×

காஞ்சிபுரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து வட்டாரங்களையும் சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று செவிலிமேட்டில் நடந்தது. இதில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஆகியோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்கு வைத்து ஆரத்தி எடுத்து சமுதாய சீமந்த விழா நடத்தினர்.

பின்னர், எம்எல்ஏ எழிலரசன் பேசுகையில், ‘‘அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரினை சூட்ட வேண்டும். முன்பு எல்லாம் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரில் பெயர் சூட்டி உள்ளனர். அந்த பெயர்கள் எல்லாம் அழகான தமிழ் பெயர்களாக இருந்து உள்ளது. ஆனால், தற்போது வடமொழி கலந்த பெயரையோ அல்லது புரியாத பெயரையோ வைக்கின்றனர். ஆகவே இனி பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தமிழில் பெயர் வைக்க வேண்டுமென்றால் முதல் எழுத்தை கொடுங்கள் நானே 10 அழகான தமிழ் பெயர்களை எழுதி தருகிறேன் அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். இதில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,MLA ,Kanchipuram district ,Ehilarasan ,Mayor ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு விண்வெளி தொழில்நுட்ப நிதி...