×

தமிழக அரசின் முன்மாதிரி விருது பெற்ற ஊராட்சியில் குண்டும் குழியுமான தார் சாலை: சீரமைக்க கோரிக்கை

 

மதுராந்தகம்,செப். 24: வெள்ளபுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளபுத்தூர் ஊராட்சியில், 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு புழுதிவாக்கம், வையாவூர் சாலையிலிருந்து இணைப்பு சாலையாக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு 12 அடி ஊராட்சி சாலை செல்கிறது. இந்த சாலையை கடந்துதான் இப்பகுதி மக்கள் பாலக்காடு, ஆண்டிமேடு, காமராஜர் நகர், கொளத்தூர், சித்தாமூர், கட்டியாம்பந்தல், பெருங்கோழி, சிறுங்கோழி, பாப்பநல்லூர், எண்டத்தூர் சித்தாத்தூர், துறையூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர்.

இந்த சாலையானது கடந்த சில மாதங்களாக மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு போதையில் செல்லும் குடிமகன்களும் விபத்தில் சிக்குவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் விடுபட இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும், தற்போது போக்குவரத்து அதிகமாகிவிட்டதால் 12 அடி அகலத்தில் உள்ள இந்த சாலையை மேலும் அகலப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த ஊராட்சியானது தேசிய அளவில் நீர் மேலாண்மை திட்டத்தில், தமிழக அரசின் முன்மாதிரி ஊராட்சி விருதையும், சுகாதார திட்டத்தில் மாவட்ட அளவிலான விருதுகளையும் பெற்ற ஊராட்சியாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மறைமலை நகரில் உள்ள அரசு பயிற்சி கூடத்தில், ஊராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு விருதுகளைப் பெற்ற, சிறப்பு வாய்ந்த இந்த ஊராட்சியின் முக்கிய சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தமிழக அரசின் முன்மாதிரி விருது பெற்ற ஊராட்சியில் குண்டும் குழியுமான தார் சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Madhurandakam ,Vellaputhur panchayat ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...