ஈரோடு, செப். 30: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: பெருந்துறை சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றும் விவகாரம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இக்குழுவின் முதல்நிலை விசாரணை அறிக்கையின்படி 4 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அரசுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு செல்லும் போது இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும். உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பது, தேவையற்ற உரங்களை வாங்க கட்டாயப்படுத்துவது கூடாது.
மேலும், உரங்கள் இருப்பு மற்றும் விலை பட்டியல் விவசாயிகளுக்கு தெரியும் வகையில் பெயர் பலகை வைக்க வேண்டும். கால்நடைத்துறை சார்பில் ஸ்கேனிங் கருவிகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிகளில் கிராமசபைகள் அமைக்கப்படும். மேலும் வனத்துறை சார்பில் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பதை தடுப்பது தொடர்பாக மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.
The post பெருந்துறை சிப்காட் கழிவுநீர் விவகாரத்தில் விசாரணை குழு இறுதி அறிக்கையின்படி நடவடிக்கை: கலெக்டர் உறுதி appeared first on Dinakaran.