×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் இணை மானிய திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

 

காஞ்சிபுரம், ஆக.27: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் இணை மானிய திட்டத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் குத்துவிளக்கேற்றி ெதாடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இணை மானிய திட்ட விளக்க கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, வாழ்ந்து காட்டுவோம் இணை மானிய திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், கலெக்டர் கலைசெல்வி மோகன் பேசியதாவது:

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 2 வட்டாரங்களில் உள்ள 101 கிராம ஊராட்சிகளில் ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், தொழில் முனைவுகளுக்கான நிதி வழி வகைகளை ஏற்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சமான இணை மானிய திட்டம் குறித்த பயிற்சியானது வங்கியாளர்கள், வட்டார மற்றும் மாவட்ட பணிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இணை மானிய திட்டம் விளக்க கையேட்டு பிரதியினையும் வெளியிட்டு, தமிழக அரசின் சீரிய திட்டமான வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் 30 சதவீத மானியத்துடன் கடனுதவி கிடைக்கும் இணை மானிய திட்டம் குறித்து அதிக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகமான நபர்களை இத்திட்டத்தில் இணைய செய்ய வேண்டும். மேலும், வங்கியாளர்களும், கடனுதவிகளை விரைந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். பின்னர், ஒரு பயனாளிக்கு ரூ.3 லட்சத்திற்கான இணை மானிய திட்ட கடனுதவிக்கான காசோலையையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் 138 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.12.9 கோடி அளவில் கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வங்கி பிரதிநிதிகள், பணியாளர்கள், தொழில் சார் சமூக வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் இணை மானிய திட்டம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kancheepuram District ,Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram district ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...