×

சில அரசியல் சூழ்நிலை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பொது பாடத்திட்டம்: கல்வியாளர்கள் கருத்து

பொது பாடத் திட்டம் அமலில் இருந்தாலும், சில அரசியல் சூழல் காரணமாக பாதிப்புக்குள்ளாகிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கலை அறிவியல் கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் புதிய பாட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது. அதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு நிபுணர்கள் குழுவை வைத்து வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்து 90% கல்வி நிறுவனங்கள் புதிய பொது பாடத்திட்டத்தினையே பின்பற்றி வருவதாக உயர் கல்வித்துறை கூறி இருந்தது. இருந்தபோதிலும் பொது பாடத்திட்டத்துக்கு தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதையடுத்து, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில் சென்னையில் இருந்து 22 கல்லூரிகள் உள்பட மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து சுமார் 90க்கும் மேற்பட்ட தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவர்களில் மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி முதல்வர்கள் உள்பட சில கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பொது பாடத் திட்டத்தை ஆதரித்து பேசினார்கள். ஆனால் கோவை, திருச்செங்கோடு, சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆதரிக்காமல், அடுக்கடுக்கான எதிர்ப்பு கருத்துகளையும், பொது பாடத்திட்டத்தில் உள்ள பிரச்னைகளையும் எடுத்துரைத்தனர்.

அதன்படி, மிக முக்கியமாக பொது பாடத்திட்டத்தால் என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தை பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்கள் முன்வைத்தனர். மேலும், பொது பாடத்திட்டத்துக்கு போதிய பாடவேளை நேரம் இல்லாதது, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கிரெடிட் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்னை, விருப்ப பாடங்களை எப்போது வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதற்கு எதிர்ப்பு, இளநிலை பாடத்திட்டத்தை விட முதுநிலை பாடத்திட்டத்தில் பல குளறுபடிகள் என பல்வேறு எதிர்ப்பு கருத்துகளை கூறினார்கள். குறிப்பாக, ஓரிரு கல்லூரிகளின் பிரதிநிதிகள் புதிய தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான கருத்துகளை எடுத்து கூறினார்கள். அதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ‘தேசிய கல்விக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதில் உள்ள நல்ல கருத்துகளை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் நம்முடைய கல்வி முறையான 10+2+3 என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று உறுதிபட தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தின் நிறைவில், தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள், பிரதிநிதிகளை பார்த்து பொது பாடத்திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கையை தூக்குங்கள் என்று கூறினார். கலந்துகொண்டவர்களில் பாதிக்குமேல் யாரும் கையை தூக்கவில்லை. அந்தவகையில், பார்க்கும்போது பொது பாடத்திட்டத்தை பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகள் ஆதரிக்காதது போலவே இருந்தது. அதிலும் சிலர் இதை ஒரு நாளில் பேசி சரிசெய்துவிட முடியாது. அடுத்தடுத்த ஆலோசனை நடத்தி தான் சரிசெய்ய முடியும் என்றும், எனவே இந்த ஆண்டு இதை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறினார்கள். எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டது:

புதிய அணுகுமுறை, காப்புரிமை பெறுவது, பெண் கல்வி உள்ளிட்ட அனைத்து வகையான பாடங்களும் இதில் உருவாக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் வெற்றியை நோக்கமாகக் கொண்டு, மாநில அரசின் கீழ் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் 1,500 கல்லூரிகளில் இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் உள்ள பாடங்கள் மாதிரிக்காக எடுக்கப்பட்டு, சிறந்த பாடங்களை உதாரணமாக வைத்து தரமான முறையில் இந்த மாற்றி அமைக்கப்பட்ட பாட திட்டம் வெற்றிவாய்ப்பை பெறும் வகையில், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் உள்ளது. இதற்காக இளங்கலை மற்றும் முதுகலை என தனித்தனியாக பிரித்து, 817க்கும் அதிகமான கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது.

மேலும் 450 மூத்த அனுபவமிக்க வல்லுநர்கள் கலந்துகொண்டனர். ஏற்கனவே இருந்த 91 பாடங்களை 130 பாடங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சிறிது மாற்றம் தேவை எனில் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் அதிகபட்சமாக 25% பாட திட்டங்களை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, உயர்கல்வி மன்ற அதிகாரிகள் கூறியதாவது: பொது பாடத்திட்டத்தின் மூலம் படித்து வெளியே செல்லும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள 18 தொழிற்துறை நிறுவனங்களை அழைத்து ஆலோசனை நடத்தி எவற்றையெல்லாம் படித்தால் அந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற முடியும் என்ற ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையில் தொழிற்துறை நிறுவனங்கள் கேட்டது அதிக வேலைத்திறன் கொண்ட இளைஞர்களைத்தான்.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிந்த மாணவர்களையும் கேட்டனர். ஆனால் அப்போது வரை அதுபோன்ற படிப்புகளைப் படித்த மாணவர்கள் நம்மிடம் இல்லை. அண்டை மாநிலங்களில் தான் இதுபோன்ற உயர்கல்வி பயின்ற மாணவர்கள் இருந்தனர். இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். எனவே அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த பாடத்திட்டம். மேலும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தேவைப்பட்டால் விருப்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கலாம் என சட்டதிட்டங்கள் கூறுகிறது. அதன் அடிப்படையில் தான் இந்த பாடங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு உயர்கல்வி மன்றமும், பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலையின் வல்லுநர் குழுவும் என அரசால் தயார் செய்யப்பட்ட குழுக்கள் இந்த பாடங்களை உருவாக்கியுள்ளன. இதுபோன்ற பாடங்கள் இதுவரை நடைமுறையில் இல்லை எனவும், எதிர்காலத்தினை எளிதாக சமாளிக்கக்கூடிய வகையில் உள்ளது எனவும் கல்வியாளர்களும், வல்லுநர்களும், பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர். இதுவரை பின்பற்றப்பட்ட பாடத் திட்டங்கள் அனைத்தும் இறந்த காலமாகவே அதாவது, முன்னேற்றம் பற்றி படிக்க இயலாத ஒன்றாகவே இருந்தது. ஆனால் இந்த பாடத் திட்டம் எதிர்காலத்தினை மாற்றி அமைக்ககூடியதாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

ஆளுநரின் செயல்கள் குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: பொது பாடத்திட்டம் உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்று. இதுவரை இல்லாத அளவிற்கு புதிய பாடங்கள் இதில் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுமே இந்த பொது பாடத் திட்டத்தினைத்தான் பின்பற்றுகின்றனர். தன்னாட்சி கல்லூரிகள் வேண்டுமனால் ஆளுநரின் சொல்லைக்கேட்டு செயல்படுவார்கள். சில அரசியல் சூழல் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைகிறது. எனவே மாணவர்களின் நலனை மனதில் கொண்டு ஆளுநர் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* ஆளுநர் எதிர்ப்பு
மாநில அரசின் ஒவ்வொரு கோரிக்கைக்கும் தடைபோடும் தமிழ்நாடு ஆளுநர் வழக்கம்போல இந்த பொது பாடதிட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்படி மாநில அரசின் இந்த புதிய பாடதிட்டத்தை எந்த கல்வி நிறுவனங்களும் பின்பற்ற வேண்டாம் என தெரிவித்தார். இதனால் மாணவர்கள் மத்தியில் பல குழப்பங்கள் எழுந்தன. ஏற்கனவே பொது பாடத்திட்டத்தில் படித்துவரும் மாணவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர். இந்த நேரத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆர்.என்.ரவி இதுபோன்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. மாநில அரசுக்கும், மாணவர்களுக்கும் கடும் மன உளைச்சலை உண்டாக்கியது.

*ஒரே தேர்வு, ஒரே தேர்வு முடிவு
பொது பாடத்திட்டம் முழுமையாக பின்பற்றப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள் ஒரே நாளில் தேர்வு நடத்துவது, ஒரே நாளில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது என உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இது அடுத்த கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலைக் கழகங்கள் வேறு வேறு மாதங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதால், மேற்படிப்பை சரியான நேரத்தில் தொடர முடியாமல் பல மாணவர்கள் திணறுகின்றனர். தற்போது இந்த பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு கல்லூரியில் இளநிலை முடித்த மாணவர்கள் வேறு கல்லூரியில் முதுநிலை பயில காலதாமதம் ஏற்படாது.

The post சில அரசியல் சூழ்நிலை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் பொது பாடத்திட்டம்: கல்வியாளர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags :
× RELATED கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை:...