×

கம்பஹரேஸ்வரர் கோயிலின் கவின்மிகு சிற்பங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: கம்பஹரேஸ்வரர் கோயில், திருபுவனம் ( கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ)

காலம்: மூன்றாம் குலோத்துங்க சோழன், (பொ.ஆ.1178-1218) சோழர் கோயில் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சாவூர் பிரகதீஸ் வரர் கோயில், கங்கைக் கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் (யுனெஸ்கோவினால் மூன்று சிறந்த வாழும் சோழர் கோயில்களாக வகைப்படுத்தபட்டவை) ஆகியவற்றுடன் ஒப்பிடும் வகையில் மிகப்பிரம்மாண்டமாகவும், சிற்பத்திறனுடனும் அமைக்கப்பட்டது இவ்வாலயம்.

மற்ற கோயில்களில் உள்ள விமானங்களைப் போலவே இவ்வாலயத்தின் விமானமும் அமைந்துள்ளது. கருவறை விமானம், 7 அடுக்குகளுடன் சுமார் 126 அடி உயரம் கொண்டது. உள் மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள், கல் சாளரங்கள், தாராசுரம் கோயிலில் உள்ளதைப்போன்றே சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. கருவறை மற்றும் மண்டபங்களின் வெளிப்புற அடித்தளங்கள், புராண மற்றும் போர்க்காட்சி சிற்பங்களால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளன. யானை பிரசவிக்க, பிற யானைகள் அணைத்து உதவும் சிற்பம், போரில் வீரர்களை யானை தனது கால்களால் நசுக்கும் சிற்பம், யானைகள், யாளிகள் மீதமர்ந்து போரிடும் வீரன் ஆகியவை வியப்பூட்டுபவை.

கம்பஹரேஸ்வரர்

சிவன் லிங்கவடிவில், ‘கம்பஹரேஸ்வரர்’ என வணங்கப்படுகிறார். வடமொழியில் ‘கம்பம்’ என்றால் ‘நடுக்கம்’ என்று பொருள் (பூகம்பம் – நிலநடுக்கம்). ஒரு பிராமணனைத் தவறுதலாகக் கொன்றதால், பிரம்மராக்ஷசனால் சபிக்கப்பட்ட மன்னனின் நடுக்கத்தைப் போக்கிய கடவுள் என்பதால் ‘நடுக்கம் தீர்த்த நாயகன்’ என்று அழகு தமிழில் அழைக்கப்படும் இவ்விறைவன், ‘திருபுவன ஈச்சரமுடையாக தேவர்’ என்ற திருப்பெயரில் இவ்வாலயக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். இறைவி: தர்மசம்வர்த்தினி அறம் வளர்த்த நாயகி.

சரபேஸ்வரர்

இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால் உலக உயிர்கள் அனைத்தும் அஞ்சின. மனிதன், கழுகு மற்றும் சிங்கம் இணைந்த வடிவில் சிவன், சரபேஸ்வரராக உருவெடுத்து நரசிம்மரை அமைதிப்படுத்தினார்.பிற கோயில்களில் தூண்கள் மற்றும் கோஷ்டத்தில் மட்டுமே வடிக்கப்பட்டிருக்கும் சரபேஸ்வரர், இவ்வாலயத்தில் 7 அடி உயரத்தில் தனி சந்நதியில் அருள் பாலிப்பது சிறப்பு. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேஸ்வரர்தான்.

திருபுவனம்

சோழர்களில் கடைசிப் பேரரசரான மூன்றாம் குலோத்துங்க சோழன், போர்களில் ஈழம், கொங்குநாடு, வடநாடு, சேரர், பாண்டியர் போன்ற பல நாடுகளையும் வென்றதைக் கொண்டாடும் வகையில், ‘திரிபுவன சக்கரவர்த்தி’ (மூவுலகையும் அரசாள்பவன்) என்ற பட்டத்தைத்சூடி, தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ‘திரிபுவனம்’ என்ற ஊரையும், அதில் இந்த பிரம்மாண்ட சிவாலயத்தையும் எழுப்பியதாக இவ்வாலயக் கல்வெட்டு கூறுகின்றது.

‘‘செம்பொன்வீர சிங்கா தனத்து வீற்றிருந்தருளிய
கோப்பரகேசரி வன்மரான திரிபுவனச் சக்கர வர்த்திகள்
ஸ்ரீமதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலை
யுங்கொண்டு வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணி
யருளிய திரிபுவன வீரசோழ தேவற்கு யாண்டு….’’
– மூன்றாம் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி

ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியன் இவ்வாலயத்திற்கு செய்த திருப்பணிகள் குறித்த கல்வெட்டுத்தகவல்களும் உள்ளன.

தொகுப்பு: மது ஜெகதீஷ்

The post கம்பஹரேஸ்வரர் கோயிலின் கவின்மிகு சிற்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Kavinmiku ,Kambhareswarar temple ,Kungumum Spiritual sculpture and ,Tiruphuvanam ,Kumbakonam ,
× RELATED காமரசவல்லியின் கவின்மிகு சிற்பங்கள்