×

மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர், செப். 25: பசுமைத் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு பிம்பலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வனத்துறை சார்பில் 2,500 மரக் கன்றுகள் நடும்பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கிவைத்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, பிம்பலூர் கிராமத்தில் பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு, வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையில் அவர்களையே மரக்கன்று நடும் பணிகளில் பங்கெடுக்க வைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பிம்பலூர் பள்ளி மாணவ மாணவியர் 180 பேர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் இணைந்து 2,500 மரக்கன்று நடும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் வனம் மற்றும் வனங்களால் சூழப்பட்ட நிலப்பரப்பினை 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ என்ற திட்டத்தினை நேற்று தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் 10 வருடங்களில் பல்வேறு அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்களின் பங்களிப்போடு அதிக இடங்களில் மரங்களை வளர்க்க உகந்த பகுதிகளை தேர்வு செய்து மரக்கன்றுகளை நடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக் கிணங்க தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை பசுமைப் போர்வை போர்த்தப்பட்ட மாவட்டமாக மாற்ற வேண்டும், பசுமை பெரம்பலூர் என்று அழைக்கக்கூடிய வகையில் பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அரசு நிலங்களிலும், ஆக்கிரமிப்புக்குள்ளான அரசு நிலங்கள் மீட்கப்பட்டு அந்த இடங்களிலும் மரக் கன்றுகள் நடப்படுகிறது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் ஆலத்தூர் ஒன்றியம் ராமலிங்கபுரம் ஊராட்சியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள பெரியவெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன வெண்மணி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் 1200 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து வேப்பந்தட்டை ஒன்றியம் பிம்பலூரில் வனத்துறை சார்பில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 2,500 மரகக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் இதை ஒரு வேண்டு கோளாகவே விடுகிறேன் பெரம்பலூர் மாவட்டத்தை பசுமை போர்வை போர்த்தப்பட்ட மாவட்டமாக மாற்றுவதற்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் மரக்கன்றுகளை நட்டுமுறையாக பராமரித்து வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், வேப்பந்தட்டை ஒன்றியக்குழுத் தலைவர் ராமலிங்கம், வனச்சரகர்கள் பழனிக் குமார், முருகானந்தம், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரியதாஸ், செல்வ மணியன், பிம்பலுார் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : District Collector ,Perambalur ,Bimbalur ,Green Tamil Nadu Day ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...