×

தூத்துக்குடி வியாபாரியிடம் அபேஸ் செய்த 36 ஆடுகள் மீட்பு ஆம்பூர் பெண் உட்பட 2 பேருக்கு வலை யூடியூப் சேனல் பார்த்து விற்பனைக்காக வேலூருக்கு அழைத்து

வேலூர், அக்.12: யூடியூப் சேனல் பார்த்து தூத்துக்குடி வியாபாரியை வேலூருக்கு அழைத்து அபேஸ் செய்யப்பட்ட 36 ஆடுகளை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக ஆம்பூர் பெண் உட்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(58), விவசாயி. இவர் ஆட்டுப்பண்ணையும் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். மேலும் யூடியூப் சேனல் மூலம் ஆடு வளர்ப்பு குறித்தும் அவர் தகவல் வெளியிட்டிருந்தார். அதில் இவரது தொடர்பு எண்ணையும் வெளியிட்டிருந்துள்ளார். இந்த தொடர்பு எண்ணுக்கு கடந்த வாரம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பு கொண்டு, தனக்கு பள்ளிவாசலில் நடைபெறும விசேஷத்துக்காக 36 ஆடுகள் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

அந்த பெண் கூறியதை நம்பிய பெருமாள், தனது பண்ணையில் இருந்து 36 ஆடுகளை லோடு ஆட்டோ மூலம் கடந்த 8ம் தேதி மதியம் ஆம்பூர் கொண்டு வந்துள்ளார். அங்கு தன்னை தொடர்பு கொண்டவரின் எண்ணுக்கு போன் செய்தபோது, அந்த பெண், ‘வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகில் அ.கட்டுபடி சாலையில் காத்திருங்கள். அங்கு எனது அண்ணன் வந்து சந்தித்து காசு கொடுத்து ஆடுகளை பெற்றுக் கொள்வார்’ என்று கூறியுள்ளார். இதனால் பெருமாளும் ஆடுகளுடன் அ.கட்டுபடிக்கு வந்துள்ளார்.

சிறிது நேரத்தில் முன்னால் ஒரு லோடு ஆட்டோவுடன், டூவீலரில் வந்த ஒருவர் போனில் பேசிய பெண்ணின் அண்ணன் என்று கூறியதுடன், ஆடுகளை தான் கொண்டு வந்த லோடு ஆட்டோவில் ஏற்றும்படி தெரிவித்துள்ளார். அதை நம்பிய பெருமாளும் தனது ஆட்டோவில் இருந்த 36 ஆடுகளையும் தன்னை சந்தித்தவர் கூறிய ஆட்டோவில் ஏற்றினார். உடனே டூவீலரில் வந்தவர், ‘ஆடுகளுடன் ஆட்டோவும், டிரைவரும் இங்கேயே நிற்கட்டும். பணத்தை ஆம்பூரில் பெற்றுத்தருகிறேன். உங்கள் ஆட்டோவிலேயே ஆம்பூருக்கு என்னை பின்தொடர்ந்து வாருங்கள்’ என்று கூறி முன்னால் டூவீலரில் சென்றுள்ளார்.

ஆம்பூருக்கு சென்றதும் முன்னால் டூவீலரில் சென்றவர் இங்கும் அங்கும் போக்குகாட்டியபடி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெருமாள், தன்னை தொடர்பு கொண்ட பெண்ணின் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அதிர்ச்சிக்குள்ளான பெருமாள் தனது ஆட்டோவுடன் மீண்டும் அ.கட்டுபடிக்கு வந்துள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவுடன் ஆடுகளும் மாயமாகி இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெருமாள், இதுபற்றி பாகாயம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து, அ.கட்டுபடி தொடங்கி தேசிய நெடுஞ்சாலை டோல்கேட் வரை உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நடத்திய விசாரணையில், ஆடுகளை ஏற்றிய ஆட்டோ கடந்த 9ம் தேதி குடியாத்தத்தில் நின்றிருப்பது தெரியவந்தது.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் ஆடுகளுடன் ஆட்டோவை கைப்பற்றிய போது, ஆட்டோ டிரைவர் போலீசாரிடம், ‘என்னை ஆடுகளை ஏற்றி கொண்டு குடியாத்தம் வர வேண்டும் என்று சொல்லி ஆட்டோவை வாடகைக்கு அழைத்தனர். இங்கு வந்த பிறகு யாரும் வராததால் அவர்களுக்காக காத்திருக்கிறேன். எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆடுகளை கைப்பற்றிய போலீசார், பெருமாளிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஆடுகளை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

The post தூத்துக்குடி வியாபாரியிடம் அபேஸ் செய்த 36 ஆடுகள் மீட்பு ஆம்பூர் பெண் உட்பட 2 பேருக்கு வலை யூடியூப் சேனல் பார்த்து விற்பனைக்காக வேலூருக்கு அழைத்து appeared first on Dinakaran.

Tags : Abess ,YouTube ,Vellore ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...