நாமக்கல், செப்.8: நாமக்கல்லில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற்றது. இதில் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், மாவட்ட அளவிலான கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம், 9 முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை, நாடகம் ஆகிய 5 தலைப்புகளில் கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, 2023-24ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கலை உற்சவ போட்டிகளை, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி குத்து விளக்கேற்றி நேற்று துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, உதவி மாவட்ட திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். 10 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இன்று (8ம் தேதி) காண்கலை பிரிவில் சிற்பம் செய்தல், களிமண் பொம்மை செய்தல், நாட்டுப்புற நடனம் போன்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் appeared first on Dinakaran.
