×

சந்திரன் அருளும் திங்களூர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவையாறு கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருப்பழனத்திற்குச் சற்று முன்பாக வடக்கு நோக்கிப் பிரியும் சாலையில் திங்களூர் அமைந்துள்ளது. இவ்வூரின் நடுவண் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் என்னும் சிவாலயம் உள்ளது. இவ்வாலயம், கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே திகழ்ந்த ஒன்றாகும். அனபாய சோழன் என்னும் இரண்டாம் குலோத்துங்கனின் தலைமை அமைச்சராகத் திகழ்ந்து திருத்தொண்டர்புராணம் என்னும் பெரியபுராணத்தை எழுதியவரான சேக்கிழார், திங்களூர் பற்றியும் அவ்வூரிலிருந்த சிவாலயம் பற்றியும் இரண்டு பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். அப்பூதியடிகள் புராணத்தில் திருப்பழனம் என்னும் திருக்கோயிலை வழிபட்ட பின்பு, சிவனார் உறையும் தலங்களைக் கண்டு வணங்க வேண்டி திங்களூரின் அருகே வந்தார் என்பதை,

பொருப்பு அரையன் மடப்பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின்
திருப்பழனம் பணிந்து பணிசெய் திருநாவுக்கரசர்
ஒருப்படு காதலிற் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார்

– என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘‘திங்களூர் மறைத்தலைவர்’’ என்று அப்பூதியடிகளைக் குறிப்பிட்டுள்ளார். திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில், அவர் அப்பூதி அடிகளார் வீட்டில் அரவம் தீண்டி இறந்துபட்ட பெரிய திருநாவுக்கரசு என்னும் அடிகளாரின் திருமகனின் ஆவிதீர் சவம் தன்னை திங்களூரில் இருந்த சிவாலயத்தின்முன் கிடத்தி ‘‘ஒன்று கொலாம்’’ என்னும் பதிகத்தினைப் பாட அப்புதல்வன் விடம் நீங்கி எழுந்த திறத்தை,

அன்றவர்கள் மறைத்தனுக்கு அளவிறந்த கருணையராய்க்
கொன்றை நறுஞ்சடையார் தம் கோயிலின்முன் கொணர்வித்தே
ஒன்றுகொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர்பாடப்
பின்றை விடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்திருந்தான்

– என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின்செல்லப்
பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதிபுகுந்து

என்று அவ்வூரிலிருந்து நாவுக்கரசர் திருப்பழனம் சென்ற திறத்தை விவரித்துள்ளார்.

சேக்கிழார் பெருமானின் திருவாக்கை ஆழ்ந்து நோக்கும்போது திங்களூரில் இருந்த சிவாலயத்தின் முன் நின்றவாறுதான், ‘‘ஒன்றுகொலாம்’’ என்ற பதிகத்தை திருநாவுக்கரசு பெருமானார் பாடினார் என்பது உறுதியாகின்றது. எனவே, திங்களூரும் தேவாரப் பாடல்பெற்ற தலம் எனக் கொள்வதே சாலப்பொருந்தும். நாவுக்கரசர் வாழ்ந்த கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் தோன்றியதே இச்சிவாலயமாகும்.தற்போது இவ்வாலயம், சோழர்காலக் கட்டுமானத்துடன் திகழ்கின்றது. கிழக்கு நோக்கி அமைந்த மூலவரான கைலாசநாதர் சந்நதியும், தெற்கு நோக்கி அமைந்த பெரியநாயகி அம்மை சந்நதியும், பரிவாராலயங்களும் சோழர்காலத் திருமேனிகளோடு விளங்குகின்றன.

திங்களூர் என்னும் பெயருக்கு ஏற்ப இவ்வாலயத்தில் சந்திரனுக்கென தனிச்சந்நதி உள்ளது. இரு கரங்களிலும் குவளை மலர்களை ஏந்தியவராக நின்ற கோலத்தில் சோழர்கால வடிவமைப்புடன் சந்திரனின் திருமேனி விளங்குகின்றது. நவக்கிரகத் தலங்களில் திங்களூர் ஆலயம் சந்திரனுக்குரியதாகப் போற்றப்பெறுகின்றது. சந்திரனின் சிறப்புகளை வேதங்களும், தொன்னூல்களும் சிறப்பாகக் குறிக்கின்றன. நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடி வருபவன் சந்திரன். சூரியனையும் சந்திரனையும் சேர்த்து வணங்குவது மரபு. வெங்கதிரோன் என்று சூரியனைச் சொல்லுவர்; சந்திரனைத் தண்கதிரோன் என்று கொண்டாடுவர்.

உணவு, பயிர், அமுதம், இன்பம், கவிதை, காதல், தண்மை, பாற்கடல், குமுதமலர், சோமலதை, கள், பெண் ஆகிய இன்பப் பொருள்களோடெல்லாம் தொடர்புடையவன் சந்திரன். அவனை விரும்பாத மக்களே இல்லை. அவனுக்கு லோகப்பிரியன் என்று பெயர் உண்டு. வேதங்களில் சந்திரனை ஸோமன் என்றும், சந்திரமா என்றும் குறிக்கப்பெற்றுள்ளன.

சந்திரன் அமுதமயமானவன் என்றும், உலகில் உள்ள பயிர்களுக்கு வளர்ச்சி தருபவன் என்றும், ஸோமபானத்தை அருள்பவன் என்றும் சொல்கின்றன. புராணங்களில் சந்திரனைப் பற்றியுள்ள கதைகள் பல. இதிகாசமாகிய பாரதத்தில் பல இடங்களில் அவனைக் காண்கிறோம். சந்திரனைத் தம்முடைய குல முதல்வனாகப் பெற்றவர்கள் பாண்டவர்கள். வில்லிபுத்தூரார் ஆதிபருவத்தின் தொடக்கத்திலே சந்திரனுடைய புகழைப் பாடுகிறார்.

‘‘எங்கள் இறைவனாகிய திருமாலின் இருதயத்திலே பிறந்தவன்; நாள்தோறும் வானில் உள்ள நட்சத்திர மங்கையரைக் கூடிக் குலவுபவன்; வானவருக்கு அமுது அளிப்பவன்; சிவபெருமான் திருமுடிமேல் இருப்பவன்; பாம்புகளின் மூச்சுக் காற்றினால் மயங்கிக் கிடந்த பூமியைத் தன்னுடைய அமுத நிலவைப் பொழிந்து, வெப்பம் நீங்கித் தண்மையடையச் செய்தவன்.

தேவர்கள் அமுது கடைந்தபோது தூணாக நின்றதோடு, அதில் தோன்றிய ஆலகால விஷத்தின் கொடுமை தணியும்படி அக்கடலில் அமுதுடன் அவதரித்தவன்; பதினாறு கலைகளை உடையவன்; சூரியனிடத்தில் அக்கலைகளைக் கொடுத்து, மறுபடியும் பெற்றுக்கொள்பவன்; அத்திரி முனிவர் கண்ணிலும் அக்னியிலும் தோன்றினவன்; வேதமந்திரங்களைச் சொல்லி, அந்தணர்கள் போற்றி வழிபடும் பெருமையை உடையவன்; புதன் என்னும் புதல்வனைப் பெற்றவன்’’ என்பவை அவர் பாடலால் அறியப்பெறும் செய்திகள்.

திருக்கோயில்களில் நவக்கிரகங்களில் ஒன்றாக இருப்பதோடு, தனியே பரிவார தேவதைகளிலும் ஒருவனாகச் சந்திரனை வைத்து வழிபடுவது வழக்கம். அவனுடைய திருவுருவத்தை அமைப்பதற்குரிய இலக்கணங்களை ஆகமங்கள் சொல்கின்றன. சந்திரனைத் தியானிப்பதற்குரிய ஸ்லோகங்கள் சில உண்டு. அவற்றிலும் தண்கதிரவனுடைய உருவ வருணனையைக் காணலாம். சந்திரமூர்த்தியை, வீற்றிருக்கும் திருக்கோலத்திலும் வழிபடலாம். நின்ற கோலத்திலும் திருவுருவமைத்துப் பூசிக்கலாம். சந்திரன் சிங்காதனத்தில் எழுந்தருளியிருப்பான். அவனுடைய நிறம் தூயவெண்மை.

அவன் தலையைச் சுற்றி ஒளிவட்டமாகிய பிரபைத் திகழும். பல்வகை அணிகள் புனைந்தவன். பன்னிற மலர்மாலையை அணிந்தவன். வெள்ளை ஆடை உடுத்தியிருப்பான். குமுதத்தை ஏந்திய இரண்டு திருக்கரங்களை உடையவன். திருமார்பில் பொன்னூல் இழை திகழும். எழில் ஒழுகும் திருமுகமும் அமைதி தவழும் பார்வையும் உடையவன் தண்கதிரோன். சிற்ப ரத்தினம் என்ற நூல், சந்திரனைத் தேரில் அமர்ந்த கோலத்தில் காட்டுகிறது. பத்துக் குதிரைகள் பூட்டிய தேர் அது.

சந்திரமூர்த்தியின் வலத்தை காந்தியென்னும் தேவியும், இடப்புறத்தே சோபை என்னும் தேவியும் வீற்றிருப்பர். திருத்தேரின் மேலே இடப்பக்கத்தில் சிங்கக்கொடி அசையும். பூர்வகாரண ஆகமம், சந்திரனுக்கு அருகே ரோகிணி வீற்றிருப்பதாகச் சொல்கிறது.நவக்கிரக ஆராதனம் என்னும் நூல், சந்திரனை வழிபடும் முறைகளை விரிவாகச் சொல்கிறது. அதில் உள்ள தியான ஸ்லோகத்தினால் சந்திரனுடைய திருக்கோலம் புலனாகிறது. அக்னி திக்கில் பத்துக் குதிரைகள் பூட்டிய தேரில் சந்திரன் எழுந்தருளியிருப்பான்.

அத்தேருக்கு இரண்டு சக்கரங்கள், சதுரமான பீடத்தில் கதாயுதத்தை ஏந்தி, அவன் வீற்றிருப்பான். தண்மை அவன் இயல்பு. வெண்மை அவன் வண்ணம். அவன் ஆடையும் வெள்ளியது. திருமுடி தரித்திருப்பான். அமுதமயமாக விளங்குபவன். கர்க்கடக ராசிக்கு அதிபதி. சூரியனுக்கு அக்னி திசையில் இருப்பவன். சந்திரனுக்கு அதிதேவதை நீர்; பிரத்தியதிதேவதை கெளரி.

தஞ்சைப் பெரிய கோயிலில் அஷ்டதிக் பாலகர் ஆலயங்களில் சோமனாகிய சந்திரனுக்கு வடதிசையில் ஆலயம் உள்ளது. இவ்வாறு சந்திரனை வழிபடு தெய்வமாகக் கொண்டு விளங்கும் பல்லவர் மற்றும் சோழர் கால திங்களூர் ஆலயம் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்ததாகும்.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post சந்திரன் அருளும் திங்களூர் appeared first on Dinakaran.

Tags : Thingaluru ,Kungkum Anmigam ,Thiruvaiyaru Kumbakonam Highway ,Thirupapanam ,Dingalur ,Chandran Arulum Dingalur ,
× RELATED இந்த வார விசேஷங்கள்