×

நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த மோசடி கும்பலின் தலைவன் ரவி அட்ரி உத்தரப்பிரதேசத்தில் கைது!

லக்னோ: நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த மோசடி கும்பலின் தலைவன் ரவி அட்ரி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 5ம் தேதி 4750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அந்த தேர்வின் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் பெற்றது, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது என பல்வேறு புகார்கள் எழுந்தது.

ஏற்கனவே நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக 19 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவி அட்ரியின் தொடர்பு தெரியவந்தது. இந்நிலையில் பீகார் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் ரவி அட்ரியை உ.பி. போலீசார் கைது செய்தனர். நொய்டா அருகே உள்ள நீம்கா கிராமத்தில் பதுங்கியிருந்த ரவி அட்ரியை உ.பி. சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். பீகாரில் நீட் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ரவி அட்ரியே சதி கும்பலின் தலைவனாக செயல்பட்டவர். உத்தரப்பிரதேசத்தில் இருந்து நீட் வினாத்தாளை கசியவிட்டதும், ஜார்க்கண்ட் வழியாக பீகாருக்கு அனுப்பி வைத்ததும் அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே உ.பி. காவலர் தேர்வு வினாத்தாள் கசியவிட்ட விவகாரத்தில் ரவி அட்ரி கைது செய்யப்பட்டவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்வு முறைகேடுகளில் ரவி அட்ரி ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. 2007-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்றவர் ரவி அட்ரி. நீட் வினாத்தாள் கசிவு மட்டுமின்றி ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளிலும் ரவி அட்ரிக்கு தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த மோசடி கும்பலின் தலைவன் ரவி அட்ரி உத்தரப்பிரதேசத்தில் கைது! appeared first on Dinakaran.

Tags : Ravi Atri ,Uttar Pradesh ,Lucknow ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாளை விற்பனை செய்த...