*2,500 சவாரியில் 50 ஆயிரம் பேர் பயணம்
மூணாறு : கேரளாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான மூணாறு அருகே அமைந்துள்ள மாட்டுப்பட்டி படகு சவாரி மையத்தில் இயங்கி வரும் மின்சாரப் படகு (இ-படகு), சேவை தொடங்கிய வெறும் 8 மாதங்களில் ரூ.50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
மாட்டுப்பட்டி அணைப் பகுதியில் வன விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஒலி மாசுபாட்டையும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் ஏற்படும் காற்று மாசுபாட்டையும் குறைக்கும் நோக்குடன், மின்சாரத் துறைக்குச் சொந்தமான இந்தப் படகு மையத்தில், மின் பேட்டரி மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் சுற்றுலா மின்சாரப் படகு சேவை கடந்த மே 7-ம் தேதி தொடங்கப்பட்டது. சேவையைத் தொடங்கிய 8 மாதங்களில், இந்தப் படகு சவாரி மூலம் மொத்தமாக ரூ.50 லட்சம் வசூல் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இந்தக் காலகட்டத்தில், சுமார் 2,500 படகு சவாரிகள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 50,000 சுற்றுலாப் பயணிகள் இதில் பயணம் செய்துள்ளனர். ஒரே நேரத்தில் 20 பேர் பயணிக்கக்கூடிய இந்தப் படகில் ஒரு சவாரிக்கு ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பாரம்பரிய டீசல் படகுகளை ஒப்பிடும்போது, இந்தப் படகிற்கான இயக்கச் செலவு மிகவும் குறைவாக உள்ளது. டீசல் படகு ஒரு சவாரிக்குச் சுமார் ரூ.500 டீசல் செலவு ஆகும்.
ஆனால், மின்சாரப் படகு 12 மணி நேரம் சார்ஜ் செய்தால் 12 முறை சவாரிகள் நடத்த முடியும். ஒரு நாளைக்கு இதற்கான மின்சாரச் செலவு வெறும் ரூ.500 மட்டுமே ஆகும். குறைந்த இயக்கச் செலவில் அதிக வருவாய் ஈட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் மின்சாரப் படகு சேவை, மாட்டுப்பட்டி அணைப் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
