×

அடகு வைத்த நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி நகைக்கடை உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

பூந்தமல்லி, அக். 12: அய்யப்பன்தாங்கலில் அடகு வைத்த நகைகளை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய கடை உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போரா ராம்(47) என்பவர் அடகுக் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் கடந்த 2009ம் ஆண்டு, அய்யப்பன்தாங்கல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த திலகவதி(55) மற்றும் குமார்(47) ஆகியோர் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றனர்.

பின்னர் கடந்த 2011ம் ஆண்டு நகைகளை திருப்புவதற்கு அடகுக் கடைக்குச் சென்று பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் கடை உரிமையாளர் போரா ராம் நகைகளை திருப்பிக் கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் நகைகளை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால், இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அடகுக் கடை உரிமையாளர் போரா ராமை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி ஸ்டாலின் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பில் அடகு கடை உரிமையாளர் போரா ராமுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து போரா ராம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post அடகு வைத்த நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி நகைக்கடை உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Ayyappanthangal ,Dinakaran ,
× RELATED அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு: கற்பழித்து கொலையா? என விசாரணை