×

கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த திட்டப்பணிகள் ஆய்வு; மக்களின் மனுக்களை காகிதமாக பார்க்காமல் வாழ்க்கையாக பார்த்து நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

சென்னை: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் அளிக்கும் மனுக்களை காகிதமாக பார்க்காமல் அவர்களின் வாழ்க்கையாக பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் அரசு பிரதிநிதிகளுக்கும் ஆலோசனை வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் பல்வேறு துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஷ் அகமது, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி காவல் ஆணையரக ஆணையர் கே.சங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரக்கோணம் எஸ்.ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் கே.ஜெயக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாண், முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராஜன், எஸ்.சுதர்சனம், க.கணபதி, துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ராஜவேல், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விஸ்வநாதன் உதவி கோட்ட பொறியாளர் தஸ்னவிஸ் பெர்னான்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பாக 912 பயனாளிகளுக்கு ரூ.35.83 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த ஆய்வுக்கூட்டத்தை பொறுத்தவரை, முதல்வரின் முகவரியில் தரப்படும் மனுக்களுக்கு தரமான பதில்கள் தருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை குறைகளை மனுக்கள் மூலமாகத்தான் தெரிவிப்பார்கள். இந்த மனுக்களின் மீது குறித்த காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும் மனுக்களுக்கு பதில் தந்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்தில் இல்லாமல் உங்கள் துறைக்கானது அல்ல என்று தெரிந்தாலும் அந்த நபருக்கு வேறு ஏதேனும் வகையிலாவது உதவலாம் என்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் மனுதாரருக்கு உதவ வேண்டும். குறிப்பாக ஏழை, எளிய மக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோர் தரும் மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் அளிக்க வேண்டும்.

ஏழை, எளிய மக்கள் தரும் மனுக்களை வெறும் கடிதமாக, பேப்பராக பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையாக பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கடி தெரிவிப்பார்கள். இதனை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உழவர் சந்தையை பொறுத்தவரை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் முழுமையாக பயன்படும் என்பதற்காக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த உழவர் சந்தை திட்டம். உழவர் சந்தை திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்னும் வேகமாக உருவெடுத்து செயல்பட வேண்டும். உழவர் சந்தைக்களுக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தி தந்தால் விவசாயிகளும் மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள். அதேபோல் கும்மிடிப்பூண்டியிலும் உழவர் சந்தை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து அங்கு உழவர் சந்தை அமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு கல்விக்கும் மருத்துவத்திற்கும்தான் அதிக முக்கியத்துவம் தந்து திட்டங்களை தீட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக, பள்ளி கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியவர் நமது முதலமைச்சர்தான். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உட்பட பல்வேறு முற்போக்கு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இதில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக்கல்வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டி உள்ளது.

பேருந்து நிலையம், சாலைகள் என ஒவ்வொரு அரசு திட்ட பணிகளும் எப்பொழுது முடிக்க முடியும் என்று அந்தந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இன்று தெரிவித்துள்ளீர்கள். பணிகளை விரைந்து நிறைவு செய்வது எப்பொழுது என்பது குறித்த காலத்தையும் நீங்களே நிர்ணயித்து உள்ளீர்கள். நீங்கள் இந்த காலகட்டத்திற்குள் முடிப்பதாக சொன்ன நாட்களை நான் குறித்து வைத்துள்ளேன். மாவட்ட கலெக்டரோடு நீங்கள் ஒன்றிணைந்து இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சரே நேரடியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் சிறப்பாக செயல்படும் மாவட்டத்திற்கு பாராட்டுக்களும், தொய்வு ஏற்படும் மாவட்டங்களில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆதலால் அதனை நன்குணர்ந்து நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். மேலும் இன்றைய ஆய்வின் அறிக்கை முதலமைச்சரின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு மிகச் சிறப்பான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், அந்த திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்று இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து அரசுக்கு நற்பெயர் பெற்று தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், கரிக்கலவாக்கம் பகுதியில் தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பாக சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ் தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழி சாலை (பிரிவு-2) வரை ரூ.1,540 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இச்சாலை பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், பொன்னேரி சப் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், ஆவடி துணை காவல் ஆணையர் ஜெயலட்சுமி, தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைமை பொறியாளர் இளங்கோ, கண்காணிப்பு பொறியாளர் தட்சிணாமூர்த்தி, மாசு கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவகர்லால், மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா சுதாகர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரூபேஷ்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார், திமுக ஒன்றிய செயலாளர் கமலேஷ், மாவட்ட பொருளாளர் தொழுவூர் நரேஷ்குமார், நகர மன்ற தலைவர்கள் உதயமலர் பாண்டியன், சரஸ்வதி பூபதி, துணை தலைவர்கள் ரவிச்சந்திரன், சாமிராஜ், ஒன்றிய குழு தலைவர் பூவை ஜெயக்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் சரஸ்வதி ரமேஷ், சுஜாதா, மகாலிங்கம் மகாலட்சுமி மோதிலால் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த திட்டப்பணிகள் ஆய்வு; மக்களின் மனுக்களை காகிதமாக பார்க்காமல் வாழ்க்கையாக பார்த்து நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Thiruvallur District Collector ,Office Rural Development Agency ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...