×

ஒற்றுமை வளர்க்கும் துளசீஸ்வரர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒற்றுமை வளர்க்கும் துளசீஸ்வரர்

அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 லிங்கங்களுள் ஒன்று துளசீஸ்வரர். இவர் சிங்கப் பெருமாள் கோயில் – வல்லக் கோட்டை பாதையில் உள்ள கௌத்தூரில் கோயில் கொண்டிருக்கிறார். பொதுவாக, வில்வ தளங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும். இத்தலத்தில், துளசி தளங்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஒற்றுமையில்லாத கணவன் – மனைவி மற்றும் ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்தவர்கள், இந்த ஈசனை துளசி தளங்களால் அர்ச்சித்து வணங்க, அந்த குறைபாடுகள் நீங்குவதாக ஐதீகம்.

கல் ஸ்ரீசக்கரம் உள்ள பீடம்

மதுரையில், மத்தியில் இருப்பதால் “மத்யபுரிநாயகி’’ என போற்றப்படும் அம்பிகையை வேண்டிக் கொள்ள, திருமணம் இனிதே கைகூடுகிறது. அதனால், இந்தத் தாய் மாங்கல்ய வரப் பிரசாதினி எனப்படுகிறாள். இந்த தேவி நின்றருளும் தாமரை பீடத்தில், கல்லால் ஆன சக்ரம் உள்ளது. பொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்வதே வழக்கம். இங்கு கல்ஸ்ரீசக்ரம் வித்தியாசமானதாகக் கருதப்படுகிறது. பத்து தளங்களைக் கொண்ட தசதளவில்வம் இத்தல விருட்சம். ஊர்ப் பெயரை ஒட்டி இத்தல ஈசன் மதுரநாயகர் என்றும் இறைவி மதுரநாயகி என்றும் வணங்கப்படுகின்றனர். பூலோக கைலாயம் என அழைக்கப்படும் இத்தலம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் உள்ளது.

திருமண வரமருளும் அஷ்டமி யாகம்

கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, நாதன்கோயில். இங்கு சுக்லபட்ச அஷ்டமி நாளில், ஸ்ரீஸூக்த யாகம் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், தொடர்ந்து எட்டு அஷ்டமி யாகங்களில் கலந்து கொண்டு, செண்பகவல்லித் தாயாரை தரிசித்தால், தடைகள் அகன்று திருமணம் நிச்சயமாகிறது. தம்பதியர், இந்த யாகத்தை தரிசிக்க, அவர்களிடையே ஒற்றுமை ஓங்கும் என நம்பப்படுகிறது.

வித்தியாசமான அர்த்தநாரீஸ்வரர் அருளும் தலம்

தஞ்சாவூரில் உள்ள கரந்தட்டாங்குடி பெரியநாயகி சமேத வசிஷ்டேஸ்வரர் ஆலயம், வசிஷ்ட முனிவரால் வழிபடப்பட்ட தலம். இத்தல ஈசனின் கருவறை, கோஷ்டத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரரின் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக ஈசனின் வலப்புறம் அம்பிகை இடம் பெற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, வித்தியாசமானதாக இருக்கிறது.

தேவியருடன் பெற்றோருக்கு பூஜை

திருச்சி மாவட்டம் வயலூரில் உள்ள முருகன், தேவியரான வள்ளி – தெய்வானை இருவருடன் சேர்ந்து, இத்தல சிவன் – பார்வதிக்கு பூஜை செய்கின்றனர். வேறு எங்கும் இது போன்ற அமைப்பு இல்லை.

நினைத்ததை நிறைவேற்றிவைக்கும் அம்மன்

கோபிச் செட்டிப் பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது, பாரியூர் அம்மன் கோயில். இங்கு, இரண்டு விசேஷ அம்சங்கள் உண்டு. ஒன்று பூ வைத்து வேண்டுதல், மற்றொன்று குண்டம் திருவிழா. குண்டம் (தீமிதி) திருவிழாவில் (சித்திரை மாதம்) லட்சக் கணக்கில் பக்தர்கள் பங்கு பெறுவர். இந்த அம்மனுக்கு அர்ச்சனை செய்து நலிந்தவர்களுக்கு அன்னதானம் செய்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தொகுப்பு: அருள்ஜோதி

The post ஒற்றுமை வளர்க்கும் துளசீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Tulaseeswarar ,Agathiyar ,Singapore ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி