×

தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? சந்திரபிரியங்கா உருக்கமான கடிதம்

புதுச்சேரி, அக். 11: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து 2 பக்க கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என் அன்பான புதுச்சேரி, காரைக்கால் நெடுங்காடு மக்களுக்கு உங்கள் சந்திரபிரியங்காவின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னைச்சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக என் பணியை மனத்திருப்தியுடனும், மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம் வரை ஓயாமல் செய்து வருகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளது. இதனை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி, ஓடி உழைத்து வருகிறேன்.

மக்கள் செல்வாக்கு மூலம் சட்டமன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல் போனது. தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்தப் பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரீகமல்ல. ஆனாலும் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா? கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன். என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்குதான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.

எனக்கு இப்பதவியை கொடுத்த முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அரசுக்கு முழு ஆதரவு அளித்துவரும் என் மக்களுக்கு, எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல் தாழ்த்தப்பட்ட தொகுதியான நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன். இதுநாள் வரையில் அமைச்சர் பணியை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும். அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும். என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இருகரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக பெண்களுக்கான முன்னுரிமை அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன். நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரங்கசாமி முதல்வராக இருந்தபோது பதவி விலகும் 3வது அமைச்சர்
முதல்வர் ரங்கசாமி, முதன்முதலில் 1991ம் ஆண்டு தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001ம் ஆண்டு வெற்றி பெற்ற அவர் காங்கிரஸ் சார்பில் முதல்வர் ஆனார். அதனை தொடர்ந்து மீண்டும் 2006ல் முதல்வரானார். 2011ம் ஆண்டில் என்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி கதிர்காமம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று முதல்வர் ஆனார். தொடர்ந்து 2021ம் ஆண்டு பாஜவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் 4வது முறையாக முதல்வராகியுள்ளார். கடந்த மூன்று முறையும் இவரது ஆட்சி காலத்தில் யாராவது ஒருவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதலாவதாக குடும்ப பிரச்னையால் அங்காளன் பதவி விலகினார். அடுத்த ஆட்சி காலத்தில் கல்யாணசுந்தரம், படிப்பு விவகாரத்தில் ராஜினாமா செய்தார். தற்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? சந்திரபிரியங்கா உருக்கமான கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chandrapriyanka ,Puducherry ,Transport Minister ,
× RELATED பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்