×

சிறுத்தை நடமாட்டம் உறுதியானது

காடையாம்பட்டி, செப்.27: காடையாம்பட்டி அருகே சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க பெரிய அளவிலான கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே, டேனிஸ்பேட்டை வனச்சரகத்திற்குட்பட்ட மூக்கனூர், எலத்தூர், பூசாரிப்பட்டி, தென்கல்கரடு பகுதி கரட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அப்போது கரட்டிற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற இரண்டு ஆடுகளை சிறுத்தை அடித்து இழுத்துச் சென்றுவிட்டதாக கூறினர். இதையடுத்து, அக்கரட்டில் 4 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைத்து டேனிஸ்பேட்டை வனத்துறையினர் கண்காணித்தனர். ஆனால், சிறுத்தை நடமாட்டம் ஏதும் பதிவாகவில்லை. அதனால் சிறுத்தை அங்கிருந்து வனத்திற்கு சென்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து ஒரு மாதமாக சிறுத்தை தென்படவில்லை. இருப்பினும் அந்த கரடு பகுதியில் வன ஊழியர்கள் தொடர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில்இ கடந்த 3 நாட்களுக்கு முன்பு மூக்கனூர் பண்டத்துக்காரன் கொட்டையைச் சேர்ந்த விவசாயி முத்துவின் தோட்டத்தில், தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, கரட்டின் மீது சிறுத்தை நடந்து சென்றதை அவர்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டேனிஸ்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த்தனர். இதன்பேரில், வனச்சரகர் தங்கராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் சம்பவ இடம் சென்று கரட்டில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா என கண்காணித்தினர். அப்போது, கரட்டின் மேல் பகுதியில் சிறுத்தை நடமாடியபோது படம் எடுத்து வைத்திருந்த சிலர், அதனை வனத்துறையினரிடம் காண்பித்தனர்.

இதனைத்தொடர்ந்து, சிறுத்தையை பார்த்ததாக கூறப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். மேலும், கரட்டின் ஒரு பாறைப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க சிறிய அளவிலான ஒரு கூண்டை வனத்துறையினர் வைத்தனர். அதில், ஆட்டையும் கட்டி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் கண்காணித்த நிலையில், சிறுத்தை ஏதும் சிக்கவில்லை. ஆட்டுடன் கூண்டு அப்படியே இருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் காண்பித்த படத்தை ஆராய்ந்தபோது சிறுத்தை சற்று பெரியதாக இருப்பது தெரிய வந்தது. இதனால், நேற்று சேலத்திலிருந்து பெரிய அளவிலான கூண்டு கொண்டு வந்து வைத்து கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து பண்டத்துக்காரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜெயா கூறும்போது, 2 நாட்களாக நாங்கள் கரட்டில் உள்ள சிறுத்தையை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். முதல் நாள் மாலை 5 மணிக்கு கரட்டில் உள்ள குன்று மேல் அமர்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து எழுந்து நின்று பார்த்தது. சுமார் அரை மணி நேரம் வரை இருந்து விட்டு சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தோம். அவர்களும் வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். மறுநாள் மாலையும் அதே போன்று குன்றின் மேல் ஏறி படுத்துக்கொண்டது. இதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினரும் பார்த்தனர். அதன் பிறகே கூண்டு வைத்தனர். சிறிய கூண்டு என்பதால் சிக்க வில்லை, நேற்று பெரிய கூண்டு வைத்துள்ளனர் என கூறினார்.

The post சிறுத்தை நடமாட்டம் உறுதியானது appeared first on Dinakaran.

Tags : Kadaiyampatti ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…