×

ஆன்மிகம் மிட்ஸ்: நிறம் மாறும் சிவன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

நோய் தீர்க்கும் முக்குடி பிரசாதம்

கேரள மாநிலம் இரிஞ்ஞாலக்குடா அருகில் உள்ள பரதன் கோயிலில், பரதன் தவக்கோலத்தில் இருப்பதால், பூஜையின்போது, வாசனைத் திரவியங்கள் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் கிடையாது. ஐப்பசி மாதம் திருவோணத்தன்று புத்தரிசி நைவேத்தியம் உண்டு. புதிதாக அறுவடையான அரிசி உணவு நிவேதிக்கப்பட்டு, பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள், முக்குடி என்ற வயிற்று வலியை போக்கும் பிரசித்தி பெற்ற பிரசாதமும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த பிரசாதம், பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் ரகசியம் காத்து தயாரிக்கிறார்கள் என்பது விசேஷமான செய்தி.

மனநலம் அருளும் மாலோலன்

கருவறையில் ஸ்ரீதேவி – பூதேவியரோடு நரசிம்மர் அருள்புரியும் திருக்கோலத்தை, வைகுண்ட நரசிம்மர் என்று வர்ணிக்கிறார்கள். நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள திருக்குறையலூரில், இந்த வைகுண்ட நரசிம்மர் அருள்கிறார். பார்வதியைப் பிரிந்த ஈசனுக்கு ஆறுதல் அளிக்க நரசிம்மர் அவருக்கு காட்டியருளிய திருக்கோலம் இது. திருமங்கையாழ்வார் அவதாரம் செய்த தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள், மனநலம் குன்றியோர் அஷ்டமி, சுவாதி நட்சத்திரத் தினங்களில் இவருக்குப் பானகம் நிவேதித்து வணங்கி, அதிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள்.

தேர்த்திருவிழா காணும் தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி தனிப்பெருங்கருணையோடு, மூலவராகவும், உற்சவராகவும் அருளும் திருத்தலம். பூளை எனும் மரத்தை தலவிருட்சமாகக் கொண்டதால் திருஇரும்பூளை ஆனது. இத்தலத்தில், குரு பகவான் தேவகுருவாக அருள்கிறார். இவருக்கு 24 நெய்த் தீபங்கள் ஏற்றி உட்பிராகாரத்தை 24 முறை மௌனமாக வலம் வந்தால், குருபகவான் திருவருள் கிட்டும். இந்த தட்சிணாமூர்த்திக்கு தேர்த்திருவிழா நடப்பது விசேஷம். கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவிலும், நீடாமங்கலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது இத்திருத்தலம்.

நிறம் மாறும் சிவன்

பருவக் காலத்திற்கேற்ப வெண்ணிறமாகவும் செந்நிறமாகவும் காட்சி தரும் சிவனின் தீண்டாத்திருமேனி இருக்கும் ஊர், திருவூறல். திருமணப்பேறு, உத்தியோக வாய்ப்பு முதலான பலன்களுக்கு வரமருளும் தலம் இது. குரு பரிகாரத் தலமும்கூட. குருவருள் வேண்டுவோர், அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய ஆலயம். தக்கனின் யாகத்திற்குச் சென்ற பழி நீங்கிட, அன்னை தாட்சாயிணி ஒவ்வொரு சிவாலயமாக வழிபட்டு வர, முடிவில் க்ஷீர நதிக்கரைக்கு வந்து, நதிக்கரை ஓரம் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டாள்.

அப்போது, வெள்ளம் கரைபுரண்டு வந்தது. அதிலிருந்து காத்திட சிவலிங்கத்தைத் தன் மார்போடு கட்டித் தழுவினாள் அன்னை. இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், அன்னையின் மார்புத் தழும்புகள் இன்றும் சிவலிங்கத்தின் மீது காணப்படுகின்றன. வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் திருவூறல் எனப்படும் தக்கோலம் அமைந்திருக்கிறது.

வேத மரங்கள்

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை அணுகி ‘‘பெருமானே! அனைத்தும் ஒடுங்கி விடும் பிரளய காலத்தில், நாங்கள் அழியாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டன. அதற்கு சிவபெருமான், ‘‘வேதங்களாகிய நீங்கள் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வமர வடிவில் நின்று தவமியற்றுங்கள்’’ என்று கூறினார். அதன்படி வேதங்கள், வில்வ விருட்சத்தின் வடிவத்தில் தவம்புரியும் திருத்தலமான திருவைகாவூருக்கு ‘‘வில்வாரண்யம்’’ என்ற பெயரும் உண்டு.

தொகுப்பு; நாகலட்சுமி

The post ஆன்மிகம் மிட்ஸ்: நிறம் மாறும் சிவன் appeared first on Dinakaran.

Tags : Shiva ,Mukudi ,Kerala ,Iringalakuda ,Paratan Temple ,Bharatan ,
× RELATED மங்கலங்களை வாரி வழங்கும் சிவராத்திரி