×

நவகிரகங்களும் உபகிரகங்களும்

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

திடங்கள், கணிதங்கள் சில நேரங்களில் மாறுபடுவது ஏன்? என்ற கேள்வி எப்பொழுதும் எல்லோருக்கும் இருந்து கொண்டே இருக்கும். இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்வது ஒன்பது கிரகங்கள் தானா? அதற்கு மேல் வேறு ஏதும் இருக்கா? அல்லது இல்லையா? என்ற சிந்தனை நமக்குள் ஊற்றெடுக்கும். காலத்தினால் நிகழ்த்தப்படும் சில நிகழ்வுகள் நிகழ்வதும் தடுக்கப்படுவதும் ஏன்? எல்லோருக்கும் உண்டு. ஆழமான சிந்தனையே வெற்றியின் வாசல் என்பர். நாம் ஒன்பது கோள்களை மட்டும் வைத்துக் கொண்டு பலன்களை வருவிக்கிறோம். அதற்குமேல் உள்ள ஒன்பது கோள்களில் உபகோள்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆதலால், அவற்றிற்கு உண்டான மாற்றத்தை அறிவதும் இல்லை ஆய்வு செய்வதும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

இந்த உபகோள்கள் அதிகமாக எதிர்மறை பலன்களை தருவதால் முன்ேனார்கள் அதனை விலக்கி விட்டார்கள் போலும். பழங்கால ஜோதிட கிரந்தங்களிலும் பல ஆய்வுகளிலும் முன்னோர்கள் உபகிரகங்களை கணித்துள்ளனர் என்பது புலப்படுகிறது. மேலும், திசாபுத்திகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்? ஆனால், சில நேரங்களில் உபகிரகங்கள் நவகிரகங்கள் போலவே செயல்படுகின்றன என்பதை புரிந்து கொண்டால் போதும். உபகிரகங்களை பற்றி குறிப்புகளையோ அல்லது கணக்கீடுகளையோ செய்யாவிடில் எதிர் காலத்தில் அவற்றை பற்றிய பதிவுகள் ஏதுமின்றி எதிர்கால சந்ததிகள் அறியாவண்ணம் சென்றுவிடும். உபகிரகங்கள் பற்றிய பலன்களும் குறிப்புகளும் `பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம்’, `பல தீபிகா’, `உத்தர கால அம்ருதம்’, `ஜாதக பாரிஜாதம்’ போன்ற நூல்களில் உள்ளது. இனியாவது அதை பற்றிய ஆய்வு தொடங்கட்டும்…

உபகிரகங்கள் என்னென்ன?

ஒன்பது கோள்களின் கணிதங்களை தவிர மற்ற உபகோள்களின் கணிதங்கள் சிலருக்கு தெரியாது. அவற்றின் தன்மைகளை பற்றியும் சிந்தித்தல் சிறப்பான பலன்களைத் தரும். நாம் ஏற்கனவே மாந்தி மற்றும் குளிகனை பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இப்பொழுது மற்றவைகளை தெரிந்தளவு காண்போம். ஒன்பது கிரகங்களின் ஆய்வை மேற்கொள்ளவே ஒவ்வொருவருக்கும் ஆயுள் போதவில்லை. உபகிரகங்களை பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்வோம். இந்த ஒன்பது கிரகங்களின் உபகோள்கள் அனைத்தையும் ஒன்பது புத்திரர்கள் என்று பழைய கிரந்தங்களிலும் முந்தைய கால ஜோதிடர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அரசர்களுக்கு உபகோள்களை வைத்து பலன் சொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இப்பொழுது உபகோள்களை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை.

சூரியன் உபகோள் காலன்
சந்திரன் உபகோள் பரிவேடன், கலைஞானன்.
செவ்வாய் உபகோள் தூமன், சுரேஷன்.
புதன் உபகோள் அர்த்தப் பிரகரணன்.
வியாழன் உபகோள் யமகண்டன்.
சுக்கிரன் உபகோள் இந்திர தனுசு
சனியின் உபகோள் மாந்தி, குளிகன்
ராகுவின் உபகோள் வ்யதீபாதன்,
கேதுவின் உபகோள் தூமகேது, அவமிருந்து.

இந்த தூமகேதுவை துகஜன் என்றும் அழைப்பர்.

இரண்டு குழுக்களாகப் பிரித்து பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. குளிகாதி நால்வர் என்றும் தூமாதி ஐவர் என்றும் சொல்கிறார்கள்.

குளிகாதியர் நால்வர் யார்?

சனியின் உபகோள் குளிகன், சூரியனின் உபகோள் காலன், புதனின் உபகோள் அர்த்தப்பிரகரணன், குருவின் உபகோள் யமகண்டன்.

தூமாதியர் ஐவர் யார்?

செவ்வாயின் உபகோள் தூமன், சந்திரனின் உபகோள் பரிவேடன், சுக்கிரனின் உபகோள் இந்திர தனுசு, ராகுவின் உபகோள் வ்யதீபாதன், கேதுவின் உபகோள் தூமகேது ஆகியவை சொல்லப்படுகின்றன.

உபகிரகங்களின் கணிதம்

தூமன்: (செவ்வாயின் உபகிரகம்) தூமனின் கணிதத்தை சூரியன் இருக்கும் பாகையுடன் 133 பாகை 20 கலை சேர்த்தால் தூமன் இருக்கும் பாகையின் அளவாகும். தூமனுக்கும் செவ்வாய் ஆட்சி வீடாகவும் சிம்மம் உச்ச வீடாகவும் கும்பம் நீச வீடாகவும் உள்ளது.

தூமனின் காரகம்: (செவ்வாயின் உபகிரகம் தூமசெ) நிலையற்ற வாழ்வு. அதாவது, ஒவ்வொரு இடமாக வாழ்விடத்தை மாற்றிக் கொண்டே இருப்பது. கிணறு, குளம் ஆகியவற்றில் விழுதல் ஆகும். உடலில் உள்ள அவயங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் வெட்டப்படுதல். கோபம் அதிகம் உடையவனாக இருத்தல். காட்டில் வாழும் ஜீவராசிகளால் கொடூர ஜீவ ராசிகளால் கடிக்கப்படுதல், எலும்பு முறிவு உண்டாகுதல், மின்னல், இடி போன்றவற்றால் பாதிக்கப்படுதல். பிறருடைய சொத்தை அபகரித்தல். சோரம் போதல், வெளிநாட்டில் கெட்ட பெயர் எடுத்தல், மற்றவர்களை வன்முறையாக கொடுமை செய்தல் ஆகியவை ஆகும்.

நவகிரகங்கள் உபகிரகங்கள் தொடரும்…

The post நவகிரகங்களும் உபகிரகங்களும் appeared first on Dinakaran.

Tags : Sivakhanesan Solids ,
× RELATED இந்த வார விசேஷங்கள்