செங்கல்பட்டு, அக்.28: செங்கல்பட்டில் நடந்த மாவட்ட அளவிலான கலை திருவிழாவில், ‘மாணவர்கள் வருங்கால இலக்கினை அடைவதில் முழு மூச்சுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுரை வழங்கினார். செங்கல்பட்டில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2023-2024ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில், எம்பி செல்வம் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார்.
பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: ‘‘தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக, கலைத்திருவிழா போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 6ம் வகுப்பு முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 6ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 32 வகையான போட்டிகளும், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 72 வகையான போட்டிகளும், 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 72 வகையான போட்டிகளும் நடத்தப்படுகிறது.
வட்டார அளவில் வெற்றி பெற்ற முதல் 2 இடம் பிடிக்கும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்வர் பரிசுகளும், சான்றிதழ்களும், கலையரசன், கலையரசி என்ற விருதுகளையும் வழங்க உள்ளார். கடந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 10 மாணவர்களுக்கு முதல்வர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பள்ளிகளில் நடத்தப்பட்ட தனிநபர் குழு போட்டிகளில் கலந்து கொண்ட 59,362 மாணவ, மாணவியர்களுக்கும் என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி மற்றும் வட்டார அளவில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள 10,152 மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ₹38 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்களுக்கு ₹404 கோடியே 41 லட்சம் செலவில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டம் ₹7 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு பயின்ற 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ₹235 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, விளையாட்டு, ஒழுக்கம் ஆகியவற்றுடன் மாணவர்கள் கலை திறனையும், சமுதாய சிந்தனையுடன் மற்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். செல்போன் பயன்பாட்டினையும், சமூக ஊடகங்களையும் மாணவர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிந்தனையை சிதறவிடாமல் தங்களுக்கான வருங்கால இலக்கினை அடைவதில் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள். வெற்றி பெறும் மாணவர்களுக்கு என் பாராட்டுகள்’’ என்றார்.
இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) வெற்றிசெல்வி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், செயலாளர் சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) செல்வகணேசன், செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) இரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அரவிந்தன், மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அய்யாசாமி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட திட்ட உதவி அலுவலர் முகமது கலிம் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
The post செங்கல்பட்டில் மாவட்ட அளவிலான கலை திருவிழா மாணவர்கள் இலக்கினை அடைவதில் முழு மூச்சுடன் செயல்பட வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுரை appeared first on Dinakaran.
