×

கர்நாடகா திறந்து விடும் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை:கர்நாடகா திறந்து விடும் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை. மேலும் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தாலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவாக இருந்தாலும் தமிழகத்திற்கு 12500 கனஅடி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், காவிரி ஒழுங்காற்றுக் குழு 5000 கனஅடி தண்ணீர் திறக்கத்தான் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால் பயிர்கள் காய்ந்து போகின்றன.

எனவே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 12500 கனஅடி நீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படும். கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீர் கொடுக்கக்கூடிய அளவுக்கு போதிய தண்ணீர் உள்ளது. ஆனால் தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்லுவது நியாயம் அல்ல. ஆற்றின் கடைமடைப் பகுதிக்கே முன்னுரிமை தர வேண்டும் என்ற விதியை கர்நாடகா பின்பற்ற மறுக்கிறது. கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது. கர்நாடக மாநிலம் வெகு தூரம் இல்லை. இரண்டு அண்டை மாநிலங்கள் ஒட்டி இருக்கும் போது மாநிலங்களில் இங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகா மாநிலத்தில் வாழ்கின்றனர். கர்நாடக மாநில மக்கள் தமிழகத்தில் வாழ்கின்றனர்.

இரு மாநிலங்களும் நட்புடனும், பாசத்துடனும் இருந்தால்தான் மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்பவர்கள் அச்சமின்றி அங்கு வாழ முடியும். ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்துடன் நட்புறவுடன் நடந்து கொள்வது அவசியம். நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். மேலும் உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் மதிக்காமல், காவிரி ஒழுங்காற்றுக் குழு சொல்வதையும் மதிக்காமல், தமிழ்நாடு முதல்வரின் வேண்டுகோளையும் கர்நாடகா ஏற்காமல் இருப்பது நியாயமற்றது. நீண்டகால அனுபவம் பெற்றவர் கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார், அரசியலில் தேவகவுடா காலத்தில் இருந்து எல்லாவிதமான நடைமுறைகளையும் அறிந்தவர் அம்மாநில முதல்வர் சித்தாரமையா. இவர்கள் மீது தணியாத மதிப்பு உள்ளது. உச்சநீதிமன்றம், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு தண்ணீர் வழங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகா திறந்து விடும் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் செயல் நியாயமற்றது: அமைச்சர் துரைமுருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil ,Nadu ,Karnataka government ,Cauvery ,Minister ,Duraimurugan ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...