நாமக்கல், ஜன.12: கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு, மாவட்ட அளவில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம், பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, தடையில்லா இணைய சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருவாய் உட்கோட்டம் அடிப்படையில், 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர் அதிகபட்சம் 2 மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். அந்த மாவட்டங்கள், நிறுவனத்தின் வணிகச் செயல்பாட்டுப் பகுதி அமைந்துள்ள மாவட்டம் மற்றும் அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில், பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், பராமரிப்பு பணிகள், சேவை தடைகளை காலதாமதமின்றி சரிசெய்தல்,விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை கிடைப்புத் தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும். விண்ணப்ப பதிவு நடைமுறை இணையதள போர்ட்டல் மூலம் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவு-ஐ தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ரூ.25,000 (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் ரூ.2 லட்சம் பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர், தலைமையகத்தால் பணி ஆணை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
