×

காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் பகுதியில் புதர் மண்டி கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

காஞ்சிபுரம், செப். 11: காஞ்சிபுரம் நகரத்தின் மேட்டுத்தெரு, எம்எம் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ரங்கசாமி குளம் பகுதி வழியாகச் செல்லும் வேகவதி நதியின் துணை கால்வாயில் விடப்படுகிறது. இந்நிலையில், இப்குதியை சேர்ந்த பொதுமக்களில் சிலர் இந்த மழைநீர் கால்வாயில் குப்பைக் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால், கால்வாய் குப்பை மேடாகவே காட்சி அளிக்கிறது. குப்பைக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அப்பகுதிகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த கழிவுநீர் கால்வாயில் கோரைப் புற்கள் மற்றும் செடி, கொடிகள் அதிகளவில் முளைத்து புதர் மண்டிக் கிடக்கிறது.

இதனால், கழிவுநீர் முறையாக வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள தேநீர் கடைகள், சாலையோரக் கடைகளில் உணவருந்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீர் முறையாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் பகுதியில் புதர் மண்டி கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Rangasamikulam ,Kanchipuram ,Mtuttheru ,MM Avenue ,Kanchipuram Rangasamy ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...