×

சிற்பமும் சிறப்பும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்

ஆலயம்: புள்ளமங்கை பிரம்ம
புரீசுவரர் கோயில், தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பசுபதி கோயில் அருகே அமைந்துள்ளது.

காலம்: முதலாம் பராந்தகச்
சோழனால் (கி.பி. 907 – 955)
திருப்பணி செய்யப்பட்டது.

தமிழகத்தில் பேரழகு சிற்பங்களைக் கொண்ட ஆலயங்களுள் ஒன்று புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில். இந்த ஆலயத்தின் இறைவன் ஸ்ரீஆலந்துறைநாதர் (பிரம்மபுரீசுவரர் / புள்ளமங்கலத்து மகாதேவர்), இறைவி ஸ்ரீஅல்லியங்கோதை (சௌந்தரநாயகி). கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டில் இருந்துள்ள இக்கோயில், திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற
தலமாக விளங்குகிறது.

“மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவான்னிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே’’

இமவான் மகளாகிய பார்வதிதேவியின் கணவனும், இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறவித் துயர் நீக்குபவனும் ஆகிய சிவபெருமானது இடமும் கலைகள் அறிந்த அறிவார்ந்த மறையவர்கள் தொழுதேத்தி வழிபடுவதும், பொழில் சூழ்ந்து அலைகளோடு வரும் காவிரிக் கரையில் (குடமுருட்டி ஆறு) உள்ள `புள்ளமங்கை’ என்று சொல்லப்படும் `ஆலந்துறை’ என்னும் கோயில் இதுவே ஆகும். பின்னர் முதலாம் பராந்தகச் சோழனால் (கி.பி. 907 – 955) கற்றளியாகத்திருப்பணி செய்யப்பட்டு சோழர் காலச் சிற்பக் கலைக்கு சிறப்பான எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

கருவறை தேவகோஷ்டங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் பிரம்மன், விஷ்ணுவுடன் லிங்கோத்பவர், வடக்கில் எழில்மிகு நான்முகன் அழகுற அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்த மண்டபப் புறச்சுவர்களின் தெற்குப்பகுதியில் பூதகணங்கள் சூழ காட்சியளிக்கும் கணபதி, வடக்குப்பகுதியில் மகிஷாமர்த்தினி உள்ளனர்.விமான முதல் தள கோஷ்டங்களில் சிவனின் அழகு வடிவங்கள் அனைவரையும் ஈர்க்கின்றன. இவ்வாலய விமானத்தில் உள்ள ஆண் சிற்பத்தை முன் மாதிரியாகக்கொண்டே ஓவியர் மணியம், கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாநாயகனான வந்தியத்தேவனை வரைந்தார் என்று கருதுகின்றனர். தாங்குதளத்தில் ராமாயணக் குறுஞ்சிற்பங்களும், சிவனின் சிற்றுருவச் சிற்பங்களும் குறிப்பிடத்தகுந்தவை.

The post சிற்பமும் சிறப்பும் appeared first on Dinakaran.

Tags : Kunkum Anmigam Pullamangai Brahmabureeswarar Temple Temple ,Pullamangai Brahmabureeswarar Temple ,Pasupathi Temple ,Thanjavur – Kumbakonam road ,Barantaka ,Chola ,Tamil Nadu ,
× RELATED செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான்