×

தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் காசாவில் நுழைந்தது இஸ்ரேல் ராணுவம்: ஹமாசின் 2 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்

டெல் அவிவ்: காசாவின் தெற்கு பகுதி நோக்கி ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், காசா எல்லைப் பகுதியில் நுழைந்த இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வீடு வீடாக சோதனை நடத்தினர். பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை ஆளும் ஹமாஸ் படையினர் கடந்த 7ம் தேதி நடத்திய பயங்கர தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்துள்ளது. காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 லட்சம் பேரை தெற்கு நோக்கி இடம் பெயர நேற்று முன்தினம் இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.

இதற்காக 24 மணி நேர கெடு விதிக்கப்பட்ட நிலையில், உயிரை காப்பாற்றிக் கொள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் குடும்பம் குடும்பமாக கையில் கிடைத்த பொருட்களுடன் கார்களிலும், லாரிகளிலும், கழுதை வண்டிகளிலும் ஏறி தெற்கு நோக்கி புறப்பட்டனர். அதே சமயம், காசாவின் எந்த இடமும் பாதுகாப்பானது இல்லை என்பதால் மக்கள் யாரும் வெளியேற வேண்டாம் என ஹமாஸ் கோரிக்கை விடுத்தது. தெற்கு நோக்கி இடம் பெயரும் வாகனங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸ் படை தெரிவித்தது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதை கேட்காமல் வெளியேறினர்.

போரால் காயமடைந்தவர்களும் வெளியேற வேண்டுமென்பதால் 24 மணி நேர கெடு முடிவடைய இருந்த நிலையில், மாலை 4 மணி வரை அவகாசத்தை இஸ்ரேல் ராணுவம் நீட்டித்தது. சுமார் 32 கிமீ தொலைவில் உள்ள தெற்கு பகுதி நோக்கி ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் நகர்ந்துள்ளதால், வடக்கு காசா பகுதி வெறிச்சோடி உள்ளது. அங்கு இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்த 2,200 பீரங்கிகள், 1.5 லட்சம் ராணுவ வீரர்களுடன் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் காசாவின் எல்லைக்குள் சில இடங்களில் இஸ்ரேல் வீரர்கள் நுழைந்து சோதனை நடத்தினர். வீடு வீடாக சென்ற அவர்கள் ஹமாஸ் படையினர் பதுங்கியிருக்கிறார்களா அல்லது பணயக் கைதிகளை பிடித்து வைத்துள்ளார்களா என்பதை அறிய இச்சோதனை நடத்தப்பட்டதாக ராணுவம் கூறி உள்ளது. எந்த நேரத்திலும் இஸ்ரேல் ராணுவம் காசாவிற்குள் நுழைந்து மீதமுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று 8ம் நாளாக நடந்த இப்போரில் இதுவரை 2,215 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 724 பேர் குழந்தைகள். இஸ்ரேல் தரப்பில் 1,300 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, காசாவில் ஹமாஸ் படையினர் பதுங்கியுள்ள கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹமாசின் 2 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்துள்ளது. ஹமாசின் விமானப் படைத்தளபதி முராத் அபு முராத் மற்றும் 7ம் தேதி தாக்குதலில் தரைவழி படைகளுக்கு தலைமை வகித்த தளபதி அலி காதி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

* காசா எல்லை மீண்டும் திறப்பு

காசாவில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்களை எகிப்து நாட்டை ஒட்டிய ரபா எல்லை வழியாக மீட்க இஸ்ரேல், எகிப்து, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் சண்டையை நிறுத்துவது தொடர்பாக ஹமாஸ் படையுடன் கத்தார் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அனைத்து தரப்பு ஒப்புதலைத் தொடர்ந்து ரபா சந்திப்பில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் போர் காரணமாக கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த ரபா சந்திப்பு பகுதியை எகிப்து அரசு நேற்று திறந்துள்ளது. காசாவில் 4 இந்தியர்கள் வசிப்பதாகவும் ஒருவர் மட்டுமே தொடர்பில் இருப்பதாகவும் அங்குள்ள இந்திய பிரதிநிதி அலுவலகம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* 75 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே சோகம்

கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போரில் அரபு நாடுகள் ஒன்றிணைந்து சண்டையிட்டன. அப்போது, 7 லட்சம் பாலஸ்தீனர்களில் பெரும்பாலானவர்கள் உயிர் பிழைக்க இடம் பெயர்ந்தனர். போர் முடிந்ததும் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விடலாம் என பலரும் வீட்டை பூட்டி சாவியை எடுத்துச் சென்றனர். ஆனால் போருக்குப் பிறகு எந்த பாலஸ்தீனர்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இறுதியில் சுமார் 6 லட்சம் பாலஸ்தீனர்கள் லெபனான், மேற்கு கரை, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளில் அகதிகளாக முகாம்களில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சொந்த நாடான காசாவிலேயே பாலஸ்தீனர்கள் பலர் அகதிகளாயினர். இப்போது அதே நிலை மீண்டும் திரும்பி உள்ளது.

* தாக்குதலுக்கு தயார் நிலையில் ஹிஸ்புல்லா

இஸ்ரேல், ஹமாஸ் போருக்கு மத்தியில் ஈரான் தொடர்ந்து மிரட்டி வருகிறது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹூசேன் அமிரப்துல்லாஹியன், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாவை சந்தித்த பின் அளித்த பேட்டியில், ‘‘நஸ்ரல்லா அவர்களின் படையினர் தயார் நிலையில் உள்ளதை விவரித்தார். காசா மீது இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால், ஹிஸ்புல்லா படை களமிறங்க தயாராக உள்ளது. ஹிஸ்புல்லா களமிறங்கினால் இஸ்ரேலில் அது பேரழிவை ஏற்படுத்தும்’’ என எச்சரித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பிடம் இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்க கூடிய வலுவான ஏவுகணைகள் உள்ளிட்ட 1.5 லட்சம் ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் உள்ளன. 12 ஆண்டாக சிரியாவில் உள்நாட்டில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பு அனுபவமிக்க வலுவான படையையும் கொண்டுள்ளது. ஏற்கனவே லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹிஸ்புல்லா சிறிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. சரியான நேரத்தில் ஹமாசுக்கு ஆதரவாக களமிறங்குவோம் என அந்த அமைப்பு கூறி உள்ளது. நேற்றும் லெபனான் எல்லையில் அத்துமீறிய டிரோனை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் ராணுவம், எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற ஹிஸ்புல்லா படை வீரர்கள் 4 பேரை கொன்றதாக கூறி உள்ளது.

* இடம்பெயர்தல் ஆபத்தானது: ஐநா

ஐநா தலைவர் ஆன்டோனியோ கட்டரஸ் அளித்த பேட்டியில், ‘‘காசாவில் உள்ள மக்கள் 24 மணி நேரத்தில் வடக்கு நோக்கி இடம்பெயர இஸ்ரேல் உத்தரவிட்டது ஆபத்தானது. அது சாத்தியமில்லாததும் கூட. போர் சூழலில் உணவு, தண்ணீர், தங்குமிடம் இல்லாமல் எப்படி 11 லட்சம் மக்கள் இடம்பெயர முடியும். ஏற்கனவே இப்போரில் ஐநா சுகாதார பணியாளர்கள் 11 பேர் பலியாகி உள்ளனர். 34 சுகாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’’ என வேதனை தெரிவித்தார்.

The post தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் காசாவில் நுழைந்தது இஸ்ரேல் ராணுவம்: ஹமாசின் 2 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர் appeared first on Dinakaran.

Tags : Palestinians ,Gaza ,army ,Hamas ,Tel Aviv ,Gaza border ,Gaza Israel Army ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக...