×

திருச்சிக்கு ரயிலில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல்

 

திருச்சி, அக்.8: திருச்சி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ₹.3.6 லட்சம் மதிப்பிலான 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்தவர் மற்றும் ஆர்டர் கொடுத்தவர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி ரயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் மதியம் போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விஜயவாடாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் முதலாவது பிளாட்பாரத்தில் ஒரு நபர் நிற்பதை கண்டனர்.

போலீசார் அவரிடம் சென்று விசாரித்தபோது தான் சந்தில் குமார் (44), டெல்லி மங்கள்புரி, ஜக்கி ஸ்டோன் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் என்றும், தற்போது கொட்டப்பட்டு ப்ரீமேன் தெருவில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்த நிலையில் அவரது இரண்டு தோள் பைகளையும் சோதனை செய்தனர். அப்போது அதில் 2 கிலோ எடை கொண்ட 9 பார்சல்களில் 18 கிலோ எடையிலான ₹.3.6 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவற்றை விஜயவாடா அன்னவரம் கிராமத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்துதான் பெற்றதாகவும், அவற்றை சமயபுரம் சத்தியா என்பவரிடம் கொடுக்க எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் சமயபுரத்தை சேரந்த சத்தியாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருச்சிக்கு ரயிலில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...