×

ஆன்மிகம் பிட்ஸ்: தடைகள் தகர்ப்பார் தேவேந்திர விநாயகர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இமயமலையில் முதல்வன்

ஆதிமுதல்வன் என்று போற்றப்படும் விநாயகப் பெருமானுக்கு, இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் சங்கட் மோட்சன் மந்திர் எனும் கோயிலின் அருகில் க்ஷோடஸ கணபதி என்ற பெயரில் ஓர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு 16 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இக்கோயில் தமிழ்நாட்டு பாணியில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இத்திருக்கோயில் மூலவர் உட்பட, பதினாறு விநாயகர் திருஉருவங்களும் தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. ‘இமாச்சலப்பிரதேசத்தில் பனி சூழ்ந்த நிலையில் அமைந்திருக்கும் விநாயகர் கோயில் இது மட்டும்தான்’ என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் அருள்புரியும் விநாயகர்களை ஒரே சமயத்தில் வழிபடுவதால் பதினாறு செல்வங்களும் பெற்று வளமுடன் வாழலாம் என்பது ஐதீகம்.

விபூதி விநாயகர்

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் பொற்றாமரைக் குளம் உள்ளது. இதன் கரையில் தென்மேற்கு முனையில் பெரிய கல்தொட்டியும், அதன் நடுவில் விநாயகர் திருவுருவமும் உள்ளன. இந்த விநாயகரை விபூதியால் நிறைத்துள்ளனர். இந்த கல்தொட்டியான விபூதி குண்டத்திலுள்ள திருநீற்றை மக்கள் எடுத்து அணிந்து கொள்கின்றனர்.

ஜல விநாயகர்

ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் பழைய பாளையம் பிரிவில் வலது புறமாக அமைந்துள்ளது பாரிநகர். இங்கு எழுந்தருளியுள்ள கற்பக விநாயகர், வள்ளல் பாரியைப் போல் பக்தர்களுக்கு நலன்களை வாரி வழங்கி வருகிறார். தற்போது கோயில் அமைந்துள்ள இடம், நகர் தோன்றுவதற்கு முன்பு பெரிய கிணறாக திகழ்ந்தது. இந்த கிணறு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருந்ததால் அதனைத் தூர்த்துவிட்டு, மேலே ஜல விநாயகர் என்ற பெயரில் விநாயகர் சந்நதியை அமைத்தார்கள். இவரே கற்பக விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பாலமுருகன், நவகிரகங்களுக்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன.

தடைகள் தகர்ப்பார் தேவேந்திர விநாயகர்

சிவகங்கை மாவட்டம், திருமயம் அருகே அமைந்துள்ளது கானாடு காத்தான் கிராமம். இங்கு பழையூர் எனும் பகுதியில் ஊரணிக்கரையில் அருள்பாலித்து வருகிறார் தேவேந்திர விநாயகர். தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு அருளியதால் இவருக்கு இந்தப் பெயர். இவரை 108 முறை வலம் வந்து வழிபட, கல்வி கேள்வியில் சிறந்து விளங்கலாம். தொடர்ந்து ஐந்து சங்கட சதுர்த்தி நாளில் மாலை வேளை களில் இவரைத் தரிசித்தால் திருமண பாக்கியமும் பிள்ளை வரமும் பெறலாம்.

மாறுபட்ட கணபதி

நாம் வணங்கும் பிள்ளையார் பொதுவாக தொந்தியும், தொப்பையுமாகத்தான் காட்சி அளிப்பார். ஆனால், காஞ்சிபுரம் பேருந்து நிலையம், அருகில் கோயில் கொண்டிருக்கின்ற விநாயகர் தொந்தியற்று இருப்பதால் அவரை ‘சப்பாணிப் பிள்ளையார்’ என்று நாமமிட்டு இவரை பக்தர்கள் வணங்குகிறார்கள்.

ருண்டு பீடத்தில் விநாயகர்

திருவெண்காட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது கீழைத் திருக்காட்டுப் பள்ளி. ஈசன் ஆரண்யேஸ்வரராகவும் அம்பிகை அகிலாண்ட நாயகியாகவும் திருவருள் புரியும் திருத்தலம். சந்திரன் தன் பாவம் தீர ஈசனை பிரதிஷ்டை செய்த தலம் இது. இத்தல ஈசன் காட்டழகர் என்றும் வணங்கப்படுகிறார். சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் ஒருவனால் வணங்கப்பட்ட விநாயகர், நண்டு விநாயகர் என வணங்கப்படுகிறார்.

விநாயகரின் பீடத்தில் மூஷிகத்திற்குப் பதில் நண்டு உள்ளது, இது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. இத்தல தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்களுடன் ராஜயோக தட்சிணாமூர்த்தியாக போற்றப்படுகிறார். இவரை பூஜித்தால், இவர் அருளால் பதவி உயர்வைப் பெறலாம். இங்குள்ள பரமேசலிங்கத்தை பூஜிக்க, 100 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்றும் சொல்கிறார்கள்.

பிள்ளையார் கோயிலில் மாங்கல்ய பிரசாதம்

அம்பாள், ஸ்வாமிக்கு திருக்கல்யாணம் நடத்தும் போது, திருமாங்கல்யம், குங்குமம், மஞ்சள் என மங்கலப் பொருட்களை பிரசாதமாகக் கொடுப்பார்கள். மதுரை அருகே வாடிப்பட்டியிலுள்ள வல்லப கணபதி கோயிலிலும் இவற்றை பிரசாதமாக தருகின்றனர். விநாயகருக்கு பூஜையின் போது இப்பொருட்களை வைத்தும் வழி படுகிறார்கள். விநாயகர் அம்பிகையிடமிருந்து தோன்றியதால் இவரை சக்தி அம்சமாக கருதி இவ்வாறு செய்கின்றனர்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: தடைகள் தகர்ப்பார் தேவேந்திர விநாயகர் appeared first on Dinakaran.

Tags : Devendra Ganesha ,Kunkum Anmigam ,Lord ,Vinayaka ,Himalayas ,Sangat Motsan Mandir ,Shimla, Himachal Pradesh ,
× RELATED சிற்பமும் சிறப்பும்