×

ஞானத்தில் முகிழ்த்தும் நாமம்

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

வதந ஸ்மரா மாங்கல்ய கிருஹ தோரண சில்லிகா

இதற்கு முந்தைய நாமங்களில் ஒன்று நெற்றியையும் அடுத்து முகத்தையும் உணர்த்தின. இப்போது இந்த நாமம் அம்பிகையின் புருவத்தை வர்ணிக்கின்றது. புருவத்தை வர்ணிக்கும்போது எப்படி நெற்றிக்கும் முகத்திற்கும் உவமை சொன்னார்களோ அதாவது நெற்றிக்கு அஷ்டமி சந்திரனையும் முகத்திற்கு பூரண சந்திரனையும் சொன்னார்கள். அந்த பூர்ண சந்திரனில் உள்ள கருமை போன்ற களங்கத்தை கஸ்தூரிக்கு உவமையாக்கினார்கள். அம்பிகையை உவமையாகச் சொல்லிக்கொண்டே அதற்குப் பின்னால் உள்ள தத்துவத்தையும் சொல்லிக் கொண்டே வருகின்றார்கள்.

வசின்யாதி வாக்தேவதைகள் உவமைகளை சொல்லிச் சொல்லியே அம்பிகையின் சௌந்தர்யத்தை வர்ணிக்கிறார்கள். இந்த உவமை சொல்வதில் ஒரு முக்கியத்துவம் உண்டு. இவர்கள் வர்ணிப்பதோ பரமாத்ம வஸ்து. ஆனால், இவர்கள் சொல்லக்கூடிய உவமை பார்த்தால் எல்லாமே நமக்குத் தெரியக்கூடிய விஷயங்களை வைத்துக் கொண்டே உவமையை சொல்லிக் கொண்டே செல்கிறார்கள். இங்கு கிருஹ தோரண சில்லிகா… என்கிற அம்பிகையினுடைய புருவத்தைச் சொல்லும்போது அம்பிகையினுடைய முகம் மன்மதனுடைய கிரஹம் அதாவது வீடு போன்று இருக்கின்றது.

மன்மதனுக்கு ஒரு வீடு போன்று இருக்கின்றது. அதனால்தான் ஸ்மரா மாங்கல்ய கிருஹ… ஸ்மரன் என்றால் மன்மதன் என்று அர்த்தம். மாங்கல்ய கிரஹம் என்றால் மங்களமான வீடு. எது என்றால் வதனம். அம்பாளுடைய வதனம் மன்மதனுக்கு மங்களகரமான வீடு. இப்படி சொல்லிவிட்டு கிரஹ தோரண சில்லிகா…. என்று அடுத்து வருகின்றது. இங்கு சில்லிகா என்றால் புருவங்கள். இந்த அம்பாளின் புருவங்கள் எப்படி இருக்கின்றதெனில் மன்மதனுடைய வீட்டினுடைய தோரணங்களாக விளங்குகின்றன.

இந்த உவமை சொல்வதில் காரணம் என்னவென்று காண்போமாயின், அதாவது கிரஹ தோரணம். இங்கு வீடு என்பது நமக்குத் தெரிந்த ஒரு பொருள். வீடு என்று ஒன்று இருந்தால் அந்த வீட்டிற்கு வாசல் என்று இருக்கும். அந்த வாசலுக்கு தோரணம் இருக்குமென்பது நமக்குத் தெரிந்த விஷயம். அப்போது இந்த தெரிந்த விஷயத்தை உவமையாக்கி, தெரியாத பரமாத்ம வஸ்துவை நமக்கு காண்பித்துக் கொடுக்கிறார்கள்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி என்கிற மகான் freedom from the known என்று சொல்கிறார். இந்த freedom from the known என்பதற்கு starting point known தான். அதாவது அறிந்ததினின்று விடுதலை என்பதற்கு தொடக்கமே, அறிந்தவைதான். இதை அறிந்து கொண்டாலொழிய இதிலிருந்து விடுபட முடியாது. அதாவது அது என்னவென்று பொறுமையாக உற்றுப்பார்த்தாலொழிய அதிலிருந்து விடுபட முடியாது. எது தெரிகின்றதோ அதை நன்கு அறிய வேண்டும். அதாவது உற்றுப் பார்க்க வேண்டும். எந்த அபிப்ராயமும் இல்லாமல். அப்படி பார்த்தால் அது வேறொரு பார்வையை கொடுக்கும்.

இங்கு அம்பிகைபற்றி சொல்லிக் கொண்டே வரும்போதே நமக்குத் தெரிந்த விஷயங்களை உவமையாக்கிக் கொண்டே வருகின்றார்கள். மற்றவை எல்லாமுமே தள்ளப்பட வேண்டியதுதான். கொஞ்சம் இங்கு கவனியுங்கள். அஷ்டமி சந்திரனில் தொடங்கினோம். பிறகு முழுச் சந்திரனையும் அதிலுள்ள கஸ்தூரி திலகத்தையும் பார்த்துக் கொண்டே வந்து இப்போது சட்டென்று வீட்டிற்கு வந்து விட்டோம். குழந்தைகளுக்கு சந்திரனை காட்டிக் கொண்டே உணவூட்டுவதுபோல இங்கும் வாக்தேவதைகள் சந்திரனின் அழகை காட்டிக் கொண்டே வந்து சட்டென்று வீட்டை காட்டுகிறார்கள்.

இதோ இங்கு பார் உன் வீடு என்று தொடுகிறார்கள். இந்த வீட்டினுடைய வாசலில் உள்ள தோரணம் வரைக்கும் வந்தாகி விட்டது. இதிலுள்ள சூட்சுமத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சந்திரனிலிருந்து நம் வீடு வரையுள்ள பிரபஞ்சம் முழுவதையும் பார்க்கப் பார்க்க இந்த பிரபஞ்ச வஸ்துவோடு அபின்னமாக அதாவது பேதமற்று, பிரிக்க முடியாத அளவிற்கு அம்பிகையும் இருக்கின்றாள் என்று புலப்படுகின்றது. நினைவுக்கும் வரும். இப்போது ஒருவர் லலிதா சஹஸ்ர
நாமத்தை தொடர்ந்து சொல்கிறார் எனில், இதற்கு முன்னால் அவர் சந்திரனை சந்திரனாக பார்த்திருப்பார்.

வீட்டையும் வீட்டு வாசலையும் வீட்டு வாசலாகவே பார்த்திருப்பார். இந்த சஹஸ்ரநாமம் அவர் மனதிற்குள் போகப்போக சந்திரனைப் பார்த்தால் அம்பிகை ஞாபகம் வரும். வீட்டு வாசலைப் பார்த்தால் அம்பிகையின் புருவம் ஞாபகம் வரும். எதெல்லாம் நாம் இந்த உலகத்தில் தடைகள் என்று நினைக்கின்றோமோ அந்த தடைகளின் வழியே கூட நாம் அடைய வேண்டிய பொருளைப் பார்க்கலாம் என்கிற விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

சந்திரனை மனோகாரகன் என்று சொல்லியிருக்கிறார்கள். கிரகம் என்றால் வீடு. இங்கு வீடு என்பது நம்முடைய சரீரம் என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது சந்திரன் என்கிற மனமும், வீடு என்கிற சரீரமும் நமக்கு தடை என்று நினைக்கின்றோம். ஆனால், இந்த சஹஸ்ரநாமத்தின்படி மனதையும் சரீரத்தையும் அம்பிகைதானே வியாபித்திருக்கிறாள். இப்படிப் பார்த்தோமானால் மனசும், சரீரமும் நமக்கு தடையாக இல்லையே. இப்போது இந்த மனம் பற்றிய கவலையும், சரீரம் பற்றிய கவலையையும் அம்பிகை நீக்கி விடுகின்றாள்.

ஒரு ஆத்ம சாதகன் தான் அம்பிகையின் அருளால் ஞானம் அடைகின்றான். அவன் எதெல்லாம் தன்னுடையது என்று நினைத்துக் கொண்டிருந்தானே அவை அனைத்தும் அவனுடையவை அல்ல என்றும் அனைத்துமே அம்பிகையின் அலங்காரமாக மாறிற்று என்று பார்த்தோம். இப்போது இங்கு தோரணம் என்பதன் பொருள் என்னவெனில் இதுவரை இல்லாத வேறொரு ஞானானுபவத்திற்கு பிரம்மானந்த வீட்டிற்குள் நுழைகிறான் என்பதே இங்கு தோரணமாகவும் வரவேற்கும் விதமாகவும் அந்தப் புருவம் அமைந்துள்ளது என்று இந்த நாமம் கூறுகின்றது.

தன்னுடைய சரீரம் மட்டுமே வீடு என்று நினைத்தவனுக்கு, அம்பிகை எல்லையற்ற ஞானம் என்கிற பெரிய வீட்டை அளிக்கின்றாள். அந்த வீட்டுக்குள் அவன் அடி எடுத்து வைக்கும்போது தோரணத்தை பார்க்கின்றான். அந்த தோரணையே ஞானத்தின் தொடக்கமாகும். அது முடிவற்ற ஒரு தொடக்கத்தை அளிக்கின்றது. இதுவே கிரஹ தோரண சில்லிகா….

இதை ஏன் மன்மதனுடைய வதனம் என்று சொல்ல வேண்டும் தெரியுமா?

மன்மதனுடைய வேலையே உலகியல் பக்கம் திருப்புவதுதான். ஆனால், அம்பிகை ஏற்கனவே மன்மதனுடைய கரும்பு வில்லை தான் வாங்கி கையில் வைத்திருக்கின்றாள். எனவே, மன்மதன் பஞ்ச தசாக்க்ஷரி மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கின்றான் என்று மனோரூபேஷு கோதண்டா எனும் நாமத்தில் பார்த்தோம். ஸ்மர என்கிற மன்மதனுடைய கிரகம் என்று சொல்லப்படுவதால் மங்களகரமான வீடு என்று பொருள் படுகின்றது. இந்த மன்மதன் நம்முடைய மனதை கலக்குபவன் கிடையாது. சிவபெருமானை அம்பாள் முகத்தில் அமர்ந்து காமேஸ்வரனை ஆகர்ஷிக்கின்றான்.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் சத் வஸ்துவாக இருக்கும் சிவத்தை சித் வஸ்துவாக இருக்கும் அம்பிகையோடு சேர்த்து அதன்மூலம் சச்சிதானந்தத்தை அளிக்கக்கூடிய வேலையைப் பார்ப்பதால் அந்த வீட்டையே தன்னுடைய வீடாக நினைக்கின்றான். அம்பாளின் வதனமே அவனுடைய வீடாகின்றது. ஜீவர்களுக்கு வீடு பேற்றை அளிக்கக் கூடிய வீடு பேறாகின்றது. வீடு என்றாலே விடுவது என்று பொருள். எல்லாமே எப்போது விட்டுப் போகின்றதோ அது வீடு. நீங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைகிறீர்கள் எனில் உண்மையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நுழைகிறீர்கள் என்று பொருள்.

வெளியுலக தொல்லை, உளைச்சல் எல்லாவற்றையும் மறந்து வீட்டிற்குள் நுழைகிறீர்கள் அல்லவா? இப்போது மீண்டும் இதைப் புரிந்து கொள்வோம். இதற்கு முன்னால் அதாவது ஆத்ம சொரூபமான ஞானம் கிடைப்பதற்கு முன்னால், எந்த மன்மதன் நம்மை விஷயங்களில் அதாவது உலகத்தில் உழல வைத்துக் கொண்டிருந்தானோ அவனே இப்போது ஞானம் உதயமானவுடன் பரமானந்தத்திற்குள் தள்ளுகின்றான். விஷயத்திற்குள் தள்ளும்போது நமக்கு சந்திரன் சந்திரனாக தெரிந்தது. வீடு வீடாக தெரிந்தது.

வாசல் வாசலாக தெரிந்தது. இப்போது பரமானந்தத்தை காண்பித்துக் கொடுத்ததற்கு பிறகு, சந்திரன் அம்பிகையினுடைய முகமாக தெரிகின்றது. வீடு அம்பிகையினுடைய முகமாக தெரிகின்றது. வீட்டினுடைய வாசல் அம்பிகையினுடைய புருவங்களாக தெரிகின்றது. எல்லாமுமே மாறி விட்டது. நேராகி விட்டது. ஜே. கிருஷ்ணமூர்த்தி இதையே Perception brings order என்பார். வெவ்வேறாகத் தெரிந்த ஆத்மா இப்போது ஒன்றாக தெரிகின்றது.

இனி இவன் தன்னை சரீரமாகவும், மனதாகவும், அகங்கரித்துக் கிடந்தது ஓய்ந்து போய் எல்லாமுமே அம்பிகையினுடையது என்று பார்க்கின்றான். அதை அவளே அளிக்கிறாள். உங்கள் மனதிற்கு இந்த நாமத்தினை உரக்கச் சொல்லி, இந்தப் பொருளையும் சொல்லுங்கள். அப்போதாவது எதுவும் இவனுடையது இல்லை என்று இந்த ஜீவன் புரிந்து கொள்ளட்டும்.

நாமம் சொல்லும் கோயில்

இந்த நாமத்திற்கான கோயிலாக நாம் கும்பகோணம் கும்பேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் சொல்லலாம். சோழ தேசத்தின் ரத்னப் பதாகைபோல விளங்குவது குடந்தை. அமுதமும், ஈசனும், வேதமும், நான்முகனான பிரம்மனும் இத்தலத்தை உருவாக்கியதால் தனிப்பெரும் வசீகரத்தை இன்றளவும் பெற்றிருக்கிறது. கலைகளும், செல்வ வளங்களும், ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டு படர்ந்து கிடப்பது இத்தலத்தில்தான். ஆன்றோர்களும், சான்றோர்களும், பல்வேறு ரிஷிகளும் அவதரித்தது இங்குதான்.

அப்பேற்பட்ட இத்தலத்தின் மையத்தே நெற்றியில் இட்ட திருநீற்றைப்போல், செஞ்சிவத்தின் தழல்போல கும்பேஸ்வரரின் ராஜகோபுரம் நெடிதுயர்ந்து நிற்கின்றது. நான்கு கோபுரங்களும் நான்கு வேதங்களை நினைவுபடுத்துகிறது. கோயிலின் விஸ்தீரம் மலைக்க வைக்கிறது. கல்கல்லாக தடவித் தெரிந்து கொள்ள சில ஆண்டுகளாவது பிடிக்கும். சோழர்களுக்கு முன்பிலிருந்து நாயக்கர் காலம்வரை எத்தனை மன்னர்கள் மனமாற நேசித்து உருகி உருகி இக்கோயிலைச் செய்திருக்கிறார்கள். கல்வெட்டுகள் அதை பாங்காக வெளிப்படுத்துகின்றன.

மிகப் பெரிய கோயிலாதலால் உள்ளிருக்கும் உள்சுற்றுப் பிராகாரத்திலுள்ள சில சந்நதிகளையும், தெய்வத் திருவுருக்களையும் தரிசித்துவிட்டு ஆதி கும்பேஸ்வரரை அடையலாம். முதற்பிராகாரமாகிய மூலவர் சுற்றுப் பிராகாரத்தின் கீழ் வரிசையில் தென்பகுதியில் அறுபத்து மூவரின் உற்சவ மூர்த்திகளும், வட பகுதியில் கால பைரவர், சுரகரேஸ்வரர், சாஸ்தா, கோவிந்த தீட்சிதரின் லிங்க உருவும், அவருடைய பத்தினி நாகம்மாளும் அருட்கூட்டி வீற்றிருக்கின்றனர். சுவாமி அம்பாளின் பள்ளியறையும், கிழக்குப் பகுதியில் கிராத மூர்த்தி எனும் வேடனாக வந்த சிவன் வில், அம்பு ஏந்தியவாறு தெற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார்.

இவரே இத்தலத்தின் மூர்த்தியாவார். உட்பிராகாரத்தின் நடுநாயகமாக மூலவர் கும்பேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். இந்த லிங்க உருவே மெல்லிய குடச் சாயலை கொண்டிருக்கிறது. காலக் கணக்குகளாக அகப்படாத மூர்த்தி நாம் உய்யும் பொருட்டு அமர்ந்திருப்பது பார்க்க நெஞ்சில் ஒரு விம்மிதம் பரவுகிறது. அருளமுதம் எனும் சொல்லே இத்தலத்திற்குரியதுதான். ஏனெனில் கும்பேஸ்வரரே அமுதக் குடத்தினுள் பேரருள் பெருகி பரவியிருக்கிறார். அமுதம் இருப்பதனால் மரணமிலாப் பெருவாழ்வு அளித்து தன் அருட்குடத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார்.

உலகத்தின் சகல வேத ஆகமத்திற்கும் ஆதார கும்பமாக இது விளங்குகிறது. எங்கு கும்பம் வைக்கப்படுகிறதோ அங்கு இந்த கும்பேஸ்வரர்தான் விரைந்தோடி வருகிறார். சந்நதியை அடைத்துக் கொண்டு எப்போதும் ஒரு அருவமாக அமுதப் பிரவாகம் பாய்ந்தபடி இருக்கிறது. சற்று நேரம் நின்றாலே வெளியுலகத்தை மறைத்து அக உலக அமுதத்தை பீறிட்டுக் கொண்டு வரும் அற்புதச் சந்நதி அது. நகர மனமில்லாமல் ஏதோ ஒரு சக்தி உந்த அத்தல சக்திபீட நாயகியான மங்களநாயகி சந்நதியை நோக்கி நகர்கிறோம்.

மங்களத்தை விருட்சம்போன்று வளர்ப்பதால் ஞானசம்பந்தப் பெருமான் அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப்பதிகத்தில் குறிக்கிறார். திருச்செங்கோட்டுத் தலத்தில் ஈசன் தம் பாதி சரீரத்தை கொடுத்ததுபோல இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தள் எனவும் அழைக்கப்படுகிறாள். அம்பாளின் உடற்பாகம் திருவடி முதல் திருப்பாத நகக்கணு வரை ஐம்பத்தோரு சக்தி வடிவ பாகங்களாக காட்சியளிக்கின்றன.

ஆகவே மற்ற தலங்கள் ஒரு சக்தி வடிவத்தை பெற்றிருக்கிறது. இங்கோ சகல சக்திகளையும் தன் திருவுருவத்திலேயே பெற்று தலையாய சக்தி பீடமாக விளங்குகிறது. இவளை தரிசித்த மாத்திரத்தில் சகல பலன்களையும் அளித்து விடுவதில் முதன்மையானவள். ஸ்ரீமுத்துசாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட இத்தல நாயக, நாயகியைப் பற்றிய அழகான கீர்த்தனையை இறைவன் முன்பு எழுதியுள்ளார்கள்.

சித்தர்களில் முதன்மையான கும்பமுனி சித்தர் மங்களாம்பிகையையும், கும்பேசரையும் தியானித்து முக்தி பெற்றது இத்தலத்தில்தான். மாமன்னர்களால் இழைத்து இழைத்து வார்க்கப்பட்ட சிற்பங்கள், புராணங்கள் சொல்வதை தூணுக்குத் தூண் கொண்டு வந்த சிற்பிகளின் இறை பக்தி என்று மனம் இக்கோயிலை வியந்து வியந்து மாய்ந்து போகிறது. எதை சொல்வது எதை விடுவது என்று உள்ளம் உவகையால் திணறுகிறது.

The post ஞானத்தில் முகிழ்த்தும் நாமம் appeared first on Dinakaran.

Tags : Lalita Sahasranamams ,Ramya Vasudevan ,Krishna Vatana Smara Mangalya Kriha… ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி