் காலில் ஒரு குண்டு பாய்ந்தது. கீழே விழுந்த அவரை, போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்து கைது செய்தனர். காயமடைந்த எஸ்ஐ ரஞ்ஜித்குமார், கொள்ளையன் ஸ்டீபன் ராஜ் இருவரையும் நேற்றிரவு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எஸ்ஐ ரஞ்ஜித்குமாரை, போலீஸ் கமிஷனர் லோகநாதன் சந்தித்து சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார்.

The post எஸ்ஐயை வெட்டி தப்ப முயன்ற கொள்ளையன் மீது துப்பாக்கிச்சூடு: மதுரையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Postal Telegraph ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!