×

6 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் 7 தொகுதிகளில் 4ஐ கைப்பற்றி இந்தியா கூட்டணி அபாரம்: உபியில் படுதோல்வியால் பா.ஜ அதிர்ச்சி

புதுடெல்லி: நாடு முழுவதும் காலியாக இருந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 4 தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக உபியில் பா.ஜ படுதோல்வி அடைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பாகேஷ்வர், உத்தரபிரதேசத்தில் கோசி, கேரளாவின் புதுப்பள்ளி, மேற்கு வங்கத்தில் துப்குரி, ஜார்கண்டில் தும்ரி, திரிபுராவின் போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்ததால் இந்த 6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கும் கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.

1. உத்தரபிரதேச மாநிலம் கோசி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட சமாஜ்வாடி வேட்பாளர் சுதாகர்சிங் 42,759 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 1,24,427 ஓட்டுகளும், பா.ஜ வேட்பாளர் தாராசிங் சவுகான் 81,668 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் வெற்றி பெற்றவர் தாராசிங் சவுகான். இவர் கடந்த ஜூலை மாதம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் சேர்ந்தார். ஆனால், இந்த முறை பாஜவில் வேட்பாளராக போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி நடைபெறும் உ.பியில் பாஜ படுதோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

2. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், உம்மன்சாண்டி மகனுமான சாண்டி உம்மன் வெற்றி பெற்றார். அவர் 37,719 ஓட்டு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெய்க் சி தாமசை தோற்கடித்தார். சாண்டி உம்மன் 80,144 ஓட்டுகளும், ஜெய்க் சி தாமஸ் 42,425 ஓட்டுகளும் பெற்றனர்.

3. மேற்குவங்க மாநிலம் துப்குரி தொகுதியில் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வென்ற பா.ஜ எம்எல்ஏ பிஷ்ணு பதா ராய் ஜூலை 25ம் தேதி இறந்ததால் பா.ஜ வேட்பாளராக 2021ல் ஜம்முவில் தீவிரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர் மனைவி தாப்சி ராய் நிறுத்தப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும், கல்லூரி பேராசிரியருமான நிர்மல் சந்திரராய் 4313 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 96,961 ஓட்டு பெற்றார். பா.ஜ வேட்பாளர் தாப்சி ராய் 92,648 ஓட்டுகளும், காங்கிரஸ் ஆதரவு பெற்ற மார்க்சிஸ்ட் வேட்பாளர் 13,666 ஓட்டுகளும் பெற்றனர். இதனால் பா.ஜவிடம் இருந்து துப்குரி தொகுதியை திரிணாமுல் தட்டிப்பறித்தது.

4. உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் தொகுதியில் பா.ஜ எம்எல்ஏ சந்தன்ராம்தாஸ் மரணம் அடைந்ததால் அவரது மனைவி பார்வதி தாஸ் பா.ஜ வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இடைத்தேர்தலில் பார்வதி தாஸ் 2405 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 33,247 ஓட்டுகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக 2ம் இடத்தை பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் பசந்த்குமார் 30,842 ஓட்டுகள் பெற்றார். இதனால் பாகேஷ்வர் தொகுதியை பா.ஜ 2007ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 5வது முறையாக தக்கவைத்துக்கொண்டது.

5. ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி தொகுதியில் அமைச்சர் ஜாகர்நாத் மக்தோ மறைவால் நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரும், அமைச்சர் மக்தோவின் மனைவியுமான பெபி தேவி 17 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ வேட்பாளர் யசோதா தேவியை வீழ்த்தினார். பெபி தேவி 1,35,480 ஓட்டுகளும், யசோதா தேவி 1,18,380 ஓட்டுகளும் பெற்றனர்.

6. திரிபுராவில் போக்ஸாநகர் இடைத்தேர்தலில் பா.ஜ வென்றது. அந்த தொகுதியில் பா.ஜ வேட்பாளர் தபாஜல் உசேன் 30,237 ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் மிசான் உசேன் வெறும் 3909 ஓட்டு மட்டுமே பெற்றார்.

7. திரிபுராவின் தன்பூர் தொகுதியில் பா.ஜ வேட்பாளர் பிந்து தேப்நாத் 18,871 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேப்நாத் 30,017ஓட்டுகளும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் கவுசிக் சந்தா 11,146 ஓட்டுகளும் பெற்றனர்.

* டெபாசிட் பறிகொடுத்த பாஜ
கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்ட ஹரிக்கு 11,694 வாக்குகள் கிடைத்தன. ஆனால் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட லிஜின் லாலுக்கு 6,558 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இவருக்கு இந்த தேர்தலில் 5.02 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் அவரது டெபாசிட் பறிபோனது.

The post 6 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் 7 தொகுதிகளில் 4ஐ கைப்பற்றி இந்தியா கூட்டணி அபாரம்: உபியில் படுதோல்வியால் பா.ஜ அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : India ,BJP ,UP ,New Delhi ,India alliance ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...