×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது..கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டங்களை கலைத்த போலீஸ்!!

இம்பால் : மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மெய்தி இன மக்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போலீசார் விரட்டி அடித்தனர். கடந்த மே மாதம் இட ஒதுக்கீடு விவகாரத்தில் குக்கி – மெய்தி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் அந்த மாநிலமே கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. இதில் வீடுகள், தேவாலயங்கள், கோவில்கள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில்,150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போலீசார், ராணுவத்தினர் ஆகியோர் குவிக்கப்பட்ட நிலையில், ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியது.

இந்த நிலையில் தலைநகர் இம்பாலில் நேற்று 5 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மெய்தி மக்கள் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தடையை மீறி ஊர்வலமாகச் சென்றவர்களை போலீசார் எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர்.சாலையில் அமர்ந்து தர்ணா செய்த போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

பின்னர் பெண்களை இழுத்துச் சென்று கைது செய்தனர். இதற்கு இடையே இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள வீடுகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட கும்பல் யார் யார் என்று தெரியாமல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போலீசாரின் தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததால் மீண்டும் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது..கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டங்களை கலைத்த போலீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Meithi ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் முதல்வர் வீடு அருகே பயங்கர தீ விபத்து